கேள்வி: செண்பகாதேவி அம்மனை பற்றியும் அங்கே வாழும் பெண்மணியை பற்றியும் விளக்குங்கள்:
இறைவன் அருளால் பொதுவாக மனித சஞ்சாரமற்ற இடங்களில் மகான்களும் ஞானிகளும் ரிஷிகளும் சென்று குறுக்கீடுகள் இல்லாமல் தவம் செய்ய வேண்டும் என்பதற்காக அதுபோன்ற இடங்களை தேர்ந்தெடுப்பது உண்டு. இன்னவன் கூறிய இடத்தில் இன்றும் அரூப நிலையிலேயே பல்வேறு ரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற இடங்களுக்கு மனிதர்கள் செல்வதை நாங்கள் குற்றம் என்று கூறவில்லை. ஆனால் அநாகரீகமான செயலை செய்யாமல் அந்த இடத்தின் புனிதத்தை களங்கப்படுத்தாமல் அமைதியான முறையில் வணங்கி விட்டு வருவது நன்மையை தரும். ஒருவேளை ஆர்வத்தின் காரணமாக இது போன்ற மலைப் பகுதிக்கோ அருவிப் பகுதிக்கோ அல்லது உட்புற வனாந்திரத்திற்கோ திரளாக மனிதர்கள் செல்லும் பொழுது அங்கே பக்தி குறைந்து ஒருவகையான பொழுதுபோக்கு நிலை உருவாகி விடுகின்றது. அதுபோன்ற நிலை அங்கு வந்துவிட அனாசாரமான வார்த்தைகள் அங்கு பெருக பெருக அங்குள்ள மகான்கள் சூட்சுமமாக இடம் பெயர்ந்து விடுவார்கள். இதை மனதிலே வைத்து இது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் மற்றபடி எந்தவொரு தனிப்பட்ட மனிதர் குறித்தும் இத்தருணம் எம்மிடம் வினவ வேண்டாம்.