ஐயனே தச மகா வித்யா யாகம் என்ன காரணத்திற்காக செய்யப்படுகிறது?
இறைவனின் கருணையை கொண்டு ஒரு மனிதன் பல ஜென்மங்கள் பல பிறவிகளில் பிறந்து பிறந்து பாவ புண்ணியங்களை செய்தே வாழ்கிறான். இதில் பெரும்பாலும் அதிக விழுக்காடு பாவங்களை பெறுகிறான் செய்கிறான். அதன் மூலம் சாபங்களை பெறுகிறான். புண்ணியங்களை சிறிய அளவில் தான் செய்கிறான். இந்தப்பாவங்களின் விளைவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். பிறவிகள் தோறும் பாவங்களின் விளைவுகளும் புண்ணியங்களின் விளைவுகளும் வரும். ஆனால் மனிதனுக்கு புண்ணியங்களின் விளைவாக கிடைக்கக் கூடிய நன்மைகள் அத்தனை எளிதாக மனதிலே திருப்தியை தராது. உதாரணமாக பிறக்கும் போதே உடல் உறுப்புகள் எந்த பழுதும் இன்றி பிறந்தால் அந்த குழந்தை அதை ஆச்சரியமாக பார்க்காது. அதே குழந்தை வளர்ந்த பிறகு இளைஞனான பிறகு சில மாதங்கள் உடலில் உள்ள ஏதோ ஒரு கையோ காலோ இயங்காமல் இருந்து பிறகு இயங்கினால் அவன் சந்தோசப்படுவான். இதைப் போல இயல்பாகவே ஒரு மனிதனுக்கு தாய் தந்தையர் இருக்கிறார்கள். ஓரளவு மூன்று வேளை அன்னம் கிடைக்கிறது. மானத்தை காக்க ஆடை கிடைக்கிறது. கல்வி வசதி கிடைக்கிறது. மழைக்கும் வெயிலுக்கும் ஒரு இல்லம் இருக்கிறது என்றால் இவைகள் எல்லாம் பெரிதாக தெரியாது. இவைகளே இல்லாத மனிதர்களை பார்க்கும் போது அடடா கடவுள் இறைவன் நம்மை நன்றாக வைத்திருக்கிறார் என கடவுளுக்கும் இறைவனுக்கும் நன்றி கூற வேண்டும். ஆனால் அப்படி மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
ஒரு மனிதனுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது அவனுக்கு நிறைவை திருப்தியை சந்தோசத்தை தருவதில்லை. எது கொடுக்கப் படவில்லையோ அல்லது எது அவன் எதிர்கால லட்சியமாக அவன் கொண்டிருக்கிறானோ அது அடையும் வரை அவன் மனம் நிம்மதி அடையாமல் சஞ்சலத்தோடு வாழ்கிறது. அல்லது இயல்பாகவே இருக்கக் கூடிய ஒன்று அவனுக்கு இல்லாமல் போய் விடுமோ என்கிற அச்சம் வரும் பொழுதும் அவன் நிம்மதியை இழக்கிறான். ஒன்றே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இறைவன் அருளை தக்க வைத்துக் கொள்வது ஒன்று தான் நிரந்தர செல்வம் நிரந்தர பதவி அது ஒன்று தான் நிரந்தரம் ஏனைய உறவுகளோ நட்புகளோ பதவிகளோ வேறு எந்த விஷயமும் சிறப்பல்ல. இந்த ஞானம் கைவர வேண்டுமென்றால் இது புரிந்துக் கொள்வது மட்டுமல்ல புரிந்து கொண்டு அறிந்துகொண்டு தெரிந்து கொண்டு தன் மனைதிலே அது குறித்து சிந்தித்து சிந்தித்து பற்றற்ற நிலை ஆசையற்ற நிலை சினமற்ற நிலை எந்த தீய குணங்களும் இல்லாத நிலையிலே மனதை அமைதியாக வைத்து எத்தனை கொடுமையான சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்தாலும் இறைவா சிறு வயது முதல் உன்னை வணங்கி வருகிறேனே நான் கடினப்பட்டு ஈட்டிய தனத்தை எல்லாம் ஏழை எளியோர்களுக்கு வாரி வாரி வழங்கினேனே. எனக்கு இப்படி ஒரு துன்பத்தை தரலாமா? என்னை கைவிட்டாயே என்று ஒருவன் ஏக்கத்துடன் கூறினாலும் கூட அவன் செய்த புண்ணியத்தின் பலன் குறைந்து விடுகிறது.
இறைவா ஏதோ சில நற்காரியங்களை செய்ய என்னை கருவியாக தேர்ந்தெடுத்திருக்கிறாய் தொடர்ந்து செய்வதற்கு வாய்ப்பை கொடு. ஆனால் அந்த நல்ல காரியம் செய்கிறேன் என்பதற்காக எனக்கு ஒரு துன்பம் கூட வரக்கூடாது என்று நான் எதிர்பார்க்கவில்லை. அது வேறு நிலை. நீ துன்பம் தருகிறாய் என்றாலே என்னை சுத்தி படுத்துகிறாய் என்பது பொருள். தீயவனுக்கு வருகின்ற துன்பம் அவன் திருந்த வேண்டுமென்றும் மனித மொழியிலே கூறுவதென்றால் தண்டனை என்று வைத்துக் கொள்ளலாம் நல்லவனுக்கு வருகின்ற துன்பம் ஒரு ஆடையிலே போகாத கரையை அழுக்கை கடினப்பட்டு ஒரு மனிதன் நீக்குவது போல அந்த நல்லவர்களிடம் இருக்கக் கூடிய கொஞ்ச நஞ்ச பாவங்களையும் சாபங்களையும் நீக்கிக் கொள்ள இறைவன் தருவது. எனவே அந்த வகையில் சிந்தித்து நான் உன்னுடைய அருளானையால் சில நல்ல காரியங்களை செய்வதற்கு எனக்கு வாய்ப்புகள் எப்பொழுதும் தந்து கொண்டே இருக்கிறாய். தொடர்ந்து தந்து கொண்டே இரு. ஆனால் அதற்காக துன்பங்களே வரக்கூடாது என்று நான் வேண்டவில்லை. துன்பங்கள் வரட்டும். ஆனால் நான் மனம் தளர்ந்து மனம் சோர்ந்து உன்னை விட்டு விலகி விடக்கூடாது. நற்காரியங்களை நிறுத்தி விடக்கூடாது. அந்த திடமானதை கொடு என வேண்டி கொள்ள வேண்டும். அந்த பக்குவம் அத்தனை எளிதாக வந்து விடாது. இது பல பிறவிகளின் பாவங்களும் சாபங்களும் குறைந்தால் தான் வரும். இவற்றை தர்மத்தின் மூலம் குறைக்கலாம். ஏமாற்றங்களின் மூலம் சில பாவங்கள் குறையும். நம்பிக்கை துரோகத்தால் சில பாவங்கள் குறையும். உடல் நோயால் பல பாவங்கள் குறையும். வழக்கு போன்ற விஷயங்களால் பல பாவங்களும் சாபங்களும் குறையும். உடலிலே எல்லாம் சரியாக இருந்தும் என்ன நோய் என்று பிடிபடாமல் மனம் வேதனை அடைந்து அடைந்து அதனால் பாவங்கள் குறையும். எந்தத் தவறும் செய்யாமல் பலர் முன்னால் அவமானப்படுவதும் ஏளனப் படுவதுமாக இருந்து அதன் மூலம் பாவங்கள் குறையும். இப்படி பல்வேறு இந்த உலகில் நடக்கின்ற செயலால் பாவங்கள் குறையும்.
அதைப் போல நற்காரியங்கள் செய்வதன் மூலம் பாவங்களும் குறையும் புதிதாக புண்ணியங்களும் சேரும். அந்த நற்காரியங்களில் தனம் இருப்பவர்கள் பொருள் இருப்பவர்கள் நியாயமான உதவிகளை அள்ளி அள்ளி தருவது கணக்கு பார்க்காமல் தருவது. இவ்வளவு செய்திருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் தொடர்ந்து செய்வது. என்னைப் போல் யார் தர்மம் செய்வார் என்று பலர் முன்னால் தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் அமைதியாக செய்வது. இவைகள் எல்லாம் புண்ணியங்களை சேர்க்கின்ற வழிகளாகும். அதைப் போல் பூஜைகள் அபிஷேகங்கள் யாகங்கள் அனைத்துமே பாவங்களை குறைப்பதோடு புண்ணியங்களையும் சேர்க்கும். இந்த வகையிலே பலர் முன்னால் படுகின்ற அவமானங்கள் தொழிலில் ஏற்படும் நஷ்டங்கள் இவைகளேல்லாம் பாவங்களை குறைக்கின்ற வழியாக இருக்கும். பாவங்களை குறைக்கின்ற வழி என்பது வாழ்க்கையில் இயல்பாக நடக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நோய் மூலம் படுகின்ற வேதனை தன விரயம் இது பாவங்களின் காரணமாக வரக் கூடியது. அதை போல் உடனிருந்து நம்பிக்கை துரோகம் செய்கின்ற மனிதர்களால் வருகின்ற துன்பம் பாவங்களை குறைக்கவும் சாபங்களை குறைக்கவும் வருகிறது. இது போன்ற உலகியல் சம்பவங்கள் அனைத்துமே பாவங்களை சாபங்களை குறைக்கும். எப்போது குறைக்கும் அதுபோன்ற சம்பவம் நடக்கும் பொழுது பாதிக்கப்பட்ட மனிதன் சினம் கொண்டு எழுந்து பழிக்குப் பழி வாங்காமல் அவனை ஏதும் சொல்லாமல் இறைவா என்றோ செய்த பாவம் நான் பெற்ற சாபம் இவன் மூலம் நேராகிறது போலும். சரி நான் பொறுமையாக இருக்க அருள்புரி என்று வேண்டிக் கொண்டு அவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகின்ற பக்குவம் வரும் பொழுது கட்டாயம் பாவங்கள் குறையும். இல்லையென்றால் நான் மிகச் சரியாக நடந்து கொண்டும் நீ ஏனப்பா தவறாக நடந்து கொள்கிறாய் என்று சரிக்குச்சரி அவனோடு சண்டையிட்டால் பாவங்கள் குறைவதற்கு பதிலாக பாவங்கள் சேர்ந்து விடும். இது போன்ற பல்வேறு பாவங்கள் குறைய வேண்டும். அதே நேரம் மனம் உறுதியடைந்து புண்ணியங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெறுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் இந்த யாகங்கள். பெரும் பொருட் செலவில் அக்னி வார்த்து நிறைய பொருட்களை அதில் இட்டால்தான் இறைவன் அருள் புரிவாரா என்றால் கட்டாயமில்லை. அத்தனை பொருட் செலவு செய்தும் அக்னி வார்த்து பொருட்களை இட்டும் மனம் தூய்மை இல்லாமல் அதில் ஒருவன் ஆணவத்தோடு கலந்து கொண்டால் அவனுக்கு எந்த பலனும் வராது. அதைப் போல செய்து வைக்கக் கூடிய மனிதனும் பெருந்தன்மையோடும் சாத்வீக குணத்தோடும் தகாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாமல் சாத்வீக வார்த்தைகளையும் அன்பு பொழியும் வார்த்தைகளையும் பயன்படுத்தி அமைதியாக எந்த விதமான சினமும் கொள்ளாமல் அவனும் எரிச்சலடையாமல் அடுத்தவர்களுக்கு எரிச்சலை ஊட்டாமல் நடந்து கொள்ளும் போது அவனுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. ஒன்று பூஜை செய்து அதன் மூலம் ஒரு புண்ணியம் அவனுக்கு கிடைக்கிறது. இவன் யாருக்கு பூஜை செய்து வைக்கிறானோ அவனுக்கு பாவம் குறைவதால் ஒருவனுக்கு பாவம் குறைவதற்கு உண்டான வழியை காட்டியதற்கு உண்டான புண்ணியம் அவனுக்கு வருகிறது. மூன்றாவது உலகியல் ரீதியாக சிறு ஊதியமும் கிடைக்கிறது. எனவேதான் இது அனைத்தும் இறைவன் கருவியாக வைத்து நம்மையெல்லாம் இயக்குகிறார் என்ற எண்ணத்தோடு தன்முனைப்பு இல்லாமல் செய்யும்போது பல ஜென்மத்து சாபங்களும் பாவங்களும் குறையும். இந்த சாபங்கள் தான் உதாரணமாக ஒரு மனிதன் ஏதோ ஒரு பிறவியில் யாருக்கோ கொடுமையான தீங்கு செய்து அந்த தீங்கால் அவன் பாதிக்கப்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்படும் பொழுது அவனால் அப்பொழுது எதிர்த்து ஏதும் செய்ய முடியாத ஒரு வலிமையற்ற நிலையில் இருக்கிறான். ஆனால் மனதிற்குள் பொங்குகிறான். வேதனைப்படுகிறான். இந்த வலிய மனிதனின் பதவி செல்வம் அதிகாரம் இவற்றுக்கு முன்னால் அடிபணிந்து இவன் செய்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறதே இறைவா. நீ அவனை கேட்க மாட்டாயா? நான் என்ன பாவம் செய்தேன்? என்று மனதிற்குள் மருகி மருகி மருகி மருகி மிகவும் வேதனைப்பட்டு அந்த ஜென்மம் முழுவதும் அப்படியே வாழ்ந்து இறந்து விடுகிறான் அல்லவா. ஏதோ ஒரு பாவம்தான் அவ்வாறு அவனுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த காரணமாக இருந்தாலும் அதை செய்த மனிதனுக்கு இவன் வேதனைப்பட வேதனைப்பட அது சாபமாக மாறி விடுகிறது. புனித ஆத்மாக்கள் புண்ணிய ஆத்மாக்கள் தவசீலர்கள் சபித்தால் உடனே பலிதமாகும். இதுப் போன்ற சராசரி ஆத்மாக்கள் மனதிற்குள் வேதனைப்பட வேதனைப்பட அது ஒரு ஜென்மமோ இரண்டு ஜென்மமோ தாண்டி பலவிதமான துன்பங்களாக வரும். இந்த சாபங்களை எல்லாம் பலவிதமான தர்மங்களின் மூலமும் தியாக வாழ்க்கையின் மூலமாகவும் பொறுமையின் மூலமாகவும் சகிப்புத் தன்மையின் மூலமாகவும் எரித்து விடலாம். அதில் ஒன்றுதான் இந்த யாகங்கள்.
இந்த யாகங்கள் மூலம் சாபங்களை குறைத்து விடலாம் எரித்து விடலாம். அது மட்டுமல்ல இப்படி அவன் ஏங்கி ஏங்கி அந்தப் பிறவியை விட்டு விடுகிறான் அல்லவா. மீண்டும் ஏதாவது ஒரு பிறவியிலேயே இவனை பழிவாங்க வேண்டும் என்று அவன் பிறக்கிறான். அல்லது அவனால் பிறவி எடுக்க முடியாத நிலையில் அவனுடைய வம்சா வழியினருக்கு ஏதாவது வகையிலே உள்ளுணர்வாக அதனை அந்த சிந்தனையை தூண்டி விட்டு அவனை இந்து ஜென்மாவில் அந்த ஜென்மத்தில் அவனுக்கு பாதிப்பு ஏற்படுத்தியவனை பார்த்து ஏதாவது இவனுக்கு தீங்கு செய் என்பது போல் அவன் செய்ய அதனால் தான் முன்பின் தெரியாத சிலர் நம்மை எதிரியாகவே கருதுகிறார்கள். இதுப் போன்ற ஒரு வார்த்தை படுத்த முடியாத வேதனைகளை பாவ வினைகளை குறைப்பதற்கு யாகங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சராசரி மனிதர்களின் பொறாமை பார்வை அது குறையவும் இந்த யாகங்கள் பெரும் பங்களிப்பை நல்குவதாகும். அதைதாண்டி முன்பே கூறியது போல ஒரு பொருளாதார சுழற்சிக்காகவும் யாங்கள் கூறுகின்றோம்.