அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
ஜீவ அருள் ஓலையை (ஜீவநாடி) ஒரு மனிதன் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஆய்ந்தாலும் நாங்கள் தர்மத்திலேயே நிற்பது பிறருக்கு மனத் தளர்வையும் விரக்தியையும் ஏற்படுத்தலாம். நாங்களே ஏராளமான குழப்பங்களோடும் பல்வேறு விதமான வேதனையோடும் இங்கு வந்தால் தர்மம் செய் தர்மம் செய் என்றால் அதற்குரிய சூழல் வேண்டாமா? ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற எங்களால் எங்கனம் தர்மம் செய்ய இயலும்? என்று கூட விமர்சனம் செய்கிறார்கள். சரியான கோணத்திலே நாங்கள் கூறுவதை புரிந்து கொண்டால் இந்தக் குழப்பத்திற்கு அவசியமே ஏற்படாது. ஒரு மனிதன் நேர்மையாக உழைத்து அவன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது அடிப்படை கடமை. அதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. ஆனால் அதே தருணம் ஒவ்வொரு மனிதனும் தன் சக்திக்கு ஏற்ப தன்னுடைய வருமானத்திலே ஒரு பகுதியை தாராளமாக ஏழை எளியவர்களுக்கும் ஆலயங்களுக்கும் உதவும் வகையில் செலவிட்டால் அவனின் பூர்வீக பூர்வீக பூர்வீக பாவங்களும் சந்ததி வழியாக கடத்தப்படும் பாவங்களும் தோஷங்களும் குறையும்.
எதிர்காலத்தில் விதி வழியாக வர இருக்கின்ற கடுமையான சூழல்களும் மெல்ல மெல்ல மாறும். ஒரு வேளை அதிக பொருளாதாரம் ஒரு மனிதனிடம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். வருகின்ற வருமானம் வயிற்றுக் கூட போதவில்லை என்றால் உடலால் பிறருக்கு உழைத்து நன்மையை செய்யலாம். உழவாரப் பணிகள் செய்து நல்லவிதமான புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளலாம். வார்த்தைகளால் இதம் பேசி பிறருக்கு நிம்மதியை ஏற்படுத்தலாம். எதுவும் இயலாவிட்டால் நன்மை செய்யா விட்டாலும் பாதகமில்லை. பிறரை வேதனைக்கு உள்ளாக்காமலும் தீமையான எண்ணங்களை எண்ணாமலும் வாழலாம்.
Anaithum Arumai 326 Articlesum Padithuten