கேள்வி: சித்தர் அருட்குடிலை நோக்கி பல வருடங்களாக வருபவர்களுக்கு நோயிலிருந்து விடுதலையும் வறுமையிலிருந்து விடுதலையும் தராமல் எங்களை ஓட வைக்கிற ஓட வைக்கின்றீர்களே? இது தகுமா ஒரு தகப்பன் இடம் குழந்தைகள் ஏதாவது கேட்டால் கூடுமானவரை தகப்பன் மறுப்பதில்லை. ஏதோ ஒருவருக்கு மட்டும் நோயை நீக்கி விட்டால் மட்டும் போதாது எங்கள் எல்லோருக்கும் நோயை நீக்க வேண்டும். அப்படி ஏற்பட்டால் இன்னும் ஆன்மீக முன்னேற்றம் தர்மம் சத்தியம் நீங்கள் கூறியபடி நடக்கும். பின்னர் உரைப்போம் என்று ஏதோ முழு நிவாரணம் அளிக்காத மருந்துகளை எங்கள் ஞானத் தகப்பன் சொல்வது பொருந்துமா? இது தகுமா? நீங்கள் கொடுத்த உயிர்தான். நீங்கள் எங்களுக்கும் தர்ம சிந்தனை வைத்தால் தானே நாங்கள் பிழைக்க முடியும் சிறைச்சாலை இன்னும் இந்த பூமியிலே சித்தர் சித்தர் அருட்குடிலை நோக்கி வரும் எங்களுக்கு நன்னடத்தையில் பெயரிலே நோய் வறுமையில் இருந்து விடுதலையும் வானுலக சட்டங்களை தயவு செய்து மாற்றி கருணை செய்யுங்கள். நோய்களுக்கு உரிய மருந்துகளை சொல்லுங்கள் ஐயா இந்த தடம் தான் மெய்யான இடம் மெய்யான வழி மெய்யான கடவுள் உயிர் நடுக்கத்தோடு வேண்டுகிறோம் காத்தருள்வாய் ஈஸ்வரா உன்னிடம் உன்னை தானப்பா கேட்கிறேன் பதில் கூறப்பா.
பதில்: இறைவன் அருளால் நோய் நீக்க கூறுகிறான். இவன் மட்டுமல்ல. நோய் எங்கே இருக்கிறது என்று மனிதர்களுக்கு இன்னும் புரியவில்லையப்பா. அவனவன் மனதில் தான் நோய் இருக்கிறது. மனதிலே இருக்கின்ற நோய் நீங்கி விட்டால் உடலிலும் நோய் நீங்கிவிடும். நாங்கள் தான் ஆதியோடு அந்தமாக தர்மம் தர்மம் தர்மம் என்று கூறுகிறோம். ஆனால் கையிலே இருக்கின்ற தனத்தை எல்லாம் தனக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்கும் வரையில் ஒரு மனிதனுக்கு துன்பம் அத்தனை எளிதாக தீராது. இன்னொன்று சுருக்கமாக ஒருவனின் எதிர்கால விதி அறிந்து தான் நாங்கள் பல்வேறு தருணங்களில் மௌனம் கடைபிடிக்கிறோம். ஆக நோயாக இருக்கட்டும் வேறு பிரச்சினையாக இருக்கட்டும் அது வந்ததின் காரணம் அந்த பாதிப்பை பிறர் பார்க்கும் பொழுது ஆஹா இந்த மனிதனை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. நல்ல மனிதனாக இருக்கிறானே அவனுக்கு ஏன் இந்த சோதனை என்று கூறலாம். ஆனால் அந்த மனிதனின் பாலிய (முன்) காலத்தை அறிந்த இன்னொரு மனிதன் என்ன கூறுவான். இவனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவன் பால்ய (சிறு) வயதிலேயே என்னென்ன செய்தான் என்று எமக்கல்லவா தெரியும் என்று அவனைப் பற்றி அறிந்தவர்கள் கூறுவார்கள்.
அதைப்போலத் தான் இறைவனும் நாங்களும் நவகிரகங்களும் எம்முன்னே அமர்கின்ற மனிதனும் கோடானு கோடி பிறவிகளின் பாவகர்மங்களை பார்க்கிறோம். அதனால் தான் மீண்டும் மீண்டும் நாங்கள் கூறுகிறோம். தர்மத்தை வலியுறுத்தி அது ஒன்றுதான் எளிது என்று. ஆனால் அதை நோக்கி வரமாட்டேன் என்று அவன் விதி அவனை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது எதுவும் தீர்வுக்கு வராதது போல் தான் இருக்கும். அதனையும் தாண்டி இறைவனிடம் மன்றாடி நாங்கள் பலருக்கு தீர்வை தந்து கொண்டிருக்கிறோம். இல்லை இங்கு வந்து இந்த ஓலையிலே வாக்கை கேட்டு ஒரு பிரச்சனை கூட எமக்கு தீரவில்லை என்று கருதக்கூ டியவர்கள் தாராளமாக வேறு ஒரு நிலையை நோக்கி செல்லலாம் என்று பலமுறை நாங்கள் கூறியிருக்கிறோம்.
ஆதியிலேயே கூறிவிட்டோம் நோய் என்றால் என்ன? அந்த நோய்க்கு என்ன நிவாரணம்? என்று அதன் பிறகு வறுமே நீங்க என்ன வழி? என்றும் கூறிவிட்டோம். மீண்டும் சுருக்கமாக கூறுகிறோம். ஒருவனிடம் இருக்கக்கூடிய துன்பங்கள் இறைவனை வணங்கியும் தர்மம் செய்தும் தீரவில்லை என்றால் ஒன்று இன்னும் பாவம் இருக்கிறது என்று பொருள். இரண்டு அவன் செய்ய வேண்டிய கடமைகள் அதாவது ஆன்மீக ரீதியான செயல்பாடுகள் போதவில்லை என்பது பொருள். இதை மனதிலே வைத்துக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தனிமையிலே தம்மைத்தான் குற்றவாளியாக தம்மைத்தான் நீதிபதியாக எடை மேடையிலே நிறுத்தி ஏன் இது வந்தது? நாம் என்ன செய்தோம்? நமக்கு ஏன் இப்படி? என்று பார்த்தால் கட்டாயம் அவன் தவறு அவனுக்கே தெரியும். தன்னிடம் எந்த தவறும் இல்லை ஆனால் அநியாயமாக தண்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று எண்ணுவது மனிதனின் இயற்கை சுபாவம். காரண காரியம் இல்லாமல் இந்த உலகில் எதுவும் நடப்பதில்லை. எனவே ஒரு பிரச்சனை தீரவில்லை என்றால் இன்னும் வலுவான பிரார்த்தனை. இன்னும் வலுவான தர்மம். இன்னும் சரியான முறையில் சத்தியத்தை பயன்படுத்துதல். இவையெல்லாம் குறைவாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு இறை வழியில் இன்னும் உறுதியாக செல்ல வேண்டும் என்பதே பொருளாகும்.