கேள்வி: நடைமுறையில் புலன்களை எவ்வாறு வெல்வது ?
சட்டென்று விழி மூடி விழி திறப்பதற்குள் வென்று விடலாம் அல்லது கோடானு கோடி பிறவிகள் எடுத்தும் வெல்லலாம். நீ (முன்பு) கூறினாயே திண்ணியம் (உறுதி) அது மனிதன் மனதிலே வந்து விட்டால் உடனே கூட இது நடக்கலாம். எப்படியென்றால் காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே என்ற வாசகம் ஒரு பட்டினத்தானை இல்லறவாசியிலிருந்து துறவறம் ஆக்கிவிட்டது. ஆனால் அந்த வாசகம் எத்தனை பேரை அவ்வாறு துறவறம் ஆக்கும்? அந்த வாசகத்தின் பொருள் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் எல்லோராலும் சட்டென்று எல்லாவற்றையும் மனதளவிலே விட்டுவிட்டு வெளியே வரமுடிகிறதா? எனவே பற்றும் பாசமும் தீவிர ஆசையும் இருக்கும் வரையில் மனிதனால் புலன்களை வெல்லுவது என்பது கடினம். பற்றையும் பாசத்தையும் மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே வரவேண்டும். பற்றையும் விடுகிறேன் பாசத்தையும் விடுகிறேன் என்பதற்காக குடும்ப அங்கத்தினர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்தால் அது ஒரு தோஷமாக மாறும் என்பதை மனிதர்கள் மறந்து விடக்கூடாது.
இதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு மனிதன் ஒரு பணிபுரியும் இடத்திலே பணியாற்றுகிறான். அவனுக்கென்று சில பொருள்கள் அங்கே தரப்படுகின்றன. அமர்கின்ற ஆசனம், எழுதுகின்ற எழுது பலகை இன்னும் பல பல பல. அவனுக்கு நன்றாகத் தெரியும், இவையெல்லாம் நம் பொருள்கள் அல்ல. இந்த பணி புரியும் நிர்வாகத்திற்கு சொந்தமானது. இங்கே ( நான் ) பணியாற்றுவதற்காக இவையெல்லாம் ( எனக்கு ) கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு அந்தப் பணி முடிந்தவுடன் அதனையெல்லாம் விட்டுவிட்டு இல்லம் திரும்புகிறானே? அதைப்போல இல்லமும் ஒரு பணிபுரியும் இடம். கர்மவினையால் இந்த பணிபுரியும் இடத்திற்கு வந்திருக்கிறோம். நம் வினைக்கு ஏற்ப உறவுகள் அமைந்திருக்கின்றன. இங்கே செய்யவேண்டிய பணிகளை செய்யவேண்டும். ஆனால் தீவிர பற்றையோ பாசத்தையோ வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற அளவிலே மனதிலே எண்ணத்தை வளர்த்துக் கொண்டு அதனை முறையாக ஒரு பயிற்சியாக விதவிதமாக ஒரு மனிதன் கையாண்டு பார்க்க வேண்டும்.
இந்த உணவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும். இந்த உணவுதான் என் நாவிற்கு பிடித்திருக்கிறது. இந்த பானம்தான் எனக்குத் தேவை. இந்த விதமான படுக்கைதான் எனக்குத் தேவை என்று எதையெல்லாம் ஒரு மனிதன் வேண்டும் வேண்டும் என்று எண்ணுகிறானோ அவையெல்லாம் இல்லாவிட்டால் என்ன? என்று ஒவ்வொரு முயற்சியாக செய்து பார்த்தால் கட்டாயம் எண்ணியது நிறைவேறும். ஆனாலும்கூட இதற்கு முன்னால் அவனைப் பற்றியுள்ள கர்ம வினைகளிலிருந்து வெளியே வரவேண்டும். எனவே எளிய வழி பக்தி மார்க்கம். பலவிதமான ஸ்தலங்களுக்கு சென்று மானசீகமாக பிரார்த்தனைகளை செய்து கொண்டே வர மெல்ல மெல்ல அதீத பற்றும் பாசமும் குறைய கட்டாயம் நீ எண்ணுவது போல புலன்களை முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும் மெல்ல மெல்ல வெல்லக்கூடிய நிலை வரும். பற்றையெல்லாம் விடு பாசத்தையெல்லாம் விடு என்றால் கட்டிய கணவன் எங்காவது சென்று விடுவானோ? என்று மனைவியும் அல்லது தாரம் தன்னைவிட்டு எங்காவது சென்று விடுவாளோ? என்று கணவனும் அல்லது தாயும் தந்தையும் இப்படி ஆன்மீகம் பார்த்துக் கொண்டு தங்களையெல்லாம் விட்டுவிடுவார்களோ? என்று சேய்களும் எண்ணலாம்.
நாங்கள் அதனைக் கூற வரவில்லை. எல்லாம் செய்ய வேண்டும். அதே சமயம் எதற்குள்ளும் ஆழ்ந்து விடக்கூடாது. கப்பல் பயணம் செய்ய பரந்த நீர்பரப்பு தேவை. நீர்பரப்பின் உதவியில்லாமல் கப்பல் செல்வது கடினம். நீர்தான் தனக்கு உதவி செய்கிறது என்பதற்காக கப்பல் நீரே நீ உள்ளே வா என்று கப்பலுக்குள் நீரை அனுமதித்தால் அந்தக் கப்பல் மூழ்கிவிடும் அல்லவா? அதைப்போல இந்த உலகம் இந்த உலகில் உள்ள விஷயங்கள் எல்லாம் ஓரளவு மனிதர்களுக்குத் தேவை கர்மாவை நுகர்வதற்கு. அதற்காக அதற்குள் ஆழ்ந்து விடாமல் இறை சிந்தனை கவனம் எங்கும் சிதறாமல் இருக்க வேண்டும். வேடிக்கையை சிலர் பார்த்திருக்கலாம் வீதியிலே. இரண்டு முனையிலே நீண்ட கயிற்றை கட்டி அதன் மேல் ஒரு பெண் லாவகமாக நடந்து வருவாள். கையிலே நீண்ட கோல் இருக்கும். அப்படி நடந்து வரும் தருணம் அந்த அதிசய திறமையைப் பார்த்து அனைவரும் ஆர்பரிப்பார்கள். பயங்கர கரகோஷம் செய்வார்கள். அதிலே கவனம் செலுத்தினால் அந்தப் பெண் மேலிருந்து கீழே விழுந்து விடுவாள். கீழே என்ன கூச்சல் என்ன குழப்பம் நேர்ந்தாலும் அந்தக் கயிற்றின் நுனியிலிருந்து கால் பிசகாமல் நடப்பது போல என்ன வேண்டுமானாலும் இந்த உலகில் நடந்துவிட்டுப் போகட்டும். என்ன வேண்டுமானாலும் குடும்பத்தில் நடந்துவிட்டுப் போகட்டும். அதற்கு நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துவிட்டு இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு மனது இறைவனை நோக்கியே இருக்க வேண்டும்.
இப்படியொரு பழக்கத்தை மனிதன் மெல்ல மெல்ல பழகிக் கொண்டால் கட்டாயம் நீ எண்ணுவது போல புலன்களை வெல்லக்கூடிய ஆற்றல் எல்லோருக்கும் சித்திக்கும். நீரிலே இறங்காமல் நீச்சல் பழகுவது கடினம். ஒரு வாகனத்தில் அமர்ந்து அந்த வாகனத்தை இயக்க பயந்தால் வாகனத்தை கடைவரையில் இயக்க முடியாது. அதைப் போல இந்த மனித தேகம் எடுத்து, இந்த மனித தேகத்திற்குள்ளாகவே வாழ்ந்து விடாமல் இந்த அழியக் கூடிய தேகத்தை வைத்துக் கொண்டு அழியக் கூடிய உறவுகளை வைத்துக் கொண்டு அழியக் கூடிய அற்ப சுகங்களை வைத்துக் கொண்டே அழியாத பேரின்பத்தை அடைய மனிதன் முயற்சி செய்யவேண்டும்.
ஒரு வங்கியின் மூலம் அதிக அளவு தனத்தையெல்லாம் வரை ஓலையாகக் கீறி அத்தாட்சி சான்றும் வைத்து அதனை வாங்கி வரும் மனிதன் அதனை தூரத்தில் உள்ள மனிதனுக்கு அனுப்ப எண்ணுகிறான். கவசம்போல் ஒரு உறையை தயார் செய்து அதற்குள்ளே பாதுகாப்பாக வைத்து அனுப்புகிறான். இப்பொழுது உள்ளே இருக்கும் வரை ஓலை முக்கியமா? அல்லது அதனை பாதுகாக்கும் கவசம் முக்கியமா? என்று பார்த்தால் அது போய் சேரவேண்டிய இடம் வரை இரண்டும் முக்கியம்தான். போய் சேர்ந்த பிறகு உள்ளே இருக்கும் வரை ஓலையை எடுத்து விட்டு பாதுகாப்பு கவசமாக இருந்ததை தூக்கி எறிவதில்லையா? அதைப் போல இந்த உலகமும் இந்த தேகமும் போய் சேர வேண்டிய இறைவனின் திருவடியை நோக்கி சென்று அதனை உணர்ந்து அதற்குள் பரிபூரணமாகக் கரையும்வரை இதனைக் கவசம் போல் வைத்துக் கொண்டு அந்த கவசத்திற்கு என்ன மதிப்பு தர வேண்டுமோ அந்த மதிப்பைத் தந்து பிறகு உள்ளேயிருக்கும் அந்த விஷயத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அந்த உள்ளேயிருக்கும் ஆத்மாவிற்கு முக்கியத்துவம் தந்தால் கட்டாயம் புலனை வெல்லலாம்.