நாங்கள் ஆலயத்திற்கு செல்லும் பொழுது லிங்க ஸ்வரூபத்தை வணங்குவதா? அல்லது சுடரை ஆராதிப்பதா? எதில் ஒன்றுபடுவது?
இறைவனின் கருணையைக் கொண்டு யாம் கூறுவது என்னவென்றால் இறையை உணர்வதற்கு உண்டான கரணங்களே புறத்தோற்றங்களே இத்தனையும். ஆலயமாக இருக்கட்டும் தெய்வ வடிவங்களாக இருக்கட்டும். அங்கே நடக்கின்ற புற சடங்குகளாக இருக்கட்டும் தீப ஆராதனையாக இருக்கட்டும் ஒலிக்கின்ற மணியாக இருக்கட்டும். மனிதரின் மனோநிலையும் மன பக்குவமும்தான் இறைவனை உணர்வதற்கு உண்டான ஒரு கருவியாகும். உதாரணமாக உரத்து மந்திரங்களை சொன்னால்தான் சிலருக்கு இறைவனை வழிபட்ட திருப்தி ஏற்படும். அப்படி ஒரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறு செய்துவிட்டுப் போகட்டும். சிலருக்கு மனதிற்குள் மந்திரத்தை உச்சரித்தால்தான் இறைவனை திருப்தியாக வழிபட்ட ஒரு நிலை ஏற்படும். அப்படிப்பட்ட மனிதன் அப்படியே வணங்கிவிட்டு செல்லட்டும். இன்னும் சிலருக்கோ இன்னவன் கூறியதுபோல கண் மூடி மௌனமாக இருந்தால்தான் இறைவனை வணங்கியது போல் தோன்றும்.
இறைவன் காட்சி தந்தது போலவும் தோன்றும். அப்படியொரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறே செய்துவிட்டுப் போகட்டும். இது மனிதன் வளர வளர மாறக் கூடிய நிலையாகும். எனவே கருவறையின் முன்னால் நிற்க வேண்டும் விழி மூடவேண்டும் அல்லது விழி திறக்க வேண்டும் அல்லது லிங்க ஸ்வரூபத்தையோ அம்பாளையோ பார்க்க வேண்டும் அல்லது ஆராதனையை காதால் கேட்க வேண்டும். மந்திரங்களை கேட்க வேண்டும் அல்லது தீப சுடரை உற்றுப் பார்க்க வேண்டும். இப்படி எதையும் நாங்கள் கூறவில்லை. மனதில் இறை பற்றிய சிந்தனை இருக்கிறதா? இறைவனை இந்த வடிவத்தில் பார்த்தால் என் மனம் ஏற்றுக் கொள்கிறது என்று ஒரு மனிதனுக்கு ஒரு வடிவம் பிடித்திருக்குமே? அந்த வடிவத்தை மனதில் கொண்டுவந்து வைத்து விட்டால் போதும். இறை சிந்தனை இருந்தால் போதும். விழி மூடி வாய் மந்திரங்களை உச்சரிக்க உடலெங்கும் திருநீறு பூசியிருக்க சிந்தனை எங்கோ இருந்தால் அதனால் பலனேதுமில்லை. அங்கே ஒரு கணமாவது வேறு சிந்தனை ஏதுமில்லாமல் அதுபோல் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை லிங்க வடிவமாகவோ அல்லது வேறு எந்த வடிவத்தில் எண்ணினால் மனம் சிக்கென்று பிடித்துக் கொள்கிறதோ அந்த வடிவத்தில் நினைக்க பிடித்துக் கொள்ள நன்மையாகும் அதே வழிபாடாகும்.