அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:
எம்மை நாடும் மாந்தர்களின் (மனிதர்களின்) பூர்வீக பாவங்கள் குறையும் பொருட்டு யாங்கள் (சித்தர்கள்) பல விதமான வழி முறைகளை கூறுகிறோம். இதுபோல் வழி முறைகளில் தர்மங்களும் தல யாத்திரைகளும் இல்லத்தில் அமைதியாக அமர்ந்து செய்யக்கூடிய பிரார்த்தனைகளும் யாகங்களும் ஆகும். இதுபோல் நிலையிலே எதையும் எத்தருணமும் நாங்கள் எக்காலத்தும் எஞ்சான்றும் கட்டாயப் படுத்துவதில்லை. ஆயினும் கூட இதனை மேற்கொண்டால் ஒரு மனிதனின் வாழ்வு மெல்ல மெல்ல பாவங்களில் இருந்து விடுபட்டு மேன்மையை நோக்கி செல்வதற்கு உண்டான வாய்ப்பு இருக்கும் என்பதை யாம் சுட்டி காட்டுகிறோம்.
அதுபோல் சித்தர்கள் வழியில் வருகின்ற மாந்தர்களுக்கு (மனிதர்களுக்கு) அல்லது யாங்கள் கூறுகின்ற நெறிமுறைகளை இந்த சுவடியைப் (ஜீவநாடி) பார்க்காமலேயே பூர்வ புண்ணியத்தின் காரணமாக இயல்பாகவே செயல்பட்டு கொண்டு இருக்கின்ற மனிதன் அதாவது மனிதநேயம் அன்பு கருணை பெருந்தன்மை சகிப்புத்தன்மை பொறுமை விடாமுயற்சி நேர்மையான உழைப்பு சுயநலமற்ற தன்மை பரோபகார சிந்தனை தளராத பக்தி தடைபடாத தர்மம் இவற்றையெல்லாம் எவனொருவன் தொடர்ந்து பின்பற்றுகிறானோ அவனுக்கு இறைவன் அருள் என்பது தொடர்ந்து தடையற்று வந்து கொண்டே இருப்பதோடு அவன் இறைவனை தேடி எங்கும் செல்ல வேண்டாம். அவன் எங்கிருந்தாலும் இறைவனின் அருள் ஆற்றல் அவனை வழிநடத்தும். இதுபோல் யாங்களும் (சித்தர்களும்) அவனை வழி நடத்துவோம். இதுபோல் நலமே நடக்கும் என்று இறைவன் அருளால் யாம் நல்லாசி கூறுகிறோம் ஆசிகள்.