கேள்வி: நமது பிரார்த்தனையை இன்னும் நேர்மையாகவும் துல்லியமாகவும் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?
இறைவன் கருணையைக் கொண்டு இதுபோல் செயலை விட செயலற்ற தன்மைதான் மனிதர்களுக்கு என்றுமே ஏற்றதாகும். மௌனமும் செயலற்ற தன்மையும் என்றுமே தன்னை உணர வைக்கும். தன்னை நன்றாக உணர்ந்த பிறகு தன்னை உயர்த்திக் கொள்ளவும் தன்னை இன்னும் மேம்பாடு செய்து கொள்ளவும் யாது செய்ய வேண்டும்? என்பதை அந்த மௌன நிலையிலேயே பரம்பொருள் உணர்த்தி உணர்த்தி மெல்ல மெல்ல ஆத்மாவை மேலே சேர்க்கும். எனவே அதனால்தான் யாம் அடிக்கடி கூறுவது மௌனம் பழகு மௌனம் பழகு, மௌனம் பழகு. அந்த மௌனத்திலிருந்து அனைத்துமே ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. வாய் பேசாதது மௌனமல்ல. மனம் பேசாமல் இருப்பதுதானப்பா மௌனம். அதையேதான் ஒட்டுமொத்த இவன் வினாவிற்கும் விடையாகக் கூறுகிறோம்.