கேள்வி: அறப்பணிகளில் ஈடுபடும்போது சில நேரங்களில் மனம் தொய்வடைகிறது. அப்போது என்ன செய்ய வேண்டும்? அடுத்து கர்மவினை ஒரு மனிதனை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்படி புரிந்துகொள்வது?
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் ஒரு மனிதன் தர்மம் செய்து கொண்டே இருக்க வேண்டும். புண்ணிய காரியங்களை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அறச்செயல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். சத்தியநெறியில் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். பரிபூரண சரணாகதி பக்தியை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படியெல்லாம் வாழ்ந்தாலும் கூட எதாவது ஒரு துன்பம் வந்து மனம் சோர்ந்து விடுகிறதே? விரக்தியடைந்து விடுகிறதே? இறை பக்தியே வீண் என்பது போலெல்லாம் தோன்றுகிறதே? இத்தனை உருகி உருகி இறைவனை வணங்கினாலும் துன்பம்தான் வருகிறது என எண்ணுவது மனதின் இயல்பு. அப்பொழுது மௌனமாக தனக்குள்ளே சிந்திக்கவேண்டும் உண்மைதான்.
எத்தனையோ தர்மங்களை ஒருவன் செய்திருக்கலாம். எத்தனையோ புண்ணிய காரியங்களை செய்து கொண்டிருக்கலாம். எத்தனையோ விதமான பூஜைகளை செய்யலாம். வாழ்க்கையை தொண்டாகவே மாற்றி வாழலாம். தியாக செம்மலாகவே வாழலாம். ஆனாலும்கூட அவனுக்கும் முன் ஜென்ம முன் ஜென்ம பாவவினைகள் இருக்கிறதல்லவா? அது வந்து வாட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரி இத்தனை செய்தும் இப்படியொரு துன்பம் வந்திருக்கிறதே? இவையெல்லாம் செய்யாதிருந்தால் இதே துன்பத்தின் தாக்கமும் அளவும் எந்தளவிற்கு இருந்திருக்கும்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தர்ம வழியில் சத்திய வழியில் பக்தி வழியில் சாத்வீக வழியில் பிறருக்கு நல்லதை நினைக்கின்ற செய்கின்ற வழியில் வருகின்ற மனிதனுக்கு துன்பம் வந்தாலும் இறைவன் தலையிட்டு அதனை எப்படியெல்லாம் குறைக்க முடியுமோ குறைத்து அது விதியே ஆனாலும் மாற்றித் தருகிறார். இதற்கு நம்பிக்கைதான் முக்கியம். இதனையும் தாண்டி மனம் விரக்தி அடைந்துவிட்டால் அமைதியாக யாருடனும் பேசாமலும் ஏதாவதொரு ஆலயம் சென்று அமைதியாக அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு இட்டம் போல் விருப்பம் போல் சில ஆத்மாக்களின் நியாயமான தேவைகளை எப்படியாவது நிறைவேற்றி விடுவோம் என்று போராடி தர்ம காரியத்தை செய்தால் உடனடியாக மறுதினமே மாற்றங்கள் வந்து நல்லதொரு சூழல் ஏற்படும். எனவே இதனை நன்றாக புரிந்து கொண்டு இந்த தர்ம சூட்சுமத்தை நன்றாக செய்ய நன்மை உண்டு. குறிப்புக்காக கூறுகிறோம். இதையே உதாரணமாக பிடித்துக்கொள்ளக் கூடாது.
சில மனிதர்கள் பூர்வ ஜென்ம பாவத்தின் காரணமாக பறவைகளை சிறைபிடித்து விற்பனை செய்வார்கள். இவற்றை வாங்கி உகந்த வனாந்திரமான இடத்திலே சுதந்திரமாக பறக்க விட்டால் எத்தனை மன இறுக்கமும் ஒருசில தினங்களில் மாறிவிடும். பறவைகளை பறக்கவிடு என்பதற்காக மெனக்கெட்டு ஒரு பறவையை பிடித்து அதன் சிறகுகளை நறுக்கி அதனை பற என்றால் அது பாவமாகும். பறவையை வெளியே விடு என்றால் என்ன பொருள்? பறவை எப்படி சிறைபட்டு நொந்து இருக்கிறதோ அப்படி எத்தனையோ ஆண்களும் பெண்களும் சில வேதனையான விஷயங்களை வெளியே சொல்லாமல் இருப்பார்கள். சில நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதே சமயம் அதற்கான சூழல் இராது. தனமும் இராது. அவர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்னர் அந்த உதவியை செய்ய வேண்டும். குறிப்பாக இடர்பாட்டில் வேதனையில் இருக்கின்ற பெண்களுக்கு இன்னும் சரியாக கூறப்போனால் எங்கெல்லாம் பெண்கள் துன்பத்தில் இருக்கிறார்களோ அவர்களின் நியாயமான துன்பங்களையெல்லாம் யார் தீர்த்து வைக்கிறார்களோ அவர்களுக்கு இறையருள் பரிபூரணமாக உடனடியாகவே கிட்டும் என்பதை யாங்கள் கூறுகிறோம். அதைப்போல யாரையும் துன்புறுத்தக்கூடாது. குறிப்பாக பெண்களை எந்த விஷயத்திலும் யாரும் துன்புறுத்தாமல் வாழ்ந்தால் அதே இறையருள்தான்.
ஆனாலும்கூட இவையெல்லாம் தெரிந்தாலும் என்னுடைய சூழ்நிலை நான் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று ஒரு மனிதன் தொடர்ந்து தவறுகளை செய்தால் அதன் விளைவுகளை அவன் எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். எனவே இதுபோல் நல்விதமான வழிமுறையை தர்மத்தை பின்பற்றிக் கொண்டே வந்தால் பாவ கர்மாக்கள் குறையும். பாவ கர்மாக்கள் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எவ்வாறு ஒரு மனிதன் புரிந்து கொள்ள முடியும்? என்றால் சினம் குறைந்து விடும். பொறாமை இல்லாத மனோநிலை வந்து விடும். ஆற்றாமை இராது. யார் மீதும் எதற்காகவும் ஆத்திரமும் எரிச்சலும் வராது. தனக்கு தீமை செய்த மனிதன் மீது கூட அன்பு பெருகும். இப்படியொரு மனம் யாருக்கு மெல்ல மெல்ல வளர்கிறதோ அவர்களுக்கு பாவங்கள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே இருக்கிறது என்று பொருளாகும்.