கேள்வி: தத்தெடுத்த குழந்தை வளர்த்த பெற்றோருக்கு செய்யும் அர்க்யம் தர்ப்பணம் அவர்களின் ஆத்மாக்களுக்கு சென்றடையுமா?
இறைவனின் கருணையால் சில காரண காரியங்களால் முன்னோர்களுக்கு கர்மம் செய்ய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். அது ஒருபுறமிருக்கட்டும். வாழும் பொழுதே ஒரு மனிதன் நிறைய புண்ணியத்தை சேர்த்து பக்தி வழியில் சென்று இறையருளை பெற்று விட்டால் அவன் வாரிசுகள் அவனுக்காக செய்ய வேண்டியது எதும் இல்லை. வெளியூரிலே தனத்தை தொலைத்துவிட்ட மனிதனுக்குதான் அவன் ஊரிலிருந்து தனம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கையிலே எப்பொழுதுமே தனம் அதிகமாக இருப்பவனுக்கு யாரும் தனம் அனுப்ப வேண்டியது இல்லை. எனவே என் பிள்ளை எனக்கு காரியம் செய்வானா? எனக்கான புண்ணியத்தை சேர்ப்பானா? என்று கேட்பதை விட என் பிள்ளை என்ன செய்வது? நானே நிறைய தர்மத்தை செய்கிறேன். என் பிள்ளைக்கும் அதை காட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று இவன் தர்மம் செய்வது மட்டுமல்லாமல் இவன் பிள்ளையையும் தர்மவானாக மாற்றிவிட்டால் அந்த தர்மவான் தனியாக இவனுக்கென்று எதுவும் செய்யவேண்டாம். அவனை தர்மவானாக மாற்றிய பலனே இவனை எப்பொழுதும் காலகாலம் பிறவிதோறும் ஆதரிக்கும் அருளை சேர்த்து தரும்.