அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:
இறைவனின் அருளைக்கொண்டு இயம்புகிறோம் இத்தருணம் இறைவன் அருளாலே நல்லாசி எம்முன்னே அமர்ந்துள்ள சேய்களுக்கு.
இயம்புங்கால் இறைவனை வணங்கி இறைவனை வணங்கி இறையை வணங்கி என்று யாம் துவங்குவதன் பொருள் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் வடிவம் இப்படித்தான் என்று வைத்துக் கொள்ள இயலாது. இதுபோல் வடிவத்தில் மனதை லயிக்க விட்டு பிறகு வடிவமற்ற பூரணத்தை உணர்தலே மெய்ஞானமாகும். இதுபோல் இறையென்றால் அதற்குள் பூரணம் அனைத்தும் அடங்கியது என்பதாலும் ஓர் ரூபம் ஓர் வடிவம் ஓர் நாமம் இல்லாதானே பரம்பொருள் என்றும் அந்தக் கருத்தினைக் கொண்டே யாம் பொதுவில் இறை வணங்கி என்று இயம்புகின்றோம். இத்தகு இறைதன்னை மூத்தோனாக இளையோனாக முக்கண்ணனாக மகாவிஷ்ணுவாக நான்முகனாக அன்னையர்களாக இன்னும் இன்னும் பலப்பல ரூபங்களாக மாந்தர்கள் வழிபடுவதும் வணங்குவதும் அந்தந்த மனிதனின் மனப்பான்மைக்கு ஏற்ப அவனவன் வணங்கி வருவதும் நன்றுதான்.
பின்பு என்றுதான் அனைத்தும் பூரணம் ஒன்று என்று உணர்வது? அந்த ஒன்றினை உள்ளுக்குள் உணர்ந்து அந்த ஒன்றுக்குள் மனதை ஒன்ற வைத்து அந்த ஒன்றையே ஒன்றி ஒன்றி ஒன்றி ஒன்றே ஒன்று என்று உணரும் வண்ணம் ஒரு நிலை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வரும் வரை மனிதன் அவனவன் வழியில் செல்ல அதுபோல் பரம்பொருளே வழிவிடுகிறது. அத்தகு இறைக்கு பரம்பொருளுக்கு பரிபூரண சரணத்தை மனம் வாக்கு காயத்தால் எந்த மனிதன் வைத்து விட்டானோ அவனே சாயுச்சம் சாரூபம் சாலோகம் சாமீபம் என்கிற இதுபோல் நிலைகளை அடைவான். இதுபோல் நிலைதாண்டியும் இறை இருக்கிறது என்பதால் இந்த நிலை நோக்கி இந்த சேய்கள் தொடர்ந்து வர இறைவன் அருளால் யாம் மீண்டும் நல்லாசிகள் கூறுகிறோம்.
இதுபோல் பொதுவில் வாக்கு என்றால் தனித்து என்று? என்பது ஏக ஏக மாந்தனின் வினாவாகும்.
ஆகுமப்பா பொதுவில் கூறுவதையும் அதுபோல் தனிமையில் கூறுவதையும் யாம் ஒரு பொழுதும் இறைவனருளால் பூர்த்தி என்று சொல்லவில்லை. என்றாலும் தக்க ஆத்மாக்களுக்கு புரிதலுள்ள ஆத்மாக்களுக்கு கடுகளவேனும் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை புரிந்து கொண்டு இதன் வழியில் நடக்க சித்தமாய் உள்ள ஆத்மாக்களுக்கு இதுபோல் ஓலை வாசிக்கப்பட்டாலும் வாசிக்கப் படாவிட்டாலும் யாம் இறைவன் அருளால் தோன்றாத் துணையாக இருந்து கொண்டே இருக்கிறோம் அப்பா. அப்பனே இதுபோல் இப்பிறவிக்கு தாய் தந்தை தெரிகிறது மாந்தனுக்கு. எப்பிறவிக்கும் தாய் தந்தை யார்? என்றால் அது இறைதான். அந்த இறையை உணர்வதற்கு அல்லது அந்த இறை உணர்த்துவதை உணர்வதற்கு வேண்டியது முழுக்க முழுக்க சத்தியமும் தர்மமும் மட்டுமே. இந்த சத்தியத்தையும் தர்மத்தையும் வைத்துக் கொண்டு அதன் பின்பு கடுகளவு பக்தி இருந்தால் அதுவே போதும் இறையை உணர்ந்து கொள்ள. எனவே இதுபோல் இறையை தரிசிப்பதும் இறையை தரிசித்து அதன் அருளை உணர்வதும் மிக எளிது.
இயம்பிடுவோம் மேலும். எளிது என்றால் ஏன் அது அனைவருக்கும் சாத்தியப்படவில்லை? என்று ஆய்ந்து பார்க்குங்கால் யாங்கள் அடிக்கடி கூறுவது போல மாந்தனுக்கு தான் உணர்ந்ததை தான் பார்த்ததை பிறர் நம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால் கட்டாயம் இறை சார்ந்த பலன் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
இல்லை என் அறிவு என் வித்தை என் உழைப்பு நான் முன்னேறுகிறேன். இறை எங்கே வந்தது? பிறவி எங்கே வந்தது? நவக்கிரகம் எங்கே வந்தது? இதையெல்லாம் நம்பாத மாந்தர்களும் நன்றாக வாழ்கிறார்களே? என்றால் இதுபோல் யாம் கூறியதைக் கூறுகிறோம். ஒவ்வொரு பிணி நீக்கும் மருந்து தொடர்பான அந்த விகிதத்திலே இன்ன இன்ன உட்பொருள்கள் கலக்கப்பட்டு இருக்கின்றன என்கிற குறிப்பு இருக்கும். ஆயினும் அதுபோல் வித்தை கல்லாத மனிதனுக்கு அந்த குறிப்பை வாசித்தாலும் புரியாது. பெரும்பாலும் யாரும் வாசிப்பதும் இல்லை. அதற்காக அந்த மருந்து உள்ளே சென்றால் இவனுக்கு என்னைப் பற்றித் தெரியாது. எனவே ஏன் என் கடமையை செய்ய வேண்டும்? என்று வாளாய் இருக்கிறதா? இல்லையே. மருந்தின் நுட்பம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மருந்து எப்படி வேலை செய்கிறதோ அதுபோல் பிறவி இருக்கிறது என்று நம்பினாலும் நம்பாவிட்டாலும் நவக்கிரகங்கள் வாயிலாக இறைவன் பரிபாலனம் செய்கிறார் என்பதை ஒரு மனிதன் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுபோல் நடந்து கொண்டேதான் இருக்கும் இறைவனின் விளையாடல். இதுபோல் நிலையிலே ஒன்றை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் கூட அவனவன் கர்ம பாவத்தைப் பொருத்தது.
இதுபோல் எம் சேய்களுக்கு நம்பும் சேய்களுக்கும் நம்பா சேய்களுக்கும் இனிவரும் சேய்களுக்கும், இனி எதிர்காலத்தில் இந்த ஜீவ அருள் ஓலைதன்னை நாடி வருகின்ற சேய்களுக்கும் இறைவனருளால் யாம் தற்சமயம் கயிலையில் இருந்தே நல்லாசிகளைக் கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.