கேள்வி: இலையை கிள்ளுவதே பாவம் என்றால் சில சுப நிகழ்வுகளுக்காக வாழை மரத்தை வெட்ட வேண்டியுள்ளது இது பற்றி:
இதனை யாங்கள் ஏற்பதில்லை. அக்காலத்தில் என்ன வழக்கம் இருந்தது? என்றால் குறிப்பாக திருமணத்தின் பொழுது ஆணும் பெண்ணும் நிறைய செடிகளை நடும் பழக்கம் குறிப்பாக வாழைக் கன்றுகளை நடும் பழக்கம் இருந்தது. அந்த வாழை வாழையடி வாழையாக தழைப்பதுபோல இவர்களின் குலம் தழைக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும். ஆனால் கால ஓட்டத்தில் எல்லாமே மாறிவிடுவதுபோல இந்த வாழை மர பழக்கமும் மாறிவிட்டது. வாழை மரத்தை வெட்டி முன்னால் கட்டுவது சுபம் அல்ல. ஒரு பச்சிளம் குழந்தையை கொன்று முன்னால் தொங்கவிட்டு உள்ளே சுப காரியம் நடத்துவதுபோல. இதுமட்டுமா மனிதன் செய்கிறான்? இன்னும் எத்தனையோ அனாச்சாரங்களை செய்கிறான். சொன்னால் விதண்டாவாதம் செய்வான். யாங்கள் ஒன்று கூறினால் வேறு ஒன்று கூறுவான். இதையெல்லாம் கொல்லாதே என்றால் பாம்பைக் கொன்று சாப்பிடும் பழக்கம் உள்ள தேசத்திலே நாகதோஷமே இல்லையே குருதேவா என்று கேட்பான்.
ஒன்றை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டிய ஆத்மாக்கள் பிறவிகள் என்று பலர் இருக்கிறார்கள். அவர்கள் எத்தனையோ பாவங்களை சேர்க்கவேண்டும் என்பது விதியாகும். அப்படி பாவங்களை சேர்க்க வேண்டும் என்றால் அவர்கள் பாவங்கள் செய்யும் பொழுது இறைவனோ நவகிரகங்களோ தலையிடாமல் ஒதுங்கி பாவங்களை இவன் சேர்க்கிறான். பலரின் கர்ம வினையை இவன் வாங்கிக் கொள்கிறான் என்று அமைதியாக இருப்பார்கள். அதனால் பாவங்கள் செய்பவர்கள் நன்றாக இருக்கிறார்களே? என்று நல்லவர்கள் மனக்குழப்பம் அடையக் கூடாது. பாவங்களை குறைத்துக் கொள்ளக் கூடிய எண்ணம் உள்ளவர்கள் பாவங்களை குறைத்துக் கொள்ள பிறவியெடுத்தவர்கள் சில துன்பங்களையும் சில வேதனைகளையும் பட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கக் கூடிய ஆத்மாக்கள் எல்லாவகையான பாவங்களையும் செய்து ஒட்டுமொத்தமாக நரகில் விழுந்து பிறகு படிப்படியாக மேலேறி வரவேண்டும். எனவே அவர்களை பார்த்து நல்ல வழியில் செல்கின்ற மனிதர்கள் மனம் குழப்பம் அடைதல் ஆகாது.