அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
பொருளாதாரம் சார்ந்து மட்டும்தான் தர்மம் என்பதல்ல. ஓரளவு இறைவன் அருளால் நல்ல பொருளாதார நிலையில் உள்ள மனிதர்கள் அடுத்தடுத்து ருணம் (கடன்) பெற்றாவது தன் வாழ்க்கை வசதியை பெருக்கிக் கொள்ள எண்ணுகிறான். அவனுடைய விதியானது குறுக்கே நின்று கொண்டு அவன் பட்ட பாட்டுக்கெல்லாம் சரியான பலன் இல்லாமல் போய் விடுகிறது. ருணம் (கடன்) பெற்று போராடினாலும் அந்த கல்வியானது அவனுக்கு வெற்றியைத் தர வேண்டும் என்ற விதி இருந்தால்தான் விளைவுகள் சுபமாக இருக்கும். இல்லை என்றால் என்னவாகும்? அந்தக் காலமும் பட்ட பாடும் பெற்ற ருணமும் (கடனும்) வீணாகும். எனவே ஒவ்வொரு மனிதனின் பின்னால் எத்தனையோ பாவ வினைகள் மறைந்து செயலாற்றுகின்றன. இந்த வினையை எல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டிப் போட வேண்டும் என்றால் பகவானின் திருவடியை சதாசர்வ காலமும் எண்ணுவதோடு எந்தவிதமான குழப்பமும் இல்லாமலும் சந்தேகமும் இல்லாமலும் அள்ளி அள்ளி தந்து கொண்டே போகின்ற தர்மம் ஒன்றுதான் எளிய மார்க்கமாகும். எனவே நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல தர்மம் செய் தர்மம் செய் தர்மம் செய் என்று ஒரு மனிதனின் மனதிலே மீண்டும் மீண்டும் போதிக்க போதிக்க இயல்பாகவே தர்ம குணம் நிரம்பிய மனிதன் மேலும் தர்மவானாக மாறுகிறான். ஓரளவு தர்ம சிந்தனையுள்ள மனிதன் பல மடங்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வருகிறான். தர்மம் செய்யும் நினைவேயில்லாத மனிதன் ஓரளவு செய்யலாம் என்ற நிலைக்கு வருகிறான். இந்த நிலை உயர உயர ஒரு மனிதனின் உச்ச நிலையிலே இனி என்னுடையது என்று ஏதுமில்லை. எல்லாம் இறைவன் தந்தது. எனவே என் கண்ணில் படுகின்ற மனிதர்களுக்கு என்ன தேவையோ பிற உயிர்களுக்கு என்ன உதவி செய்ய என்னால் முடியுமோ என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உதட்டால் முடிந்த உதவியை செய்கிறேன். உள்ளத்தால் முடிந்த பிரார்த்தனையை செய்கிறேன். யான் பெற்ற பொருளால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் பிறருக்காக அர்ப்பணம் செய்கின்ற குணம் வந்து விட்டால் இறைவன் அருள் அவனிடம் பரிபூரணமாக பரிமளிக்கத் துவங்கும். இதுபோல் நிலையிலே பிறருடைய பிரச்சினைகளை நீக்க ஒரு மனிதன் முயற்சி செய்தாலே அவனுடைய பிரச்சினைகளை தீர்க்க இறைவன் முன்வந்து விடுவான். எனவேதான் நாங்கள் (சித்தர்கள்) இதனை அடிக்கடி வலியுறுத்திக் கூறுகிறோம்.