அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் காலகாலம் மாந்தனவன் (மனிதனவன்) தம்தம் உலக வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்களைத் தீர்த்து கொள்ளவும் இன்னும் மேலோங்கி வாழவும் அல்லது இறைவனின் அருளைப் பெற்று இறை வழியில் செல்வதற்கும் தாம்தாம் அறிந்த வழிமுறைகளை எல்லாம் முயற்சி செய்து பார்க்கின்றான். அதுபோல் நிலையிலே ஒரு பிறவி என்னும் அந்தப் பிறவிக்குள்ளே வாழ்ந்து பூர்த்தி அடைவது என்பது மனிதப் பார்வையில் ஏற்புடையதாக இருந்தாலும் மகான்கள் பார்வையிலே பிறவி சுழற்சி என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இது போல் ஒரு மனிதனுக்கு நடப்பு பிறவியின் சில சம்பவங்கள் மட்டுமே நினைவில் இருப்பதால் அதற்கு முன்னும் பின்னும் யாது நிகழ்ந்தது அல்லது நிகழப் போகிறது என்பது அறியாமல் இருக்கிறான். இந்த அறியாமையின் உச்ச கட்டத்தில் தான் மனம் தடுமாறி வெறும் புலன் உணர்வுகளுக்கு ஆட்படுத்தி தன்னுடைய தேகம் சார்ந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் தந்து அதை நோக்கியே செல்வதால் தான் மனிதனுக்கு அவன் விரும்பாத நிகழ்வுகளெல்லாம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்து ஒரு மனிதன் சதா சர்வகாலம் இறைவன் அருளைப் பெறுவதற்கு உண்டான வழிமுறை என்ன என்ன என்று மகான்களும் ஞானிகளும் சிந்தித்து இறைவன் அருளாலே பல்வேறு விதமான போதனைகள் எல்லாம் அவ்வப்பொழுது மனித குலத்திற்கு அருளி இருக்கிறார்கள். ஆனாலும் கூட மனிதன் அவனுடைய மனநிலை பக்குவம் எல்லாவற்றையும் விட அவன் ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் நிலை இவற்றை பொறுத்தே தான் உயர்ந்த தெய்வீக விஷயங்களையும் மற்ற ஞான கருத்துக்களையும் அவனால் உள்வாங்கி ஏற்றுக் கொள்ள இயலும். உள்வாங்கி ஏற்றுக் கொண்டாலும் நடைமுறைப் படுத்துவது என்பது அவனுடைய பூர்வ புண்ணியத்தின் அளவைப் பொறுத்ததே. இந்த நிலையில் பல்வேறு விதமான இந்த உலக வாழ்வின் போராட்டங்களுக்கு இடையே யாங்கள் (சித்தர்கள்) இறை வழி செல்வதற்கு உண்டான நெறிமுறைகளை எல்லாம் கூறினால் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறைப் படுத்துவது என்பது கடினம் என்பது தான் பல மனிதர்களின் வாதமாகவும் அல்லது இவைகளையெல்லாம் செய்யாமலேயே எத்தனையோ மனிதர்கள் நன்றாகத்தானே வாழ்கிறார்கள். அப்படியிருக்க இதனை ஏன் நாங்கள் மட்டும் செய்ய வேண்டும் என்று சில மனிதர்களும் இப்படி பல்வேறு விதமான விவாதங்களில் இறங்குவதற்கு உண்டான சூழல் தான் இருந்து வருகிறது.