கேள்வி: சித்தர் அருட் குடிலில் இராமாயண பிரசங்கம் நடத்த அனுமதி தர வேண்டும்:
இறைவன் அருளால் இங்கு வருகின்ற அன்பர்கள் பாரி ஆய் பேகன் போன்றோர் இருந்த பகுதியிலிருந்து வருகின்ற பலரும் ஒருமுறை எம்மை நோக்கி ஒரு வினா வைத்தார்கள். எங்கெல்லாம் இராம நாமம் உச்சரிக்கப்படுகிறதோ எங்கெல்லாம் ஆத்மார்த்தமாக இராமாயணம் ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் ஏதாவது ஒரு வடிவிலே ஆஞ்சநேயர் வருவார் என்று கூறுகிறார்கள். பல இடங்களில் அது நடந்திருக்கிறது. இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த குடிலிலே இராமாயணத்தை நல்ல முறையில் ஓதினால் அதைப் பலரும் வந்து அன்றாடம் கேட்டால் அதன் மூலம் ஆஞ்சநேயர் தரிசனம் கிடைக்கலாமே என்ற ஒரு நல்ல எண்ணத்திலே ஒரு வினாவை எழுப்பினார்கள். இதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. தாராளமாக இதுபோன்ற ஒரு சத்சங்கத்திலே இராமாயணத்தை ஓதலாம். ஓதலாம் என்று நாங்கள் அனுமதித்து விட்டால் அடுத்ததாக இதழ் ஓதும் மூடன் கேட்பான். இதற்கு உண்டான செலவினங்களுக்கு எங்கு செல்வது? இதற்கு உண்டான நடைமுறையை எங்கிருந்து பார்ப்பது? ருணம் பெற்றால் ருணம் வந்துவிட்டது என்று எல்லோரும் கூறுகிறார்களே? என்று. நாங்கள் ஒரு நல்லதை செய் என்றுதான் கூற இயலும். நாங்களே எல்லாவற்றையும் நடத்த இயலாது. எனவே நல்ல செயலை தாராளமாக செய்யலாம். ஆஞ்சநேயர் வருகிறாரா? இல்லையா? என்பது அவனவன் ஆத்மார்த்தமான பக்தியைப் பொறுத்தது.