கேள்வி: நல்ல ஆத்மாவாக இருக்கும் ஒருவன் தனக்கு முன் ஜென்ம பாவங்களால் இப்பிறவியில் ஏற்படும் இன்னல்களால் விரக்தி உண்டாகி மேலும் மேலும் தவறு செய்யக் கூடுமல்லவா?
இறைவன் அருளால் சென்ற ஜென்மத்தில் நிறைய பாவங்களை செய்து அதற்குண்டான தண்டனைகளை இந்த ஜென்மத்தில் எவன் நுகரவேண்டும் என்று தலையிலே எழுதப்பட்டிருக்கிறதோ அவன் அதை நுகர்ந்து கொண்டிருப்பான். தண்டனைகளையும் மீறி நல்லவனாக வாழ வேண்டும் என்று எவன் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ அவன் தண்டனைகளை அடைந்தாலும் நன்மைக்குரிய குணங்களை விடமாட்டான். மேலும் மேலும் பாவங்கள் செய்ய வேண்டும் என்று எவன் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ அவன் அப்படித்தான் வாழ்வான். எனவே எப்படி பார்த்தாலும் விதிதான் அங்கு முன்னே நிற்கிறது. இதையும் மீறி ஒருவன் மேலே வர வேண்டும் என்றால் பக்தியும் தர்மமும் மட்டும்தான் அவனை காப்பாற்றும். மனித சக்திக்கு அப்பாற்பட்டு எத்தனையோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பொதுவாக மனிதனே இந்த பஞ்ச பூதத்தால் ஆன உடலை உகுத்து விட்டால் அவன் ஆத்மா எங்கு வேண்டுமானாலும் செல்லும். மனித உடல் எடுத்த பிறகுதான் அதற்கு வடிவம் எடை காலம் தூரம் நாழிகை அளவு எல்லை தேவைப்படுகிறது. உதாரணமாக இந்த அடைப்பான் தாழிட்டிருந்தால் மனிதனால் வெளியே செல்ல முடியாது. திறந்தால்தான் வாசல் வழியாக வெளியேற முடியும். ஆனால் இவனுக்குள் இருக்கின்ற ஆத்மா சுவரோ கல்லோ மரமோ கதவோ அல்லது மேற்கூரையோ எதற்குள் வேண்டுமானாலும் புகுந்து மறுபக்கம் சென்று விடும். இதே ஒரு அதிசயமில்லையா?