கேள்வி: கடன் தொல்லைகளில் இருந்து விடுபட?
இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் இயம்புவது யாதென்றால் நல்விதமாய் கடன் எனப்படும் துன்பம் மட்டுமல்ல ஒரு மனிதன் சந்திக்கின்ற நுகர்கின்ற எந்தத் துன்பங்களாக இருந்தாலும் அந்தத் துன்பத்திற்கு விதையை அவன்தான் என்றோ போட்டிருக்கிறான். எவன் ஒருவன் அழுது கொண்டே வாழ்கிறானோ எத்தனையோ மனிதர்களை அவன் அழ வைத்திருக்கிறான் என்பது பொருள். எவனொருவன் நன்றாக மகிழ்ச்சியோடு கூடுமானவரை வாழ்கிறானோ பலரையும் அவன் மகிழ்ச்சியோடு வாழ வைத்திருக்கிறான் என்று பொருள். எனவே இதில் கடன் எனப்படும் துன்பத்தை எடுத்துக் கொண்டால் இதுபோல் ஏனைய துன்பங்களைப் போலதான். தொடர்ந்து செய்து வரும் பிரார்த்தனையாலும் தர்மத்தினாலும் இவைகள் குறையலாம். அதோடு மட்டுமல்ல வம்சாவளி முன்னோர்களின் தோஷங்களும் சாபங்களும் அதிகமாக இருக்கின்ற மனிதனுக்கு கடன் சுமையும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
யாங்கள் கூற வருவது மிகவும் நேர்மையாக ஒரு மனிதன் வாழ்ந்து சிந்தனையை தெளிவாக வைத்து திட்டமிட்டு வாழ்ந்து அதனையும் தாண்டி கடன் சுமை ஏற்பட்டால் அல்லது ஒவ்வொரு மனிதனும் முட்டாள்தனமாக செயல்பட்டு கடனை அதிகமாக ஏற்றிக் கொண்டால் அதை அவன் சுயமாக சிந்தித்து குறைத்துக் கொள்ள முயற்சி எடுப்பதுதான் நல்விதமான வழி முறையாகும். இதுபோல் நல்விதமாய் பைரவர் அல்லது காலபைரவர் திருவடியை அன்றாடம் வணங்குவதும் நல்விதமாய் கலப்பில்லா பசுவின் பால் கொண்டு பைரவருக்கு அபிஷேகம் செய்வதும் அதுபோல் தூய இளநீர் கலப்பில்லா சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்வதும் இவைகளால் அபிஷேகம் செய்ய முடியாத மனிதர்கள் நல்ல நறுமணமிக்க மலர் மாலை சாற்றி பைரவரை வழிபாடு செய்வதும் இதுபோல் செய்ய இயலாத மனிதர்கள் ஆறு முக நெய் தீபத்தை ஆறு தீபங்களுக்குக் குறையாமல் ஏற்றி பைரவர் திருவடியை வணங்குவதும் இவைகளை செய்ய இயலாதவர்கள் இல்லத்தில் அமைதியாக அமர்ந்து பைரவருக்குரிய மந்திரங்களை உருவேற்றுவதும், இவைகளோடு நவக்ரக வழிபாட்டை செய்து வருவதாலும் நல்விதமாய் படிப்படியாய் கடன் சுமை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவைகளை ஒரு குறிப்புக்காகக் கூறினோம்.
ஒருவன் வினவலாம் விநாயகரை வணங்கினால் கடன் சுமை குறையாதா? சிவபெருமானை வணங்கினால் கடன் சுமை குறையாதா? அம்பாளை வணங்கினால் கடன் சுமை குறையாதா? என்று தாராளமாக. தெய்வத்தின் எந்த வடிவத்தை வணங்கினாலும் பிரச்சினை தீரும் என்றாலும் விநாயகருக்குரிய வடிவம் என்று வரும் பொழுது இதுபோல் பைரவர் வழிபாட்டை குறிப்பாக யாங்கள் எடுத்து விளக்கியிருக்கிறோம். இதுபோல் மட்டுமல்லாது தில யாகத்தை முறைப்படி நன்றாக தெய்வ சமுத்திர கோட்டத்திலே சென்று செய்வதும் ஒரு முறை செய்தால் போதாது. குறைந்த பட்சம் வருடம் ஒரு முறையாவது செய்து கொண்டே இருப்பதும் கடன் சுமை குறைவதற்கு தக்கதொரு வாய்ப்பாக இருக்கும். எல்லாவற்றையும் விட பொது நல செயலுக்காக ஒருவன் கடன் பட்டால் இறைவன் தலையிட்டு அந்தக் கடனை நீக்க முன் வரலாம். சுயநலமாய் ஒருவன் கடன் படும்பொழுது அந்தக் கர்ம வினையை அவன் நுகர்ந்துதான் ஆகவேண்டும். இதோடு மட்டுமல்லாமல் வாய்ப்புள்ள அன்பர்கள் இன்னும் இன்னும் கடனை குறைக்க வேண்டுமென்றால் பசு போன்ற உயிரினங்களுக்கு உணவளிப்பதும் அதும் இயலாதவர்கள் சிறு சிறு உயிரினங்களுக்கு உணவளிப்பதுமாக இருக்கும் பட்சத்திலும் கடன் சுமை குறையும். சுக்ர வாரம் அதிகாலையிலே இல்லத்தை சுத்தி செய்து அதுபோல் மகாலட்சுமி வழிபாட்டை தொடர்ந்து செய்வதாலும் குபேர வழிபாட்டை செய்வதாலும் நவகிரக வழிபாட்டை செய்வதாலும் குறிப்பாக சுக்ர வழிபாட்டை செய்வதாலும்கூட கடன் சுமை படிப்படியாகக் குறையும்.