கேள்வி: பாவங்களைக் கழிக்க வழி தெரியாமல் சுற்றித் திரிந்து எவ்வளவு நஷ்டப்பட முடியுமோ? எவ்வளவு வேதனை பட முடியுமோ? எவ்வளவு தொல்லைகளை அனுபவிக்க முடியுமோ? அவற்றை அனுபவித்து வழி தெரியாமல் இறுதியாக இந்த இடத்தில் நாங்கள் சரணாகதி அடையும் பொழுது நீ வேறு எங்காவது செல்லடா என்றால் நாங்கள் எங்கு செல்வது? பிடித்த இடம் இது ஒன்றுதானே. எனக்கு பிடித்த தகப்பனும் நீதானே. இந்த சூழ்நிலையிலே பல்வேறு குடும்பங்களில் பல பெண்களுக்கு வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. அதற்காக நாங்கள் தங்களிடம் வரும்பொழுது தம்பதி சமைதராக வாகனத்துடன் கூடிய நவகிரகங்களுக்கு அபிஷேகம் அர்ச்சனைகள் செய்ய சொல்கிறீர்கள். நாங்களும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த நாளில் நீங்கள் ஒரு உறுதி எடுங்கள். எங்களுக்கான சில பாவங்களை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். எப்படியாவது இந்த பெண்களுக்கு திருமணம் நடத்தி வையுங்கள். அம்மையப்பா அடித்தது போதும் இனி அணைத்திடல் வேண்டும். பொதுவாகவே கேட்கிறேன். இங்கு வந்திருக்கும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெற எப்போது நீங்கள் கருணை காட்டப் போகிறீர்கள்?
பதில்: இறைவன் அருளை கொண்டு என்னவன் கேட்பது எமக்கு விசித்திரமாக இருக்கிறது. திருமணம் நடக்கவில்லை என்பது துயரம் என்று கூறுகிறான். திருமணம் நடந்தவர்களை கேட்டால்தான் தெரியும். திருமணம் நடந்தது துயரமா? நடக்காமல் இருப்பது துயரமா? யாரையாவது கேட்டு பாரப்பா திருமணம் நடந்த அனைவருமே ஏன் திருமணம் நடந்தது? என்று தான் எண்ணுகிறார்கள். எனவே யாராவது ஒருவனுக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் இறைவன் அருள் அவனுக்கு இருக்கிறது. இருந்து விட்டுப் போகட்டுமே ஒருவனை இடர்படுத்துவதில் உனக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்று தெரியவில்லை. இறைவன் அருளாலே நன்றாக புரிந்து கொள்ளப்பா. திருமணம் என்ற ஒரு நிகழ்வு யார் யாருக்கு என்று நடைபெற வேண்டுமோ அந்த தினத்தில் கட்டாயம் நடைபெறும். இங்கே வந்து வாக்கை கேட்டு திருமணம் ஆகியவர்களில் கூட பலரும் கருத்தொத்து வாழவில்லை. காரணம் களத்திர ஸ்தானத்தில் தோஷம். தோஷத்தின் தாக்கம் இருக்கும் வரையில் ஒன்று திருமணம் தள்ளிக் கொண்டு செல்லும் அல்லது திருமணம் நடந்தாலும் திருப்தியான நிலை இருக்காது. திருமணம் நடக்கவில்லை அது நடந்தது தான் ஆக வேண்டும். அது துன்பமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்கிறோம் என்று எண்ணக்கூடிய ஆண்கள் பெண்கள் நாங்கள் அடிக்கடி கூறுவதாக இவன் கூறுகிறான். நவகிரக தம்பதியரை வணங்க வேண்டும் என்று அதற்காக விநாயகரை வணங்கினால் விநாயகர் திருமண நடத்தி தர மாட்டார் என்று நாங்கள் கூறவில்லை. ஆஞ்சநேயரை வணங்கினால் அவர் அருள்பாலிக்க மாட்டார் என்று நாங்கள் கூறவில்லை.
திருமண தோஷம் இருந்தவர்களின் ஜாதகத்தை நன்றாக பார்த்தாலே ஓரளவு கோள்நிலை அறிந்தவனிடம் சென்று காட்டினால் தெரியும் என்ன காரணம் என்று. அதற்கெல்லாம் பரிகாரமாகத்தானே சித்தர்களை நாடி வந்திருக்கிறோம்? இவர்கள் ஏதாவது வழி செய்ய கூடாதா? எங்கள் பாவங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டால் பாவங்களை ஏற்றதால்தான் அனைவரின் முன் அமர்ந்து யாம் வாக்கை கூறிக் கொண்டிருக்கிறோம். மனிதரிடம் பேசுவதே நாங்கள் செய்த பாவம் என்று தான் இதுவரை எண்ணிக் கொண்டிருக்கிறோம். இதை நகைப்புக்காக கூறவில்லை. மனித ரீதியாகவே கூறுகிறோம். மனிதர்களில் மிக உயர்ந்த பதவியில் ஒருவன் இருப்பதாக கொள்வோம். கோடி கோடியாக தனம் வைத்திருப்பதாக கொள்வோம். அவனை அழைத்து இதோ சாலையோரத்தில் உடலெங்கும் நோய் பற்றி ஒருவன் படுத்திருக்கிறானே? இறுதி நாளை எண்ணிக்கொண்டு இருக்கிறானே அவனோடு கை குலுக்கி கட்டிப்பிடித்து உறவாடுவாயா என்று கேட்டால் யாராவது செய்வானா? மனிதன் செய்ய மாட்டானப்பா. நாங்கள் இறைவனை அருளாணைக்காக இந்த மனித ஆத்மாக்கள் எல்லாம் இறைவனின் படைப்பு தானே மாயையில் சிக்கி தடுமாகிறது. இந்த மாயையை அகற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் இறையருளால் போராடிக் கொண்டிருக்கிறோம். எனவே உன் சேயவளும் அல்லது இங்கு இருக்க கூடிய சேய்களும் திருமணம் ஆகவில்லையென்றால் இப்பொழுது உறுதியாக கூறுகிறோம். கட்டாயம் திருமணம் நடக்கும். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் மனித ரீதியாக சில எதிர்பார்ப்புகளை எல்லாம் தள்ளி வைத்து ஒரு மனிதன் திருமணம் என்ற பந்தத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறைவனோ நாங்களோ ஜாதியை மதத்தை படைக்கவில்லை. நாங்கள் இந்த பிரிவில் இருக்கிறோம். இந்த பிரிவில் தான் பெண் வேண்டும் ஆண் வேண்டும் என்று என் முன்னே எவன் வந்தாலும் அதை நாங்கள் செவியில் ஏற்றுக்கொள்ள மாட்டோம். என் பொண்ணோ பிள்ளையோ வேறொரு பிரிவை சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு ஆணை விரும்புகிறது. அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அதை நாங்கள் கேட்க மாட்டோம். மனிதனும் மனிதனும் தான பார்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள். மனிதனும் விலங்கும் திருமணம் செய்தால் தான் அது கலப்பு மணம் என்று கூறலாம். ஒரு மனிதன் இன்னொரு மனித இனத்திலே பிறந்த பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொள்வதில் எத்தனை இடர்பாடுகளையும் தடைகளையும் மனிதன் போட்டு வைத்திருக்கிறான். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? மனிதன் தான் அறியாமையிலிருந்து வெளியே வர வேண்டும். என் பெண் படித்திருக்கிறாள் மிகப்பெரிய பதவியில் இருக்கிறாள் எனவே அவளுக்கு தகுந்தார் போல் பிள்ளையை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை பெண்ணை பெற்றவர்களும் பெண்ணும் விட்டு விட வேண்டும். என் பிள்ளை படித்திருக்கிறான் மிகவும் வசீகரமாக இருக்கிறான். மிக உயர்ந்த பதவியில் இருக்கிறான். கடல் தாண்டி பெரிய நிறுவனத்தில் இருக்கிறான். லகரம் லகரம் ஊதியம் பெறுகிறான். எனவே அதற்கு ஏற்றார் போல் தான் பெண்ணை பார்ப்பேன் என்ற கோட்பாட்டை ஒரு மனிதன் விட வேண்டும். இதையெல்லாம் எங்களால் விட முடியாது. நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றால் விதி அப்படித்தான் வேலை செய்யும். முதலில் மனித ரீதியாக முரண்பாடுகளை களைந்து விட்டால் அடுத்த கணம் திருமணம் நடக்கும். ஆனால் திருமணம் நடப்பது என்பது அல்ல பிரச்சனை. அங்கே மனம் ஒத்து எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்பது தான் பிரச்சனை.
இப்பொழுது கூறுகிறோம். ஏழாம் இடத்தையும் எட்டாம் இடத்தையும் உற்றுப் பார்த்தாலே பலரின் திருமண இலட்சணம் நன்றாகவே தெரியும். எனவே திருமணம் தாமதமாகிறது என்று வருந்த வேண்டாம். பின்னால் தெரிய வரும் தாமதமானதை விட நடக்காமல் இருப்பதே மேல் என்று ஒவ்வொரு மனிதர்களும் உணர்வார்கள். இருந்தாலும் திருமண தோஷம் குறைவதற்கு எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் செல்ல முடியாதவர்கள் மிக எளிமையாக சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை எழுந்து இல்லத்தை சுத்தி செய்து சுக்கிரனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் முறையான வழிபாட்டை செய்வதும் அதோடு மகாலட்சுமிக்கு முறையான வழிபாட்டை செய்வதும் 120 தினங்கள் இல்லத்திலே மனம் ஒன்றி இவ்வாறு வழிபாடுகள் செய்வதும் அந்த 120 தினங்களுக்குள் முடிந்தவர்கள் ஏழை ஆண் பெண் திருமணத்திற்கு முடிந்த உதவிகள் செய்தால் கட்டாயம் விதி மீறி 120 தினங்களுக்குள் திருமணம் நடக்கும் திருமணம் நடக்கும். அதைத்தான் நாங்கள் கூற முடியும் அந்த திருமணம் எதிர்பார்த்த விதமாக நடக்குமா? என்றால் அது அவனவன் தலையெழுத்தை பொறுத்தது.