ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 336

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

யாம் அடிக்கடி கூறுவது போல ஒரு மகான்களுக்கோ ஞானிகளுக்கோ இறைவனுக்கோ உடன்பாடில்லாத ஒரு பழக்கம் வேறு வகையில் கூறப் போனால் தீய தவறான பழக்கம் முதலில் புன்னகை பூக்கின்ற புதிய மனிதனைப்போல் உள்ளே வருகிறது. பிறகு ஒரு சிறு நட்பைப் போல் வளருகிறது. பிறகு ஒரு சுற்றுலாப் பயணி போல் அவ்வப்போது வந்து போகிறது. பிறகு உறவு போல் எட்டிப் பார்க்கிறது. பிறகு நெருங்கிய உறவுபோல் அடிக்கடி வந்து போகிறது. பிறகு கட்டிய மனைவி போல கைபிடித்த கணவன் போல தாய் தந்தை போல பெற்ற பிள்ளை போல ஒரு குடும்பத்தில் நிரந்தர உறுப்பினர் ஆகிவிடுகிறது ஒரு தீய பழக்கம். அதில் இருந்து வெளிவர முடியாமல் ஒரு மனிதன் அதைத் தவறு என்று ஒத்துக் கொள்ளாமல் அந்தத் தவறை நான் ஏன் செய்ய நேரிடுகிறது என்று வாத பிரதிவாதங்களில் மட்டுமே ஈடுபடுகிறான். தவறு என்றால் தவறுதான். தீமை என்றால் தீமைதான். விலக்க வேண்டியதை விலக்க வேண்டியதுதான். அது குறித்து விளக்க வேண்டியதில்லை. எனவே முற்றிலும் விலக்க வேண்டியதை நியாய அநியாயம் வாத பிரதிவாதம் செய்து விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கருத்தை ஒரு மனிதன் சரியாக மனதிலே பதிய வைத்துக் கொண்டால் வாழ்வு மிக நன்றாக செல்லும்.

பொதுவாக மனிதர்கள் தாங்கள் நல்லவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி எண்ணுவதை நாங்கள் குற்றம் ஒன்றும் கூறவில்லை. மனிதர்கள் என்ன எண்ணுகிறார்கள் நாங்கள் என்ன கொலைக் குற்றமா புரிந்து விட்டோம் உயிரையா எடுத்து விட்டோம் அல்லது பிறர் சொத்தை எல்லாம் அபகரித்து விட்டோமா அல்லது ஒரு ஊரையே வாழ விடாமல் செய்து விட்டோமா என்ன குற்றம் செய்து விட்டோம்? குற்றம் என்பது மேற்கூறிய விஷயங்கள் மட்டும் அல்ல ஒரு தனி மனிதனை வாழவும் விடாமல் அந்த வாழ்கையில் இருந்து வெளியே செல்லவும் விடாமல் நேரிடையாக பாதிக்காமல் மறைமுகமாக அந்த மனிதனை சுற்றி ஒரு வேலி போன்ற சூழலை ஏற்படுத்துவது கூட ஒரு வகையான பாவம் தான்.

ஒருவன் தான் சொல்வதை எல்லாம் மற்றவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக தன்னுடைய இயலாமையையும் வேதனையையும் வறுமையையும் கூட ஒரு வலிமையான மனிதனை பார்த்து அடிக்கடி பேசி அவனுக்கு வேதனையை உண்டாக்கினாலும் அதுவும் பாவம் தான். அதே சமயம் வறுமையின் காரணமாக இப்படி இவன் புலம்புகிறானே இவனை இப்படி புலம்ப விடலாமா? இவன் இப்படி புலம்பும் முன்னரே நம்முடைய பொருள் ஆதாரத்தை பயன்படுத்தி இவன் வறுமையை நீக்கி விட வேண்டாமா? என்று எண்ணி செயல்பட வேண்டும். அப்படி செயல் படாவிட்டால் அவனுக்கும் அந்த பாவம் வரும். பாவம் இங்கே இரண்டு வகையாக பார்க்கப் படுகிறது. ஒன்று தன்னுடைய வேதனையை வறுமையை இந்த செல்வந்தனிடம் அடிக்கடி கூறினால் இவன் ஏதாவது உதவி செய்வான் என்றோ அல்லது மன வேதனை குறையும் என்பதற்காகவோ அல்லது வேறு எந்த விதமான தீய எண்ணங்களோ இல்லாமலோ கூட கூறினாலும் இப்படி திரும்ப திரும்ப கூறுவதால் அந்த செல்வந்தன் மன உளைச்சலுக்கு ஆளாகி இவனை வர வேண்டாம் என்று கூறவும் இயலாமல் தவிர்க்கவும் இயலாமல் தவிக்கும் அந்த நிலையால் வரக்கூடிய பாவம் அந்த எளியவனுக்கு உண்டாகும். இன்னொன்று அப்படி அந்த எளியவனை தொடர்ந்து புலம்ப வைத்து அவன் தனக்கு பாவத்தை சேர்த்துக் கொள்ள வைத்த பாவம் அந்த செல்வந்தனுக்கு உண்டாகும். இப்படியெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்தால் தான் வினைப்பயன்களின் தன்மை என்ன என்பது விளங்கும். இப்படி கோடிக்கணக்கான பிறவிகள் கோடிக்கணக்கான உயிர்கள் பாவங்களை செய்து செய்து எதாவது ஒரு பிறவியிலே பாவங்கள் அற்ற நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்று இறைவனால் அருள் ஆசி வழங்கப் பெற்று அந்த எண்ணம் உதிக்கும் வண்ணம் கிரக நிலை இருக்கும் வண்ணம் ஒரு பிறவி கொடுக்கப்படும் தருணம் அதே விதி அந்த மனிதனை மேலும் குழப்ப துவங்குகிறது.

வாழ்க்கை முறை மாற மாற அவன் எண்ணங்களும் அதை ஒட்டி செயல்படும். எண்ணங்கள் அப்படி செயல்பட செயல்பட அதன் விளைவுகள் பெரும்பாலும் அவனுக்கு எதிராக தான் இருக்கும். அதன் அடிப்படையில் ஆசைகள் பல கிளை விட்டு பரவிக் கொண்டே இருக்கும். அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள் என்று மனம் துடிக்கும் அப்படி துடித்து அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள செயல்படும் தருணம் அதற்கு எதிராக வரும் தடைகள் அனைத்தையும் மனம் வெறுக்கும் தடைகள் ஏற்படுத்துகின்ற மனிதர்களை வெறுக்கும் அதனாலும் பாவம் சேரும். இறைவனின் கருணையால் தொடர்ந்து தர்மங்கள் செய்து பல்வேறு பிரார்த்தனைகள் செய்து ஒவ்வொரு ஆத்மாவும் நல்கர்மாக்களை கூட்டி வாழ நல் ஆசிகளை கூறுகிறோம். ஒவ்வொரு கணமும் நாழிகையும் சதா சர்வ காலமும் இறை சிந்தனையில் இருப்பது என்பது ஏதோ சோம்பி எந்தவிதமான வேலையும் செய்யாமல் இருப்பதற்காக கூறப்பட்ட ஒருவிதமான மூடப்பழக்கம் என்று பலர் எண்ணலாம். இறைவா இறைவா இறைவா இறைவா என்று கூறிக்கொண்டே இருந்தால் ஒருவனின் வயிறு நிரம்புமா? அவன் இந்த உடல் எடுத்ததற்கு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்க வேண்டாமா? என்று எல்லாம் கூட அறிவானது வினாக்களை கேட்டுக் கொண்டே போகும். சித்தர்கள் ஆகிய நாங்கள் உடலுக்காக மட்டும் வாழாதே என்றுதான் கூறிக்கொண்டே இருக்கிறோம். உடல் சார்ந்த சார்ந்த வாழ்வு முழுமையான வாழ்வாக இராது. உடல் வாழ்வுக்காகத்தான் மனிதன் எல்லாப் பாவங்களையும் சேர்த்து கொள்கிறான். மனைவி பிள்ளைக்காக செய்தேன் என்று காரணம் கூறி ஒரு தனி நியாய விவாதத்தை இவன் கூறலாம். ஆனால் யாருக்காக செய்தாலும் பாவம் பாவம்தான். தாய்க்காக தந்தைக்காக செய்தேன் என்று கூறினாலும் யாருக்கும் பாவ மன்னிப்பு கிட்டிவிடாது. மறந்தும் ஒரு மனிதன் பாவத்தை நினையாமலும் நினையாமலும் செய்யாமலும் விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொண்டாலே மனிதனுக்கு பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் அப்பா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.