கேள்வி: இறை கூட இருந்தாலும் நவகிரகங்கள் தம் வேலையை செய்யும் என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால் எல்லா கிரகங்களுக்கும் சாந்தி செய்ய வேண்டுமா? எந்த திசை நடக்கிறதோ அதற்கு பரிகாரம் செய்தால் போதுமா? எந்தெந்த பாவங்களுக்கு எவ்வளவு தர்மம் செய்யவேண்டும்?
இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இன்று பல இல்லறமே துறவறமாகத் தானப்பா தென்படுகிறது. கணவன் மனைவி இருவருமே ஒரே இல்லில் (வீட்டில்) இருக்கிறார்கள். ஆனால் ஒன்றாக இருக்கிறார்களா? என்றால் அது வினாக்குறிதான் ஐயம்தான். எனவே இல்லறத்திலிருந்தே துறவறத்தை இயல்பாகவே விதி உருவாக்கி விட்டது. இவையெல்லாம் வேண்டாம் என்று துறவுக்கு ஒருவன் செல்கிறான். ஆனால் அங்கு சென்ற பிறகு இக்கரை பச்சையாகத் தெரிகிறது. அவன் ஒரு இல்லறவாசியாக மாறி விடுகிறான். எனவே விதிதான் அங்கும் வேடிக்கை காட்டுகிறது. அப்பனே நன்றாக புரிந்துகொள். நவகிரகங்களுக்கோ அல்லது பிற தேவதைகளுக்கோ இறைவனுக்கோ சாந்தி செய்வது என்றால் என்ன? குடம் குடமாக குருவிற்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்து கொண்டைக்கடலை மாலையை போட்டு விட்டால் குரு அருள்வார் என்றால் ஒரு மனித ரீதியான மந்திரிக்கும் அரசனுக்கும் தெய்வத்திற்கும் என்னப்பா வேறுபாடு? பிறகு எதற்கு நாங்களே இதையெல்லாம் கூறுகிறோம்? இறை வழிபாடு என்பதே ஒரு மனிதனை பக்குவப்படுத்துவதற்காக. இறை நம்பிக்கை இல்லாத மனிதனுக்குக்கூட தெரியும். இறைவன் என்றால் எப்படி? என்று கேட்டால் விளக்கம் கூறுவான். அன்பு என்றால் எப்படி? என்று கேட்டால் விளக்கம் கூறுவான். அன்பு நிறைந்தவர் கருணை நிறைந்தவர். எத்தனை தவறுகளை நாங்கள் செய்தாலும் மன்னிப்பார். எல்லா ஆற்றலும் கொண்டவர் என்று. இப்படி உயர்ந்த தத்துவமாக விளங்கக்கூடிய இறைவனை அந்தந்த மனிதனின் மனோபாவத்திற்கு ஏற்ப அவன் வழிபட்டுவிட்டு போகட்டும். அப்படி வழிபட வழிபட எதை நீ எண்ணுகிறாயோ அதைப் போலவே ஆகிவிடுவாய் என்பது போல அந்த உயர்ந்த விஷயத்தை நினைக்க நினைக்க நினைக்க சிறிதளவாவது அந்த (இறைத்) தன்மை தன்னிடம் வராதா? என்பதற்கு ஏற்பதான் இறை வழிபாடு.
இரண்டாவதாக இப்படி உயர்ந்த விஷயத்தை செய்து கொண்டே தவறுகள் செய்தால் அவன் மனசாட்சி உறுத்தும். ஒருபுறம் இறைவனை வணங்குகிறோம். இறைவனின் நாமாவளியைக் கூறுகிறோம். மறுபுறம் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறோமே? என்று அவன் மனம் அவனுக்கு சுட்டிக்காட்டி சுட்டிக்காட்டி அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இவையெல்லாம் ஓரளவு நல்வினை இருப்பவர்களுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே நவகிரகங்களுக்கு பொதுவாக பரிகாரம் என்ற பெயரிலே அபிஷேகம் ஆராதனை நறுமண மாலை என்று எதை வேண்டுமானாலும் விருப்பம்போல் செய்யலாம். ஆனால் அவற்றோடு நாங்கள் முன்பு கூறியது போல நவகிரகங்களுக்கு பரிகாரம் அந்த அளவில் மட்டும் நின்று விடாமல் நிறைய தர்ம காரியங்களை இயன்றவர்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். தன்னிடம் பணியாற்றும் ஒரு பணியாளனுக்கு உரிய தக்க ஊதியத்தை தராமல் ஆலயம் சென்று எத்தனைதான் லகரம்(லட்சம்) லகரம்(லட்சம்) செலவு செய்தாலும் இறைவனருள் கிட்டாதப்பா. நவகிரக வழிபாட்டிலே எந்தெந்த நவகிரகம் எந்தெந்த தொழிலுக்கு காரகத்துவம் பெற்றிருக்கிறது என்று பார்த்து அப்படி பார்க்கும் பொழுது அந்த தொழில்களிலே ஏழ்மை நிலையில் இருக்கக் கூடிய மனிதர்களுக்கு இயன்ற உதவி செய்தாலும் நவக்ரக பரிகாரம்தானப்பா.
நவக்கிரக வழிபாட்டிலே எந்தெந்த நவகிரகம் எந்தெந்த தொழிலுக்கு காரகத்துவம் பெற்றிருக்கிறது என்று பார்த்து அப்படி பார்க்கும் பொழுது அந்த தொழில்களிலே ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு இயன்ற உதவி செய்தாலும் நவகிரக பரிகாரம் தானப்பா. இதுபோல் நவக்ரக மந்திரங்களைக் கூறுவது வழிபாடு செய்வது என்பதிலே அதும் அடங்கி விடுகிறது. பொதுவாய் தர்மம் செய்வதும் ஆலயங்களுக்கு தொண்டுகள் செய்வதும் போக குறிப்பாய் குரு என்றால் குரு நிலையில் அல்லது உபதேசத்தை தொண்டாகக் கொள்ளக் கூடிய எத்தனையோ மனிதர்கள் ஏழ்மையில் வறுமையில் எதாவது ஒரு காரணத்திற்காக இருக்கலாம். அவர்களைத் தேடிப் பார்த்து அவர்களுக்கு வேண்டியதை செய்து தந்தால் கட்டாயம் குருவின் பார்வை கிட்டுமப்பா. அதுபோல் ஒரு சிறிய தொழில் செய்யும் மனிதனைப் பார்த்து அவனுடைய தொழிலுக்கு ஏற்ப நன்றான ஊதியத்தை இன்னும் இரு மடங்காக்கித் தந்தாலும் அதுபோல் கிரகத்தின் அருள் கிட்டுமப்பா. எனவே எப்படி பார்த்தாலும் ஒருபுறம் இறைவனை வணங்குவதோடு இன்னொருபுறம் அள்ளி அள்ளி தந்து கொண்டே சென்றால் போதும் வேறு எந்த பரிகாரமும் அங்கு தேவையில்லை.
அபிவிருத்தி என்று நீ எதனைக் கூறுகிறாய்? பல மனிதர்கள் வந்தால் அது அபிவிருத்தியா? அந்த இடம் என்னவாகும்? எனவே மனிதர்கள் போகாமல் ஒரு ஆலயம் இருக்கிறதென்றால் மனிதர்கள் கால் படாமல் ஒரு மலை இருக்கிறதென்றால் அது இப்பொழுதே அபிவிருத்தியாகத்தான் இருக்கிறது என்று பொருள். இன்றைய தினம் சதுரகிரி என்னவாகியிருக்கிறது என்று நான் சொல்லித் தெரிய வேண்டாம். அதைப் போல்தான் ஆப்பூர். எனவே அமைதியான முறையிலே அங்கு சித்தர்கள் அரூப நிலையிலும் பாறை வடிவிலும் மண்ணின் அடியிலும் இன்றும் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்களின் ஆர்பாட்டங்கள் அவர்களின் தவத்திற்கு இடையூறாக அமையும். அதுபோன்ற மகான்களின் ஞானதவம்தான் இந்த உலகை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ அமைதியான மலைகள் தெய்வீகத் தன்மையோடு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் தக்க ஆத்மா வர வேண்டுமென்றால் அந்த சூழலுக்கு ஏற்ப அந்த சித்தர்களே இறை அனுமதி பெற்று வரவழைப்பார்கள். எல்லோரும் செல்லக் கூடிய நிலைக்கு ஒரு வசதியான சூழலை ஏற்படுத்தி விட்டால் அங்கும் அனர்த்தம்தான் நிலவும். எனவே அமைதியாக இருப்பதே பல்வேறு தருணங்களில் எம்மைப் பொறுத்த வரை ஏற்புடையது.
விலங்குகளின் பாஷை இன்று வரை மனிதனால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. விலங்குகளில் ஒலி மொழி என்ற ஒன்று இருக்கிறது. அதைப் போல் விலங்குகளின் (மனிதன் தன் செவியால் கேட்க முடியாத) ஒலி சக விலங்குகள் மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும். ஒரு யானையானது கிட்டத்தட்ட 40 காத தூரம் தாண்டி இன்னும் அதனையும் தாண்டி இருக்கக் கூடிய இன்னொரு யானைக்கு இங்கிருந்தே தகவல் அனுப்பவல்லது. இவற்றையெல்லாம் மனிதன் புரிந்து கொள்வது என்பது கடினம். விருக்ஷங்கள் (மரங்கள்) சக விருக்ஷங்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படி எத்தனையோ விதமான எண்ணங்களை பரிமாறிக் கொள்ளக் கூடிய மொழி முறைகளோ. ஒலி முறைகளோ சைகை முறைகளோ இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நீ கூறிய இந்த தமிழ் மொழி. இது எல்லா இடங்களிலும் இருந்தாலும் இங்குதான் பிரதானமாக இருக்கிறது. இன்னும் மேலே செல்ல செல்ல ஒலியால் யாரும் எண்ணங்களை வெளியிடுவதில்லை. மனதிலே எண்ணுகின்ற எண்ணம் அடுத்த நிலையில் உள்ள ஆத்மாவிற்கு மனதிலே செய்தியாக பரிமாறப்படுகிறது. அப்படிதான் பார்வை மூலமும் எண்ணங்களின் மூலமாகவும் மட்டுமே செய்திகள் பரிமாறப்படுகிறதே தவிர வாயைத் திறந்து ஒலி எழுப்பி பரிமாறப்படுவதில்லை.