அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் வினைகளின் கூட்டுத் தொகுப்பான பிறவிகளில் மனிதப் பிறவி விலங்கான பிறவிகளிலிருந்து சற்றே கடுகளவு மேம்பட்டது என்றாலும் மேலும் மேம்பட சற்றே முயலாமல் அந்த விலங்குத் தன்மையை மட்டும் கொண்டு உணர்வுகளுக்கு ஆட்பட்டு உணர்வுகளால் அலைக் கழிக்கப்பட்டு வாழ்கின்ற தன்மையே பெரும்பாலான மாந்தர்களிடம் நிலவி வருகிறது. இறைவனின் கருணையைப் பெறவும் மேலும் மேலும் இறை நோக்கி பயணம் செய்யவும் பாவங்களை சேர்க்காத வாழ்க்கை வாழவும் சேர்த்த பாவங்களை கழிக்கவும் மட்டுமே மனித பிறவி என்று ஒரு மனிதன் புரிந்து கொள்ளவே பல பல பல பிறவிகள் ஆகிவிடுகிறது. அவன் புலன்களால் கண்டு கேட்டு உணரக்கூடிய வாழ்க்கை முறையை நுகர்வதே வாழ்க்கை என்று எண்ணுகின்ற தன்மையில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதுபோல் புலன் வாழ்வைத் தாண்டி மேலான வாழ்வு நிலையை நோக்கி செல்வதற்கு கொடுக்கப்பட்ட பிறவியை நன்றாக பயன்படுத்திக் கொள்ள கூடுமானவரை முயற்சி செய்வதே ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். ஆகிடுமே மனதை உறுதியாக வைத்துக்கொள்ள இது. அதுபோல் வினைகளின் தொகுப்பு உறவுகள் ரீதியாகவும் நட்பு வழியாகவும் இன்னும் தொடர்பு கொள்ளக் கூடிய பிற மாந்தர்கள் வழியாகவும் வேறு வேறு காரணங்களைக் கொண்டும் செயல்படும் தன்மையாகும். தேகத்தின் ஒட்டுமொத்த இயக்கம் மனிதன் தன் அறிவால் கண்டு இது இதனால் இயங்குகிறது. இது இவ்வாறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் செயல் பட்டாலும் அப்படி தேகம் இயங்குகின்ற அந்த இயக்கத்தின் பின்னால் இருப்பதும் வினைகள்தான் என்பதை புரிந்து கொள்வது கடினமே.
இறைவனின் கருணையைப் பெறுவதற்கு சாத்வீக வாழ்வும் சலனமற்ற சினமற்ற தன்முனைப்பு அற்ற வாழ்வும் தேவை. இவையெல்லாம் விழி மூடி விழி திறப்பதற்குள் யாருக்கும் கிட்டிவிடாது. தொடர்ந்து போராடிக் கொண்டே இருத்தல் வேண்டும். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து எழுந்து எழுந்து இறை நோக்கி நல்ல நிலை நோக்கி போராட மனிதன் கற்றுக் கொண்டிட வேண்டும். இறைவன் கருணையாலே எதையெடுத்தாலும் வினைகள் வினைகள் சென்ற பிறவிகளின் கர்மாக்கள் என்று கூறுவதால் என்ன லாபம்? மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவு எதற்கு? அந்த அறிவைக் கொண்டு ஒரு மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள இயலாதா? துன்பங்களற்ற நிலையை அடைய இயலாதா? என்றால் இறைவன் படைத்த மனிதன் தான் பெற்றுள்ள அறிவை விருத்தி செய்து கொள்ளவும் அந்த அறிவை அனுபவங்களால் நிரப்பி தான் ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கவும் தன்னுடைய அறிவின் திறன் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளவும் தனக்கு இடர் வராமல் காத்துக் கொள்ளவும் அவன் முயல்வது தவறு என்று நாங்கள் கூற வரவில்லை. அப்படி முயலுகின்ற பல மனிதர்களில் சிலரில் சிலரில் சிலரில் சிலரில் சிலருக்கு மட்டுமே அவன் எண்ணுவது போல ஓரளவு வாழ்க்கை நிலை அமைகிறது. பலருக்கு அவ்வாறு அமைவதில்லை. அது போன்ற தருணங்களில் எல்லாம் மனிதன் சோர்ந்து விடக்கூடாது. என்றோ எப்பொழுதோ செய்த வினை இப்பொழுது வருகிறது என்று எடுத்துக் கொண்டு பக்குவமாக அதனை எதிர்கொண்டு இனி பாவங்களற்ற வாழ்க்கையை வாழ போராட ஒவ்வொரு மனிதனும் கற்றுக் கொண்டிட வேண்டும். தன்னுடைய லோகாய கடமையை நேர்மையாக ஆற்றுவதோடு தன்னால் இயன்ற தொண்டினை செய்வதோடு அமைதியான முறையிலே பிரார்த்தனைகளை ஸ்தல யாத்திரைகளை தொடர்வதும் இயன்ற தர்மகாரியங்களை செய்வதும் ஒரு மனிதனின் பாவங்களைக் குறைப்பது மட்டுமில்லாமல் மேலும் கடுமையான பாவங்களை சேர்க்காமல் இருப்பதற்கும் உதவும்.
இது போன்ற பொதுவான கருத்துக்களை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுவதின் நோக்கமே மீண்டும் மீண்டும் இது போன்ற கருத்துக்களை அசைபோட அசைபோட அசைபோட அசைபோட மனித மனம் தடுமாற்றமில்லாமல் உறுதியோடு இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஏனென்றால் சராசரி மனிதர்கள் எதையெதையோ பேசி சற்றே தடுமாறி மேலே வரக்கூடிய மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும் என்பதால்தான் நல்ல விஷயங்களை உயர்ந்த கருத்துக்களையெல்லாம் மனிதன் அடிக்கடி செவியில் விழுவது போல் ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டிட வேண்டும். எனவேதான் வினைகளின் தொகுப்பான பிறவிகளை களைய மனிதன் முயற்சி எடுத்திட வேண்டும். இதுபோல் எல்லா நிலையிலும் மனிதனுக்கு துன்பங்களற்ற நிலை வேண்டும் என்றாலும் துன்பங்களற்ற ஒரு நிலையை புறத்தே தேடுவது என்பது அத்தனை ஏற்புடையது அல்ல. ஒரு மனிதன் பக்குவப்பட பக்குவப்படத்தான் துன்பங்களற்ற சூழல் என்பது அவன் உணரக்கூடிய சூழலாக இருக்கும்.ஒரு மனிதன் வியாபாரத்திலே கடுமையான நட்டத்தை சந்திக்கிறான். அதிகளவு பொருளை இழக்கிறான். உண்மையில் பார்க்கப் போனால் அது மிகப்பெரிய நட்டமே. அதைப்போல் இன்னொரு மனிதனும் அடைகிறான். இரண்டு மனிதர்களும் இழந்தது மிகப் பெரிய இழப்பு நட்டம். ஆனால் சரி போகட்டும். எங்கோ தவறு செய்து விட்டோம் இனி கவனமாக இருப்போம் என்று மனதை தளரவிடாமல் ஒரு மனிதன் இருந்தால் அவனைப் பொறுத்தவரை இந்த நட்டம் துன்பத்தை தரவில்லை. அதை விடுத்து இப்படியொரு நட்டம் வந்துவிட்டதே இனி எப்படி வாழ்வது? என்று அவன் மிகவும் சோர்ந்து சோர்ந்து அமர்ந்தால் இருக்கின்ற சக்தியும் அவனைவிட்டு சென்றுவிடும். சோர்வே அவனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும். எனவே நிஜமான துன்பம் என்பதும் நிஜமான இன்பம் என்பதும் இந்த உலகில் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டிட வேண்டும். அப்படியானால் துன்பம் என்று உணர்வதும் இன்பம் என்று உணர்வதும் பொய்யா? என்றால் அது பொய் என்று உணரும் நிலை வரும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்கும் அது புரியும். ஏனென்றால் பக்குவம் அடைய அடையத்தான் எது நிஜமான துன்பம்? எது நிஜமான இன்பம்? என்பது மனிதனுக்குத் தெரியும். இறைவனின் கருணையால் இது போன்ற ஞானக் கருத்துக்களை அசைபோட்டாலே வாழ்வின் எதிரே எத்தகைய சூழல் வந்தாலும் மனம் கலங்காமல் வாழ்ந்திடலாம்.