அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
இப்பொழுது அடுத்ததாக எதிர்காலத்தைக் கூறு என்று பலரும் ஆசைப்பட்டு நாங்களும் ஆவேசம் கொண்டது போல இப்படிதான் கேட்கிறானே? கூறி விட்டுப் போவோம் என்று கூறினால் அடுத்ததாக மனக்கிலேசமும் சோகமும்தான் கொள்கிறார்கள். எனவே ஒரு மனிதன் வருகிறான். என் பெண்ணிற்குத் திருமணம் நடக்கவில்லை என்று கேட்கிறான். நாங்கள் பார்க்கிறோம் திருமணம் நடந்தாலும் சிறப்பான வாழ்க்கை இல்லை எனும்போது என்ன கூறுவோம்? சில மாதங்கள் கழித்து வா என்றோ சில பரிகாரங்களை செய்து விட்டு வா என்றோ கூறுவோம். ஏன்? அப்படியாவது அந்தப் பாவங்கள் குறையட்டுமே? என்றுதான். ஆனால் அவன் என்ன எண்ணுகிறான் அறியாமையால்? எங்கெங்கோ சென்று ஜாதகத்தை ஆய்ந்தோம். திருமண காலம் வந்துவிட்டது. திருமணத்தை முடிக்கலாம் என்று கூறுகிறார்கள். அகவையும் அதிகமாகி விட்டது. இங்கு என்னடா என்றால் சில மாதங்கள் ஏன்? சில வருடங்கள் ஆகட்டும் என்று கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாது என்று சென்று விடுகிறான். பிறகு திருமணம் செய்கிறான். திருமணம் வழக்கம்போல் தோல்வியில் முடிகிறது. மீண்டும் வந்து எம்முன்னே அமர்கிறான். இவற்றையெல்லாம் வெளிப்படையாகக் கூறினால் என்ன நடக்கும்? வெறும் எதிர் மறையான எண்ணங்களையும் கருத்துக்களையும் நாங்கள் கூறுவதால் என்ன பலன்? அப்படிக் கூறி கூறி அந்த விதியை ஏன்? எமது வாக்கால் உறுதிப்படுத்த வேண்டும்? என்றுதான் பரிகாரங்களைக் கூறிக் கொண்டு இருக்கிறோம். எனவே இங்கு வருகின்ற 100 க்கு 99 விழுக்காடு மனிதர்களுக்கு அத்தனை சாதகமான விதி அம்சம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு இறைவன் அருளால் நாங்கள் கூறுகின்ற பரிகாரங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு சென்றால் எதிர்காலம் அனைவருக்குமே சுபீக்ஷமாக இருக்கும். எனவே வாக்கு இல்லை எனும் பொழுதே இந்த இதழ் ஓதும் மூடனுக்கு ஏற்கனவே சில கட்டளைகளை இட்டு இருக்கிறோம். எடுத்த எடுப்பிலேயே வாக்கை உரைக்கலாம் என்றால் போதும். உடனடியாக அலைபேசியில் பேசுகின்ற அனைவரையும் அழைத்து வரலாம் வரலாம் என்று அனைவரையுமே வரவேற்று விடுவான். அப்படி வருகின்ற மனிதர்கள் பலருக்கு ஆர்வம் இருக்கும் அளவிற்கு பக்குவம் இராது. பக்குவமின்மையால் வந்து விதவிதமான மனக்கிலேசமான வார்த்தைகளைக் கூறும்பொழுது தேவையில்லாத மன அழுத்தம் இங்கு அனைவருக்கும் ஏற்படும். எனவேதான் கூறி இருக்கிறோம் வருகின்ற மனிதனின் விதியை அனுசரித்து இறைவனின் கட்டளையையும் அனுசரித்துதான் நாங்கள் வாக்கைக் கூறுவோம் என்று. இது போன்ற இந்த ஓலையில் கூறப்படுகின்ற விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை. நம்பக்கூடியதாக இல்லை என்பது கூட ஒரு மனிதனின் முழு சுதந்திரம். அவற்றில் குறுக்கிட இங்கு உள்ளவர்களுக்கோ இந்த சுவடியை நம்புபவர்களுக்கோ ஏன்? இந்த இதழை ஒதுபவனுக்கோ கூட உரிமையில்லை.
நம்புவது எப்படி ஒருவனின் உரிமையோ நம்பாததும் அவனின் உரிமை. இரண்டிலும் நாம் சந்தோஷமும் கொள்ளத் தேவையில்லை. துக்கமும் கொள்ளத் தேவையில்லை. இது போல் நிலையிலே மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் அறம் சத்யம் பரிபூரண சரணாகதி தத்துவம் இவற்றைக் கடைபிடித்தால் கடுமையான விதி மெல்ல மெல்ல மாறத் துவங்கும். எடுத்த எடுப்பிலேயே மாற்றத்தை எதிர்பார்த்தால் மாற்றம் வராது. ஏமாற்றம்தான் வரும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் இறை வழியில் அற வழியில் சத்திய வழியில் நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி நல்லாசி கூறுகிறோம் ஆசிகள்.