ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 453

கேள்வி: எலுமிச்சையை வேலின் மீது குத்துவது நல்லதா?

வேலை எடுத்து மனிதன் மீது குத்தலாம் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. இறைவனின் அருளாலே கூறவருவது என்னவென்றால் அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் பழத்தின் ஆற்றல் எத்தனையோ இருக்கிறது. இறைவனை பூஜை செய்யும் பொழுது கனி வகைகளில் புஷ்பங்களில் பதார்த்தங்களில் அரசக்கனி அவசியம் வைக்கப்பட வேண்டும். இறைவனுக்கு பரிபூரண பூஜையை செய்யும் பொழுது ஏராளமான அரசக்கனியை இறைவன் திருவடிகளில் வைத்து ஆரமாக கோர்த்து இறைவனுக்கு அணிவிப்பதும் நல்லதொரு பலனைத் தரும். அதோடு மட்டுமல்லாமல் இல்லத்தில் தோஷம் வாஸ்து குறைபாடு அதர்வண குற்றம் செய்வினை தோஷம் பிரச்சினை சண்டை மனஸ்தாபம் உடல் பிணி என்றெல்லாம் மனிதன் வருந்துகிறானே? இவர்கள் அதிக அளவு அரசக்கனியால் இறைவனை ஆராதனை செய்து எத்தனை கனிகள் கொண்டு இறைவனை வணங்குகிறானோ அதில் பாதி கனிகளை இறைவனின் திருவடியில் வைத்துவிட்டு மீதி கனிகளை இல்லத்தில் வைத்து தூப தீபங்கள் காட்டி வழிபாடு செய்தால் மேற்கூறிய தோஷங்கள் குறையும். அந்தளவில் அரசக்கனியை ஏற்றுக்கொள்ளலாம். எங்கு சென்றாலும் பூஜை செய்து அருகம்புல் எடுத்து செல்வது போல அரசக்கனியையும் உடன் எடுத்து செல்வது ஆக்கபூர்வமான ஒரு பாதுகாப்பு வளையத்தை தரும். எனவே அதிக இறையாற்றலை பெற்றுத் தரக்கூடிய கனிகளில் அரசக்கனியும் ஒன்று.

அரசக்கனி வைத்திருந்தால் நல்ல பலன்கள் உடன் நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசக்கனியை வலது உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டு அதிக அளவு மந்திர ஜபத்தை உருவேற்றினால் அந்த அரசக்கனியினால் மனிதனுக்கு நற்பலன்கள் ஏற்படும். அதைப்போல இறைவனின் பிரசாதமான அரசக்கனியை காய்ந்த பிறகு தூக்கி எறிவதா? அல்லது அதனை உட்கொள்ளலாமா? என்றால் கனிச்சாறாக தாராளமாக உட்கொள்ளலாம். தவறொன்றுமில்லை. சில அரசக்கனிகளை மட்டும் பூஜைக்கு வைத்துக் கொள்ளலாம். எனவே இந்த அடிப்படையில் அரசக்கனியை ஆதரிக்கிறோம் வேறு அடிப்படையில் அல்ல.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.