இறைவனின் கருணையால் தொடர்ந்து தர்மங்கள் செய்து பல்வேறு பிரார்த்தனைகள் செய்து ஒவ்வொரு ஆத்மாவும் நல்கர்மாக்களை கூட்டி வாழ நல் ஆசிகளை கூறுகிறோம். ஒவ்வொரு கணமும் நாழிகையும் சதா சர்வகாலமும் இறை சிந்தனையில் இருப்பது என்பது ஏதோ சோம்பி எந்தவிதமான வேலையும் செய்யாமல் இருப்பதற்காக கூறப்பட்ட ஒருவிதமான மூடப்பழக்கம் என்று பலர் எண்ணலாம். இறைவா இறைவா இறைவா இறைவா என்று கூறிக் கொண்டே இருந்தால் ஒருவனின் வயிறு நிரம்புமா? அவன் இந்த உடல் எடுத்ததற்கு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்க வேண்டாமா? என்று எல்லாம் கூட அறிவானது வினாக்களை கேட்டுக் கொண்டே போகும். சித்தர்கள் ஆகிய நாங்கள் உடலுக்காக மட்டும் வாழாதே என்றுதான் கூறிக் கொண்டே இருக்கிறோம். உடல் சார்ந்த வாழ்வு ஒரு முழுமையான வாழ்வாக இராது. உடல் வாழ்வுக்காகத்தான் மனிதன் எல்லாப் பாவங்களையும் சேர்த்து கொள்கிறான். மனைவி பிள்ளைக்காக செய்தேன் என்று காரணம் கூறி ஒரு தனி நியாய விவாதத்தை இவன் கூறலாம். ஆனால் யாருக்காக செய்தாலும் பாவம் பாவம் தான். தாய்க்காக தந்தைக்காக செய்தேன் என்று கூறினாலும் யாருக்கும் பாவ மன்னிப்பு கிட்டி விடாது. மறந்தும் ஒரு மனிதன் பாவத்தை நினையாமலும் செய்யாமலும் விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொண்டாலே மனிதனுக்கு பல பிரச்சினைகள் தீர்ந்து விடுமப்பா. இயம்புங்கால் ஒரு மனிதனின் நல்ல எண்ணங்கள் செயல்கள் ஒரு ஆரோக்யமான அதிர்வலைகளை அவனைச் சுற்றி உண்டாக்கும். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல நல்லாரை கண்டவுடன் சந்தோஷமும் மீண்டும் மீண்டும் இவனுடன் பழக வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். நல்ல சிந்தனையற்ற ஒரு மனிதன் நல்லவரோடு பழகப்பழக காந்தமற்ற இரும்பு காந்தத்தோடு சேர்ந்து தானும் காந்தமாவதுபோல அவனுக்குள் நல்ல எண்ணங்கள் இடம் மாறும்.
ஒரு மிகப்பெரிய தனவானிடம் எவ்வளவு நாள் பழகினாலும் அந்த தனம் இவனிடம் வந்துவிடாது. அழகான தோற்றம் உடையவனிடம் அழகற்ற ஒருவன் எத்தனை ஆண்டு பழகினாலும் அந்த அழகு இவனை வந்தடையாது. ஆனால் நல்ல குணங்கள் கொண்ட ஒரு மனிதனோடு பழக்கத்தை அதிகரிக்க அதிகரிக்க அந்த அதிர்வலையின் தாக்கத்தால் அவை மெல்ல மெல்ல இவனிடமும் வந்தடையும். எனவே சதாசர்வ காலமும் மனதிலே சினமும் வாயிலே தகாத வார்த்தைகளும் பிறரை பற்றி குறை கூறுவதுமாக இருந்தால் பிறகு அதுவே இயல்பாகி சமாதானமாகி பிறகு அதுதான் சரி என்றாகி பிறகு மனமும் புத்தியும் வாக்கும் எண்ணமும் செயலும் அமைந்து விடும் என்பதால் சதாசர்வ காலமும் இறை சிந்தனையில் மனம் லயிக்க பயிற்சி எடுக்க வேண்டும். இதுபோல் நிலையை உயர்த்த உயர்த்த உயர்த்த உயர்த்த மனம் பக்குவமடைந்து பிறகு அரிவை என்ற நிலை தாண்டி சித் என்ற உன்னத நிலை அறிவு அவனுள் மலரிடத் துவங்கும் சித் எனப்படும் அந்த சித்தம் தெளிந்தால்தான் உண்மையான சித்தர்களின் வழி வாக்கு யாம் எதை ஏன் எந்த காலகட்டம் உரைக்கிறோம்? என்பது புலப்படத் துவங்கும். எனவே பாவத்தை நீக்குவதற்கு போராட வேண்டும். பாவம் செய்யாமல் இருப்பதற்கும் போராட வேண்டும் .