கேள்வி: சப்தரிஷிகள் என்பவர்கள் யார் ?
இறைவன் அருளால் கூறுவது என்னவென்றால் இதுபோல் புலஸ்தியர் பிருகு என்றெல்லாம் வரிசை கிரமமாக கூறுவார்களே இவர்களை மட்டும் சப்தரிஷிகள் என்று எண்ண வேண்டாம். இதுபோல் நல்விதமாய் சப்தம் என்ற ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொண்டு ஏழு என்று குறிப்பிடக் கூடாது. இதுபோல் இந்த ரிஷிகளுக்குண்டான தன்மைகளை யாரெல்லாம் பெறுகிறார்களோ இந்த ரிஷிகளின் போதனைகளை ஒலியாக உள்வாங்கி யாரெல்லாம் தவம் செய்து இந்த ரிஷிகளுக்கு சமமாக ஆக முயற்சி செய்கிறார்களோ ஆக முயன்று அந்த நிலையை நோக்கி செல்கிறார்களோ அனைவருமே எம்மைப் பொருத்தவரை சப்தரிஷிகள்தான்.
இந்த சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டலம் என்பது ஒரு குறிப்புக்காக கூறப்படுவது. இவர்களைப்போல் இன்னும் பலரும் வர வேண்டுமென்றுதான் இவர்கள் இன்னமும் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு செல்வந்தன் தன்னிடம் வேலை பார்ப்பவனுக்கு எத்தனைதான் அள்ளித் தந்தாலும் எத்தனை நாள்தான் இவன் என்னிடம் அடிமையாக வேலை பார்ப்பது? என்னைப் போலவே இவனும் செல்வந்தன் ஆக வேண்டும் இறைவா என்று ஒருபொழுதும் அவன் பிரார்த்தனை செய்ய மாட்டான். ஆனால் மகான்களும் ஞானிகளும் ரிஷிகளும் சித்தர்களும் கணத்திற்கு கணம் இறைவனிடம் கேட்பது என்னவென்றால் அத்தனை மனிதர்களும் எங்களையும் எங்களைத் தாண்டி செல்ல வேண்டும் என்றுதான் தவம் செய்து கொண்டிருக்கிறோம்.