கேள்வி: பித்ரு தோஷம் குறைய ஆதி முதல் அந்தம் வரை தில யாகம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள் அது குறித்து:
மிகவும் கடினமப்பா. முதலில் மனிதன் மனோ ரீதியாக தயாராக இருக்க வேண்டும். பொதுவாகவே இறை பக்தியும் தர்ம சிந்தனையும் அதிகமாக இருப்பவர்களுக்கு தோஷம் குறைந்து கொண்டே வரும். எந்த விதமான வழிபாடும் செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே தில யாகம் செய்து விட்டால் மட்டும் தோஷம் குறையும் என்று எண்ணி வருபவனுக்கு வெறும் தில யாகத்தால் யாதொரு பயனுமில்லை. பித்ருக்கள் தோஷம் குறைவதற்கு தொடர்ந்து பைரவர் வழிபாடும் திருவிடைமருதூர் வழிபாடும் அவசியம். முக்கண்ணனுக்கு தினமும் பரிபூரண அபிஷேகம் செய்ய வேண்டும். இதை செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் பாலபிஷேகமாவது செய்ய வேண்டும். இது ஒரு பகுதியாக இருக்க பட்சம் (15 நாள்) குறையாது பைரவருக்கு பரிபூரண அபிஷேகமும் மறு பட்சத்திலே சந்தனக்காப்பும் மாறி மாறி செய்யப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு ஐ வதன தீபம் (ஐந்து முகம் தீபம்) ஏற்ற வேண்டும். பைரவர் சன்னிதியில் தொடர்ந்து அணையா தீபம் ஏற்றப்பட வேண்டும். பசு தானமும் பசு காப்பகத்திற்கு தகுந்த உதவிகளும் ஆலய குளத்து கயல்களுக்கு(மீன்கள்) உணவும் கொடுக்கப்பட வேண்டும். அன்னதானம் செய்யப்பட வேண்டும். இவற்றை செய்து கொண்டே ஒரு தினத்தில் (அமாவாசை சதுர்த்தி பஞ்சமி ஏகாதசி) அன்று தெய்வ சமுத்திர கோட்டம் எனப்படும் இராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி இறை தரிசனம் செய்து இவன் சக்திக்குட்பட்டு அத்தனை வழிபாடுகளையும் செய்து ஏழைகளுக்கு அன்னம் ஆடை தனம் அளித்து விட்டு அங்குள்ள விலங்கினங்களுக்கு முடிந்ததை செய்து விட்டு பிறகு அவன் தில யாகத்திலே அமர வேண்டும்.
ஆதியோடு அந்தமாக திலயாகம் என்றால் முதலில் கணபதி பூஜை குல தெய்வ பூஜை இஷ்ட தெய்வ பூஜை யாகம் நவகிரகங்களுக்கு பித்ரு தேவதைகளுக்கு சுதர்சன யாகம் இவற்றை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும். பிறகுதான் தில தொடர்பான பூஜைக்கு செல்ல வேண்டும். இவற்றை செய்து விட்டு தனுஷ்கோடி சென்று (அங்கும் யாகம் செய்தால் சிறப்பு அப்படி முடியாதவர்கள்) பிரார்த்தனை செய்து விட்டு அந்தக் கடலிலும் நீராடி விட்டு வர வேண்டும். பூஜைகள் முடிந்த பிறகும் ஒவ்வொரு மனிதனும் தானங்கள் செய்ய வேண்டும். நன்றாக வார்த்தையை கவனிக்க வேண்டும் தானம். ஏனென்றால் தோஷங்கள் போக வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படுவதால் ஆடை தானம் அன்ன தானம் இதுபோல் ஸ்வர்ண தானம் வெள்ளி தானம் இல்ல தானம் கிருடி எனப்படும் நில தானம் மாடு தானம் ஆடு தானம் கல்வி தொடர்பான தானம் மருத்துவ தானம் என்று 32 வகையான அறங்கள் இதிலே அடங்கும். இதுபோல் நீர் நிலை இல்லாத இடங்களில் நீர் நிலையை அமைத்து தருவது எல்லாம் தில யாகத்தோடு தொடர்புடையவை. ஏனென்றால் இத்தனை தானத்தோடு தொடர்பாக அவனுடைய முன்னோர்கள் கட்டாயம் பாவங்கள் செய்திருப்பார்கள். அந்தப் பாவங்கள் இந்த தானங்களின் மூலம் நிவர்த்தியாகும். இதை உரைத்தால் யாரால் இது முடியும்? என்று மனிதன் எழுந்து போய் விடுவான். எனவே அவனுக்கு சிறந்த வழி விதி வழியாக சென்று மனிதனிடம் மருத்துவனிடம் தனத்தை இழப்பது விபத்திலே சிக்கி தனத்தை இழப்பது தொலைத்து இழப்பது என்று விதி பரிகாரம் செய்து விட்டால் அவனுக்கு அது இயல்பாகத் தெரியும். இவனாக மனமுவந்து இதையெல்லாம் செய் என்றால் கட்டாயம் செய்ய மாட்டான். சொல்லி வைக்கிறோம் ஆதி முதல் அந்தம் வரை என்று இயன்றவர்கள் செய்யட்டும்.