கேள்வி: சிவராத்திரியின் சிறப்புகள் பற்றி:
கண் விழித்தல் என்றால் உறங்காமல் இருத்தல் என்று மட்டும் பொருளல்ல. உறங்காமல் இருத்தல் என்றால் என்ன பொருள் தெரியுமா? அகக்கண் விழித்தல். உள்ளே அகம் விழித்திருக்க வேண்டும். தனித்திரு விழித்திரு பசித்திரு பசித்திரு என்றால் உணவு உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல. ஆன்மீகத்தில் சென்று ஞான நிலையை அந்த உச்சாணி நிலையை அடைய வேண்டும் என்ற பசியைதான் குறிக்கிறது. எனவே விழித்திருத்தல் என்றால் விழிப்புணர்வோடு இருத்தல். மாயையில் சிக்காமல் இருத்தல். பாசங்களில் பற்றுகளில் மாட்டிக் கொள்ளாமல் இருத்தல். ஆசாபாசங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருத்தல். இதை தவிர வெறும் கண்ணை மூடி சயனத்திலே படுத்து உறங்காமல் இருந்தால் மட்டும் இறையருள் கிட்டிவிடாது. எனவே விழித்தல் என்றால் அனைத்திலும் எச்சரிக்கையாக எந்த மாயையிலும் சிக்கிவிடாமல் இருப்பதற்குண்டான ஒரு பயிற்சி ஒரு முயற்சிதான் இதுபோன்ற பூஜைகள். எனவே அந்த அளவில் இதனை தத்துவார்த்த விளக்கமாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆலயங்கள் சென்றும் வணங்கலாம் இல்லத்தில் இருந்தும் வணங்கலாம். பரிபூரணமாக விரதமிருந்து சிவ நாமத்தை ஜபிக்கலாம். அது சாத்தியமில்லாதவர்கள் குறைந்த அளவு அன்னத்தை சாரமில்லாமல் சுவையில்லாமல் ஏற்பது சிறப்பு. திரவ வடிவ அன்னத்தை ஏற்பது சிறப்பு. அவ்வாறு இல்லத்தில் இருந்து சிவ நாமத்தையும் தேவார திருவாசகத்தையும் அமைதியாக கூறலாம். ஏதாவது ஒரு ஆலயம் சென்று அனைத்து பூஜைகளிலும் கலந்து கொள்ளலாம் அல்லது ஒரு கால பூஜையில் கலந்து கொள்ளலாம். பொருள் வசதி படைத்தவர்கள் ஆலயம் சென்று பூஜைகளுக்கு உண்டான உதவியை செய்யலாம். அனைத்தையும் விட எதுவுமே செய்ய முடியாதவர்கள் அமைதியாக பஞ்சாக்ஷரத்தை மானசீகமாக ஜபித்துக் கொண்டே இருக்கலாம்.