அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
ஒரு மனிதனின் நல்ல எண்ணங்கள் செயல்கள் ஒரு ஆரோக்யமான அதிர்வலைகளை அவனைச் சுற்றி உண்டாக்கும். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல நல்லாரை கண்டவுடன் சந்தோஷமும் மீண்டும் மீண்டும் இவனுடன் பழக வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். நல்ல சிந்தனையற்ற ஒரு மனிதன் நல்லவரோடு பழகப்பழக காந்தமற்ற இரும்பு காந்தத்தோடு சேர்ந்து தானும் காந்தமாவது போல அவனுக்குள் நல்ல எண்ணங்கள் இடம் மாறும். ஒரு மிகப்பெரிய தனவானிடம் எவ்வளவு நாள் பழகினாலும் அந்த தனம் இவனிடம் வந்துவிடாது. அழகான தோற்றம் உடையவனிடம் அழகற்ற ஒருவன் எத்தனை ஆண்டு பழகினாலும் அந்த அழகு இவனை வந்தடையாது. ஆனால் நல்ல குணங்கள் கொண்ட ஒரு மனிதனோடு பழக்கத்தை அதிகரிக்க அதிகரிக்க அந்த அதிர்வலையின் தாக்கத்தால் அவை மெல்ல மெல்ல இவனிடமும் வந்தடையும். எனவே சதாசர்வ காலமும் மனதிலே சினமும் வாயிலே தகாத வார்த்தைகளும் பிறரை பற்றி குறை கூறுவதுமாக இருந்தால் பிறகு அதுவே இயல்பாகி சமாதானமாகி பிறகு அதுதான் சரி என்றாகி பிறகு மனமும் புத்தியும் வாக்கும் எண்ணமும் செயலும் அமைந்துவிடும் என்பதால் சதாசர்வகாலமும் இறை சிந்தனையில் மனம் லயிக்க பயிற்சி எடுக்க வேண்டும்.
இதுபோல் நிலையை உயர்த்த உயர்த்த உயர்த்த உயர்த்த மனம் பக்குவமடைந்து பிறகு அறிவை என்ற நிலை தாண்டி சித் என்ற உன்னத நிலை அறிவு அவனுள் மலரிடத் துவங்கும். சித் எனப்படும் அந்த சித்தம் தெளிந்தால்தான் உண்மையான சித்தர்களின் வழி வாக்கு யாம் எதை ஏன் எந்த காலகட்டம் உரைக்கிறோம்? என்பது புலப்படத் துவங்கும். எனவே பாவத்தை நீக்குவதற்கு போராட வேண்டும். பாவம் செய்யாமல் இருப்பதற்கும் போராட வேண்டும். எனவே நீக்கமற நிலைத்திருகின்ற பரம் பொருளை எல்லாம் இறைவா பாவம் போக்கத்தான் அருள வேண்டும். உனது திருவடியை பற்றிக் கொண்டு இந்த சிறிய ஆன்மா இந்த கூட்டுக்குள் அடைபட்டு கிடக்கிறது. இந்த கூட்டையே தான் என்று எண்ணுகிறது. இந்த கூடு வேறு இந்த கூட்டுக்கு மேல் மனிதன் ஆடையை அணிந்து கொள்கிறான் மானம் காக்க என்று என்றாவது ஆடை சேதம் அடைந்து விட்டால் நான் சேதம் அடைந்து விட்டேன் என்று கூறுவானா? என் ஆடை தான் சேதம் அடைந்து விட்டது. இனி புதிய ஆடையை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தான் கூறுவான். ஏனென்றால் தன்னுடைய தேகம் வேறு தன்னுடைய தேகத்தை மறைத்திருக்க கூடிய ஆடை வேறு என்பது அவனுக்கு வெளிப்படையாக தெரிகிறது. தேகத்தை சேதப்படுத்தினால் அவனுக்கு உணரக்கூடிய தன்மையாக இருக்கிறது. ஆனால் அவன் ஆடைக்கு சேதம் ஏற்பட்டால் அதனால் என் உடலுக்கு ஒன்றும் இல்லையே என்பான். ஆனால் ஆன்மாவின் மேல் படிந்து உள்ள இந்த தேகம் என்னும் ஆடை அது விலங்கு ஆடையோ பட்சி ஆடையோ விருக்ஷ ஆடையோ எல்லாவற்றுக்குள்ளும் ஒரு உயிர் ஒளிந்து கொண்டு இருக்கிறது. சிறைபட்டு இருக்கிறது.
இந்த தேகத்தை வருத்தினால் ஏதாவது ஆபத்துக்கு ஆளாக்கினால் சட்டை பழுதடைந்தால் தானே பழுடைந்து விட்டதை போல புலம்புவதை போல மனிதன் புலம்புகிறான். அது எப்படி சட்டையை காயப்படுத்தினால் எனக்கு வலிக்கவில்லை. ஆனால் தேகத்தை காயப்படுத்தினால் எனக்கு வலிக்கிறதே காரணம் என்ன? விளாம் கனி இன்னும் பழுக்கவில்லை. பழுத்து விட்டால் ஓட்டை விட்டு விலகி அது உள்ளே தனியாக ஆட துவங்கும். எனவே அஞ்ஞானம் எங்கிருந்து வந்தாலும் அதனை தவிர்க்க வேண்டும். கூறுவது அன்புள்ள தாயே ஆகினும் மனைவியே ஆகினும் தந்தையே ஆகினும் சகோதரன் ஆகினும் பிரிய நண்பன் ஆகினும் அல்லது பிள்ளைகள் ஆகினும் கூறுவது மெய்யான மெய்யான மெய்யான மெய் ஞான வாழ்வுக்கு ஆதரவான கருத்தா அல்லது வெறும் உலகியல் கருத்தா என்று பார்த்து அப்படி இல்லை என்றால் அந்த கருத்தை புறக்கணித்து நான் இவ்வழி வரமாட்டேன் எவ்வழி மெய் வழியோ அவ்வழியே வருவேன் என்று திடம்பட மனதிற்கு கூறி வர வேண்டும். இதுபோல் கருத்தினை மனதிலே அசை போட அசை போட வாழ்வியல் துன்பங்கள் என்பது மனிதனை என்றுமே வாட்டிக்கொண்டே இராது.