அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
மனதை வலுவாக்குதலே இந்த உலகிலே முதல் பணியாக மனிதனுக்கு இருக்க வேண்டும். வேண்டுமே வெறும் புலன் இன்பமும் அல்லது அதனைத் தாண்டிய எந்த இன்பமும் ஒரு மனிதனுக்குத் தொடர்ந்து அமைந்தால் அதன் பிறகு சிறு கவலையும் சிறு பிரச்சினையும் அவனை சாய்த்து விடும். மாறாக மாறி மாறி துன்பங்களும் கஷ்டங்களும் ஒரு மனிதனை தாக்க தாக்க சில காலத்தில் இவற்றையே பயிற்சியாக இவன் மேற்கொள்ள மேற்கொள்ள மனம் உறுதி பெற்று ஒரு கட்டத்திலே மிகப் பெரிய துன்பம் வரும் போது கூட அவன் ஆடாது அசையாது புயலுக்கு நாணல் ஈடு கொடுப்பது போல ஈடு கொடுத்து விடுவான். எனவே மனதை செம்மைப் படுத்துவதே ஆன்மீகத்தின் அடிப்படையாகும். அடித்தளம் ஆகும். மனமது செம்மையாக செம்மையாக யாதொரு பிரச்சினையும் எவ்வித மனிதனுக்கும் இல்லையப்பா. எனவே நிதானம் தெளிவு தெளிந்த சிந்தனை எந்த நிலையிலும் பதட்டமில்லாது முடிவு எடுக்கும் திறன் ஒன்றின் அதிக பட்ச விளைவு என்ன? என்று முன் கூட்டியே சிந்தித்து அதற்கு ஏற்றாற்போல் மனதை தயாராக வைத்துக் கொள்வது எதுவும் நடக்கலாம் எந்த சூழ்நிலையும் வரலாம் என்று ஒரு எதிர்பார்ப்போடு வாழுகின்ற முறை. இது போன்று சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் ஒரு மனிதனுக்கு எக்காலத்திலும் பிரச்சினைகள் இல்லை.
பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையைத் தா என்று கேட்பது சிறப்பல்ல. கேட்டாலும் இறை அதை யாருக்கும் வழங்காது. ஏனென்றால் அவ்விதமான அமைப்பு யாருக்கும் இல்லை. தெளிந்த ஞானியும் அல்லது ஞானம் அற்ற மனிதனுக்கும்தான் பிரச்சினை இல்லாதது போல் ஒரு வாழ்க்கை இருக்கும். காரணம் தெளியாத மனிதனுக்கு எதுவும் புரிவதில்லை. தெளிந்த ஞானியோ அனைத்திலுமே தேறி விட்டதால் அவனுக்கு எதுவும் பிரச்சினையாத் தோன்றாது. இந்தக் கருத்தை உன்னிப்பாக கவனித்து மனதிலே ஊன்றிக் கொண்டு விட்டால் மனிதனுக்கு எக்காலத்திலும் எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் துன்பம் என்பது இல்லை. ஒரு மனிதன் உடல் எடுத்ததற்கு மனித முயற்சி என்று எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதுதான் நடக்கப் போகிறதே என்று எந்த மனிதனையும் நாம் வாளாய் (சும்மா) இருக்க சொல்லவில்லை. சோம்பலாக இருக்க சொல்லவில்லை. அவன் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் விளைவு எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மனம்தான் ஒரு மனிதனுக்கு எக்காலமும் நன்மையைத் தரும். இல்லையென்றால் ஒன்று மாற்றி ஒன்று அவன் மன விருப்பத்திற்கு மாறாக நடக்கும் போது மிகவும் விரக்தியுற்று சோர்வுற்று தன்னிலையை மறந்து மேலும் சிக்கலில் தானாகச் சென்று மாட்டிக் கொள்வான். எனவே ஒரு மனிதன் பதட்டம் குழப்பம் இல்லாமல் எதனையும் நிதானமாக மூன்றாவது பார்வை கொண்டு ஒவ்வொரு பிரச்சினையையும் பார்க்க பார்க்க அவனுக்கு அனைத்துமே தெளிவாகி விடும். அனைத்துமே சிக்கல் அற்றதாகி விடும். இந்தக் கருத்தை மனதில் பதியவைத்தால் என்றும் எக்காலமும் நலமாகும்.
எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் இன்னும் பக்குவப்பட வேண்டும். இந்தக் கருத்துக்களை உள் வாங்கி வாங்கி அவரவர்கள் சுய ஆய்வு செய்து சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது என்று ஆய்ந்து ஆய்ந்து தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனம் செம்மையாக வேண்டும். மனம் உயர வேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம் மணக்கின்ற மனமாக வேண்டும். அப்பேற்ப்பட்ட மனதிலேதான் இறை வந்து அமரும்.