ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 420

கேள்வி: அகோரிகள் இறந்த உடலை இறைவனுக்குப் படைத்து அதை பச்சையாக உண்கிறார்கள். இதை இறைவன் ஏற்றுக்கொள்கிறாரா?

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் வினாவிற்குள் புகுவதற்கு முன்னால் மனிதர்களை பார்த்து ஒன்று கேட்க வேண்டும். மனிதர்கள் மட்டும் வேறு வேறு விலங்குகளை வேட்டையாடி உண்ணலாம் தவறொன்றுமில்லை. அதை நியாயப்படுத்துகிறான் மனிதன். அது குறித்து எதாவது கூறினால் இதை உண்டால்தான் பலம் உடலுக்கு ஆற்றல் என்று கூறுகிறான். அதோடு மட்டுமல்லாமல் அதற்கு வேறு வேறு வர்ணம் பூசுகிறான். பிற உயிரைக் கொன்று உண்ணாதே. உன் வயிறு என்ன சுடுகாடா? என்று கேட்டால் அதனை மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதேதோ காரணங்களை கூறுகிறான். எத்தனை நியாயமான காரணங்களை மனிதன் கூறினாலும் உயிர்களை கொன்று ஒரு மனிதன் தின்னும்வரை அவன் இறையருளை கடுகளவு கூட பெறமுடியாது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும். அதற்காக சைவமாக இருக்கிறேன் என்று ஒரு மனிதன் மற்ற அனாச்சாரங்களை செய்தால் இறைவன் ஏற்றுக் கொள்வார் என்று எண்ண வேண்டாம். சைவமாக இருப்பதும் ஒரு நல்ல கொள்கை ஒரு நல்ல சிந்தனை நல்ல குணம். அதோடு பிற நல்ல குணங்களையும் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டிட வேண்டும். அறியாமையால் ஒரு மனிதன் இந்தத் தவறை செய்தால் இறைவன் மன்னித்து விடுவார். அறிந்த பிறகு அதைத் தொடர்ந்தால் தவறாகும்.

நிலைமை இவ்வாறிருக்க வலிமையான மனிதன் விதவிதமான பொறிகளை வைத்து விலங்கை பிடித்து உண்ணுகிறான். விலங்குகள் துடித்தாலும் மனிதனுக்கு கவலையில்லை. ஆனால் மனிதனைவிட ஆற்றல் உள்ள ஒருவன் மனிதனை வேட்டையாடித் தின்றால் மட்டும் அவன் அசுரன். இந்த வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? மனிதன் விலங்கைக் தின்னுவது நியாயம் என்றால் மனிதனை இன்னொருவன் வேட்டையாடி தின்றாலும் இறைவன் பார்த்துக் கொண்டிருப்பார். நடந்தது நடந்து கொண்டிருக்கிறது இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்றெல்லாம் கூறக் கூடாது. எனவே ஒரு விலங்கைக் கூட இந்த உலகில் எந்த மனிதனும் துன்புறுத்துவதில்லை, ஆராய்ச்சி என்ற பெயரில் அனாச்சாரம் செய்வதில்லை, உணவுக்காக கொன்று தின்பதில்லை என்ற உறுதி எடுத்துக் கொண்ட பிறகு மனிதனை வேறு யாரும் வேட்டையாடாமல் இருந்தால் அது குறித்து சிந்திக்கலாம். அடுத்ததாக எந்த நிலையிலும் எந்த ஒரு உயிரையுமே அடித்து துன்புறுத்தி உணவாக ஏற்பதை யாங்களோ இறைவனோ விரும்புவதில்லை. அடுத்து இறைவன் இதையெல்லாம் கேட்டாரா? என்று கேட்டால் பிறகு இறைவன் மற்றவற்றைக் கேட்டாரா? என்று மனிதன் கேட்பான். எனவே மனிதனாக உணர்ந்து இந்த உயிர்க் கொலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சாத்வீக வழியில் வந்தால்தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும்.

இப்பொழுது இன்னவன் கேட்ட அகோரி தொடர்பான வினாக்களுக்கு வரும் பொழுது உண்மையான ஞானிகளும் மகான்களும் இந்த உலகில் எப்படி குறைவோ எப்படி அவர்களைப்போல் வேடமிட்டவர்கள் அதிகமோ அதைப்போல அகோரிகள் போல் வேடமிட்டவர்கள்தான் அதிகம். உண்மையான அகோரியின் தத்துவம் என்ன? பஞ்சபூத மாற்றங்களை எதில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றலாம். மனிதன் அருவறுக்கும் ஒரு பொருளை உண்ணக் கூடிய பொருளாக மாற்றலாம் என்ற தத்துவம்தான் இது. இறந்த மனித உடலை உண்கிறார்கள் என்றால் அப்படியல்ல அதன் பொருள். இறந்து போன அந்த உடலை வேறு ஒரு கனிவகையாக மாற்றிதான் உண்மையான அகோரி உண்ணுவான். அந்த ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அந்த நிலைக்கு எவன் சென்றானோ அவனை வேண்டுமானால் ஓரளவு அகோரி என்று கூறலாம். மற்றவர்கள் எல்லாம் ஏதோ அந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதுவாக முயற்சி செய்கிறார்களே தவிர எம் நோக்கிலே அவர்களையெல்லாம் ஏற்பதில்லை. எனவே இதுபோன்ற அனாச்சாரமான விஷயங்களை ஒருபொழுதும் சித்தர்கள் ஏற்பதில்லை. உச்ச நிலை ஞானம் பெற்றவர்கள் எதையும் செய்கிறார்கள் என்றால் அந்த ஞானத்தை பெறாதவர்கள் அதைப்பார்த்து புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதைப் போல செய்தால் அது ஏற்புடையது அல்ல. எனவே இது எப்படிப் பார்த்தாலும் அனாச்சாரமே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.