கேள்வி: குறிப்பாக ஆராய்ச்சிக் கல்வியில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?
இறைவனின் கருணையாலே எப்படி இயல்பாக சிலருக்கு செல்வம் சேருகிறதோ இந்த உலகியல் கல்வியும் சிலருக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. சிலர் எத்தனை முயற்சி செய்தாலும் அந்த அறிவு ஆற்றல் வராமல் போய்விடுகிறது. இதுவும் கர்மவினையின் காரணம்தான். எனவே பாவங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் பொழுது கல்வியில் உள்ள தடையும் நீங்கி விடும். இருந்தாலும்கூட வழிபாடு எனும்பொழுது ஒருவன் விரும்புகின்ற அந்தக் கல்வியிலே தீவிர கவனமும் விரக்தியடையாமல் தொடர்ந்து முயற்சி எடுத்து அதனை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நிலைக்கு தன்னை வைத்துக் கொள்ள வேண்டும். மனம் சோர்ந்து விடுகிறது படித்தாலும் மனதில் நிற்பதில்லை மறந்து விடுகிறது என்றெல்லாம் மனிதன் அயர்ந்து விடுகிறான். அவனுக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுகிறான்.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ஒன்றைக் கற்கும் ஆற்றலை ஆர்வத்தை மனிதன் வளர்த்துக் கொள்வதோடு லட்சுமி ஹயக்ரீவரையும் அன்னை கலைவாணியையும் தொடர்ந்து மானசீகமாக ஆத்மார்த்தமாக வணங்கிவந்தால் விரும்புகின்ற ஆராய்ச்சி கல்வி எதுவாக இருந்தாலும் கட்டாயம் அது வெற்றிபெறும். ஆனால் ஒன்று தன்னிடம் உள்ள கல்வியை வித்தை ஆற்றலை பிறருக்கு கற்றுக் கொடுக்க மாட்டேன் என்றால் அதுவும் பாவம் சேர்க்கக்கூடிய ஒரு நிலைதான். எனவே நன்றாக கல்வி கற்பதும் ஆராய்ச்சி பண்ணுவதும் அல்ல அதனால் சமுதாயத்திற்கு நல்ல பலனையும் தரவேண்டும். அதுதான் கல்வி கற்ற மனிதனின் கடமை. எல்லாவற்றையும் விட உண்மையை பேச தர்மத்தை செய்ய சாத்வீகத்தை கடைபிடிக்க பிறரை அனுசரித்து வாழ நன்மையை செய்ய சுயநலத்தை விட்டுவிட கற்றுக் கொடுக்காத கல்வி கல்வியே அல்ல. ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு மனதளவில் ஆக்காத கல்வி கல்வியே அல்ல என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.