ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 330

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவன் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் கால காலம் எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் வாழ்வியல் நிலை குறித்துக் கூறுங்கால் வினைப் பயன் தொடர்பான விழிப்புணர்வு பெற வேண்டும் என்றே கூறிக் கொண்டிருக்கிறோம். ஒரு செயல் அந்த செயலை செய்யும் போது கிடைக்கக் கூடிய ஆதாயம் செய்து முடித்த பிறகு கிடைக்கக் கூடிய ஆதாயம் சில காலம் கழித்து கிடைக்கக் கூடிய ஆதாயம் இந்த செயலை செய்வதால் கிடைக்கின்ற ஆதாயம் எத்தனை விழுக்காடு? ஆதாயத்திற்கு எதிரான பாதகம் எத்தனை விழுக்காடு? செயலை செய்பவனுக்கு ஆதாயம். மற்றவர்களுக்கு பாதகம். இது போன்ற நிலைகளை சீர் தூக்கிப் பார்த்து பலருக்கும் பாதகத்தைத் தரும் ஆனால் செய்கின்ற ஒருவனுக்கு மட்டும்தான் ஆதாயத்தை தரும் என்றால் அந்த செயலை செய்யாமல் மனக் கட்டுப்பாட்டோடு இருப்பதே அவசியம். இன்னொன்று என் வரையில் எல்லாம் நன்மையோ தீமையோ நான் தான் நுகரப் போகிறேன். பிறரை இது எங்ஙனம் பாதிக்கக் கூடும்? என்று எண்ணி சிலர் சில செய்கைகளை செய்கிறார்கள் உண்மைதான்.

ஒருவன் மதி மயக்கும் பானம் பருகுவதோ வேறு அசுர பண்டங்களை ஏற்பதோ அவன் உள்ளத்தை உடலை அவன் நிலையை அவன் வாழ்வை பாதிக்கலாம். ஆனால் அவனையும் அறியாமல் பல பலகீனமான மனிதர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறான். அதாவது ஏதாவது ஒரு பூர்வ புண்ணியத்தால் ஒரு மனிதன் ஏதாவது ஒரு உயர்ந்த பதவியில் பொருளாதார நிலையில் உயர்ந்து விடுகிறான். ஆனால் தகாத பழக்கங்கள் அனைத்தும் அவனிடம் இருக்கிறது. அதை பார்க்கின்ற மிக மிக மிக மிக சாதாரணமான எளிமையான மனிதன் என்ன எண்ணுகிறான்? அவனின் பூர்வ புண்ணியம் அவனுக்குத் தெரிவதில்லை. அது தொடர்பான உழைப்பு தெரிவதில்லை. ஆனால் வெற்றி பெற்று இருக்கிறான். புகழ் இருக்கிறது. தனம் இருக்கிறது. பலரும் அவனை நாடுகிறார்கள். ஆனால் அவனிடம் மதி மயக்கும் பானம் போன்ற தீய பழக்க வழக்கங்கள் இருக்கிறது. எனவே இத்தனை விவரம் அறிந்தவன் உலகியல் ரீதியாக உயர் பதவியில் இருப்பவன் பெரும் புகழும் கொண்டவன் பொருளாதார நிலையில் மிக மிக உயர்ந்தவன் அவனே தவறு செய்யும் பொழுது நான் செய்தால் என்ன? என்ற ஒரு தவறான ஒப்பீடு சராசரி மனிதனுக்கு வந்து விட பிறரோடு தவறான நிலையில் ஒப்பிட்டு ஒப்பிட்டு மனிதன் தன்னுடைய வாழ்நாளை வீண் நாள் ஆக்குகிறான். எனவே நாங்கள் அடிக்கடி கூறுவது என்னவென்றால் இறைவனே தவறு செய்யத் தாண்டினாலும் விதியே தவறான வழிக்கு அழைத்துச் சென்றாலும் போராடி போராடி ஒரு மனிதன் இறை வழியில் வந்து தன்னுடைய மனதை வலுவாக்கி உள்ளத்தை உறுதியாக்கி எண்ணங்களை சீராக்கி மனப்பாங்கினை வைரம் போல் உறுதியாக்கி தவறான பழக்கங்களுக்கு எதிராகவே தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.