ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 347

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பலர் எண்ணலாம் எப்பொழுது வந்தாலும்  நலமான வாழ்வு உண்டு. நலமான எதிர்காலம் உண்டு. அச்சம் வேண்டாம். கலக்கம் வேண்டாம். கவலை வேண்டாம் என்று சித்தர்கள் கூறுகின்றார்கள். ஆயினும் கூட இதுபோல் உலகத்தில் அவ்வாறு எல்லா வகையிலும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடிவதில்லையே? பின் சித்தர்கள் ஆசிகள் கூறுகிறார்களே? பின் அது அவ்வாறு நடை முறையில் காண முடியவில்லை? என்று பலரும் ஐயமும் குழப்பமும் ஏன்? எங்கள் மீது விரக்தியும் கொண்டுதான் வாழ்கிறார்கள். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது போல் இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆன்மாவும் பிறவி எடுத்ததின் நோக்கம் பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும் புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. அதாவது இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும் கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள் தோறும் இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும் துயரமும் மன வேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவது போல தவறு செய்யும் பொழுதே ஒரு மனிதனை தடுத்து விடலாமே? தண்டித்து விடலாமே? என்ற பார்வையிலே பார்த்தால் இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன்? அதை விட படைக்கும் பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்லதையே எண்ண வேண்டும் நல்லதையே உரைக்க வேண்டும் நல்லதையே செய்ய வேண்டும் என்று  எல்லாம் வல்ல இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே?. ஆனால் அவ்வாறு இல்லாமல் இதுபோல் நிலையிலே மனிதர்களுக்கு எல்லா வகையான சுதந்திரங்களையும் தந்து அவனை பல்வேறு தருணங்களில் அவன் போக்கிலே விட்டு இது நல்லது இது தீயது இது தக்கது இது தகாதது என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து இயல்பாக ஒருவன் நல்லவனாக மாற வேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன் அதாவது தான் கண்காணிக்கப் படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அச்சத்தினாலோ அல்லது வேறு ஏதாவது உபாதை ஏற்பட்டு விடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.

தங்கம் என்றால் அதன் இயல்பு எந்த நிலையிலும் மாறாதது. அதைபோல மனிதன் என்றால் தர்மத்திலும் சத்தியத்திலும் எப்பொழுதும் வழுவாமல் இருக்க வேண்டும். அந்த இயல்புதன்மை ஒரு ஆன்மாவிற்கு எப்பொழுது வரும்? ஏற்கனவே சேர்த்த பாவங்கள் அவனை நல்ல பாதையில் செல்ல விடாது. அந்த பாவங்களை  கழிக்க இறைவன் கருணை கொண்டு ஏதாவது ஒரு பிறவியிலே சில நல்ல விஷயங்களை செய்வதற்குண்டான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது சில நல்லவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது நல்ல தாய் தந்தையர்களுக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டிய சூழ்நிலையை அப்படியொரு வாய்ப்பை தந்தருள்வார். அதைப் பிடித்துக் கொண்டு மனிதன் மெல்ல மெல்ல மேலேற வேண்டும். அதாவது எத்தனையோ கணக்கற்ற பிறவிகளை பிறந்து பிறகு இறந்து பிறகு பிறந்து பிறகு இறந்து அவையெல்லாம் நினைவுப்பதிவில் இருந்தும் இல்லாமல் போனது போல இந்த உலக வாழ்க்கையே நிஜம். இந்த தேகம் நிஜம். இந்த தேகம் சார்ந்த சுகத்திற்காகத்தான் பாடுபட வேண்டும். இந்த லோகாய விஷயங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சராசரி குணம் கொண்டு வாழ்கின்ற மனிதன் இறைவனின் கருணையால் ஏதாவது ஒரு பிறவியிலே மெல்ல மெல்ல இவையெல்லாம் பொய். இதனைத் தாண்டி மெய்யான விஷயம் ஒன்று இருக்கிறது. அதனை நோக்கி செல்ல வேண்டும். இந்த தேகம் என்பது ஆன்மாவிற்கு ஒரு கூடு போன்றது. இன்னும் கூறப்போனால் ஆன்மா இந்த தேகத்திற்குள் சிறை வைக்கப் பட்டிருக்கிறது. அந்த ஆன்மா விடுதலை பெற வேண்டுமென்றால் இந்த தேகத்தைவிட்டு செல்வதோடு மீண்டும் ஒரு தேகத்திற்குள் புகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி சிந்தித்து சிந்தித்து சிந்தித்து சிந்தித்து கடைத் தேறியவர்களே மகான்களும் ஞானியர்களும் சித்த புருஷர்களும் ஆவர்.

இதற்காகத்தான் இத்தனை விதமான வழிபாடுகளும் சாஸ்திரங்களும் விதவிதமான ஆலயங்களும் மரபுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் காலப் போக்கில் என்னவாயிற்று? இந்த மரபையும் சாஸ்திரத்தையும் பிடித்துக் கொண்ட மனிதன் அதன் உண்மைத் தத்துவத்தை உணராமல் அல்லது உணர ஒரு முயற்சி செய்யாமல் இருந்து விட்டான். தேர் இழுக்கவேண்டும் என்பதை கற்றுக் கொண்ட மனிதன் தன் உடலில் இருக்கக் கூடிய குண்டலினி எனும் தேரை கீழிருந்து மேலே பிரயாசைபட்டு ஐம்புலன்களையும் ஒன்றாக்கி பிற இச்சைகளை எல்லாம் விட்டுவிட்டு மேலே இழுக்கவேண்டும் என்பதை விட்டு விட்டான். தீர்த்தமாடுதல் என்றால் உள்ளே சுரக்கும் அமிர்தத்தைத் தூண்டிவிட்டு அதை சுவைத்து உள்ளே இருக்கும் ஆன்மாவை உள்ளே சுரக்கும் அமிர்தத்திலே நீராட வைக்கவேண்டும் என்ற உண்மையை மறந்து விட்டு ஆங்காங்கே இருக்கின்ற நீர் நிலைகளுக்கு சென்று தேகத்தையே சுத்தி செய்து கொண்டிருக்கிறான். தேகத்தைப் போற்ற வேண்டும். தேகத்தை நன்றாக பேண வேண்டும். தேகத்தை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதல்ல. யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல 100 ஆண்டுகள் மேலும் வாழ்வதற்கு என்ன வழியோ அதனை தேகத்திற்கு ஒருவன் செய்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் அடுத்த கணம் மரணம் வந்தாலும் ஏற்க மனதையும் தயாராக வைத்திருக்க வேண்டும். உடம்பு 100 வயதையும் தாண்டி வாழ்வதற்குண்டான பயிற்சியை மேற்கொண்டு வஜ்ர தேகமாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். மனது எப்பொழுது மரணம் வந்தாலும் அதை ஏற்கும் நிலைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். இதுதான் சித்தர்களின் வழியாகும்.

இதுபோல் சுயநலமற்று பந்த பாசங்களில் சிக்காமல் கடமைகளில் இருந்து தவறாமல் கடமைகளை செய்கிறேன் என்று பாசத்தில் வழுக்கி விழாமல் கடமைகளை செய்கிறேன் என்பதற்காக நேர்மை தவறாமல் ஒருவன் தன்னையும் பாதுகாத்துக் கொண்டு தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டு மனதை இறைவனின் திருவடியை நோக்கி வைத்துக் கொண்டு சதாசர்வகாலம் அந்த இறை சிந்தனையிலே
வாழ வேண்டும். ஏன்? ஒருவன் எதை எண்ணுகிறானோ அதுவாகவே மாறிவிடுகிறான். இந்த கருத்து பல மனிதர்கள் அறிந்ததே. அதைப் போல நீக்கமற நிறைந்துள்ள எங்கும் வியாபித்துள்ள பெரும் கருணை கொண்ட அந்த பரம்பொருளை எண்ண எண்ண எண்ண எண்ண ஒரு மனிதனுக்கு தவறு செய்யக் கூடாது பாவங்கள் சேர்க்கக் கூடாது என்கிற நினைவு இருந்து கொண்டே இருக்கும். இந்த நினைவு இருக்கும் வரையில் ஒரு மனிதன் கூடுமானவரை சரியான வழியில் சென்று கொண்டே இருப்பான். பாவங்கள் செய்வதால் ஒரு ஆன்மாவை மனித தேகம் எடுக்க வைத்தோ அல்லது விலங்கு தேகம் எடுக்க வைத்தோ கடுமையாக தண்டிப்பதில் இறைவனுக்கு என்ன லாபம்? ஒரு மனிதன் கண்ணீர் சிந்தினால் அதனால் இறைவனுக்கு எதாவது லாபமா? மூதுரை (பழமொழி) ஒன்று இருக்கிறதல்லவா நன்றும் தீதும் பிறர் தர வாரா என்று. ஒருவன் நுகர்வதெல்லாம் அவன் என்றோ செய்தவைதான். இன்றொருவன் எல்லா வகையிலும் நிம்மதியாக வாழ்கிறான் என்றால் அவன் அதற்கேற்றாற்போல் முந்தைய பிறவிகளில் உழைத்திருக்கிறான் என்று பொருள். ஒருவன் எல்லா வகையிலும் நிம்மதியிழந்து வாடுகிறான் என்றால் அதற்கேற்றாற்போல் அவன் விதைகளை விதைத்திருக்கிறான் என்பது பொருளாகும்.

இப்பொழுது எதை யாங்கள் கூற வருகிறோம் என்றால் சித்தர்கள் நல்லாசிகள் தந்தாலும் வாழ்வு நன்றாக இருக்கும் இறைவனருளால்  என்று கூறினாலும் கூட எங்கள் வாழ்வு நன்றாக இல்லையே என்று இங்கு வந்து போகின்ற மனிதர்கள் எண்ணுவது எதைக் குறிக்கிறது? என்றால் அறியாமையைக் குறிக்கிறது. ஏனென்றால் லோகாய வாழ்விலே ஒருவனுக்கு எத்தனை செல்வத்தைத் தந்தாலும் எத்தனை மாளிகைகளைத் தந்தாலும் எத்தனை கோடி கோடியாக தனத்தைத் தந்தாலும் அவன் விரும்புகின்ற எந்த விஷயத்தைத் தந்தாலும் அது பதவியோ அவன் ஆசைப்படுகின்ற பெண்களோ அல்லது நிறைய தங்கமோ எதைத் தந்தாலும்கூட ஒரு மனிதனால் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இயலாது. தொடர்ந்து ஒருவன் செய்கின்ற பக்தியும் தொண்டும்தான் நேர்மையான வழியில் சேர்த்த செல்வத்தை பிறருக்கு பயன்படுமாறு அள்ளி அள்ளி அள்ளி அள்ளி வழங்குகின்ற தடைபடாத தர்ம குணத்தினால் மட்டும்தான் ஒருவனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சேர்ப்பதல்ல சுகம். சேர்த்து வைப்பதல்ல சுகம். இருப்பதையெல்லாம் தந்து கொண்டேயிருப்பதே சுகம். இழக்க இழக்கதான் மனிதன் பெறுகிறான் என்பதை மனிதன் மறந்து விடக்கூடாது. எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ நியாயமான விஷயங்களுக்கு எதையெல்லாம் ஒரு மனிதன் கொடுக்கிறானோ தன்னையே எப்பொழுது இழக்கிறானோ அப்பொழுதுதான் அவனுக்கு இறைவனின் பரிபூரண கருணை கிட்டும். அதை விட்டு எனக்கு இந்த செல்வம் வேண்டும் எனக்கு இந்தவகையான வசதியான வாழ்வு வேண்டும் என்று இறைவனை நோக்கி வேண்டுவதால் பயனொன்றுமில்லை.

ஒருவேளை இவையெல்லாம் இறைவன் தரலாம். ஆனால் ஒரு மனிதன் கேட்கின்ற லௌகீக விஷயங்களால் லௌகீக வசதிகளால் சில காலமோ அல்லது சில நாழிகையோ வேண்டுமானால் அவன் சுகமாக நிம்மதியாக இருக்கலாம் அல்லது அப்படி இருப்பது போல் ஒரு மாயத்தோற்றம் ஏற்படலாம். நிரந்தர நிம்மதியும் நிரந்தர சந்தோஷமும் பற்றற்ற தன்மையும் யோகாசனத்தால் தன் தேகத்தை வஜ்ரமாக ஆக்கி வைத்துக் கொள்வதிலும் சுவாசப் பயிற்சியை தடையற்று செய்து சுவாசத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் பிறகு தன்னிடம் இருப்பவற்றை எல்லாம் தேவையான மனிதர்களுக்கு தேவையான பொழுது அவன் வாயைத் திறந்து கேட்கும் முன்னே குறிப்பறிந்து தருவதும் அப்படி தந்து விட்ட பிறகு எவன் பெற்றானோ அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்ளாமல் அதாவது ஒருவனுக்கு ஒரு உதவியை செய்ய வேண்டியது. பிறகு நான் உனக்கு இந்த உதவியை செய்திருக்கிறேன் செய்திருக்கிறேன் என்பது போல் அவனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பது. இது போன்ற உதவியை செய்வதற்கு ஒரு மனிதன் செய்யாமலேயே இருக்கலாம். எனவே உதவியை செய்து விட்டு பிரதிபலன் எதிர்பார்ப்பது கூட அந்த உதவிக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தியது போல் ஆகும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் வழங்கிக் கொண்டே இருத்தல் என்பதே இறைவனின் அருளையும் ஏன்? இறைவனின் தரிசனத்தையும் பெறுவதாகும். எனவே கொடுப்பது ஒன்று மட்டும்தான் இறைவன் கருணையை எளிதில் பெறுவதற்குண்டான வழியாகும்.

ஏது ஏதோ மந்திரங்களை வாயில் நுழையாமல் கடினப்பட்டு கற்றுக் கொள்வதாலோ புரியாத அர்த்தம் கொள்ள இயலாத மந்திரங்களை கூறுவதாலோ மட்டும் இறைவனருள் கிட்டாது. அவையெல்லாம் ஒரு அடிப்படை பாடமாகும். இறைவன் அருளைப் பெற வேண்டும். எதற்காக பெற வேண்டும்? எல்லாவகையிலும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகத்தானே? பிறரை நிம்மதியாக வாழ வைத்தால் ஒருவனுக்கு நிம்மதி தானாக வந்துவிடும். பிறர் கண்ணீரை ஒருவன் துடைத்தால் அவன் கண்ணீர் இறைவனால் துடைக்கப்படும். பிறர் புன்னகைக்கு ஒருவன் வழிவகுத்தால் இவன் நிரந்தரமாக புன்னகைக்க இறைவன் ஏற்பாடு செய்வார். இதுதான் அடிப்படை ஆன்மீகமாகும். இதனைப் புரிந்து கொண்டு விட்டால் எமது வாக்கும் வாக்கின் போக்கும் புரியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.