கேள்வி: மனிதன் செய்யும் சிறு தவறுக்கு கூட பெரிய அளவில் தண்டனை கிடைக்கும் எனும் பொழுது ஒருவன் செய்யும் சிறு புண்ணியமும் பன்மடங்காக பெருகுமா?
இறைவன் அருளால் தெரியாமல் பாவம் செய்தாலும் தெரிந்து பாவம் செய்தாலும் விளைவு ஒன்றுதான். சிறு பாவமும் பெரிய விளைவை ஏற்படுத்தும். அதற்காக சிறு புண்ணியம் பெரிய அளவில் நன்மையை தரும் என்று நாங்கள் கூறுவதற்கில்லை. ஒருவேளை அப்படி கூறுவதாக கொண்டால் மனிதன் என்ன செய்வான்? எப்பொழுதுமே சிறிய புண்ணியங்களை தான் செய்ய துவங்குவான். இன்னொன்று புண்ணியம் என்பது செய்கின்ற மனிதனின் மனதை பொறுத்துதான். அளவை பொருத்ததில்லை. ஒரு கோடி தனத்தை ஒருவனிடம் தந்து விட்டு உள்ளத்திலே வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இவனுக்கு எல்லாம் செய்ய வேண்டிய ஒரு நிர்பந்தம் வந்துவிட்டதே? இவனுக்கெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? இவன் என் கண்ணில் படாமல் இருந்திருக்கக் கூடாதா? இவன் இல்லாமல் ஒழிந்து போகக்கூடாதா? இந்த தனத்தை எதற்காக தரவேண்டும்? என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டு ஒரு கோடி தனம் தந்தாலும் பலனில்லை. ஆனால் உளமாற ஒரு சிறு தனத்தை தந்தாலும் அது மலை போன்ற புண்ணியமாக பெருகும். அடுத்தது செய்கின்ற அந்த நாழிகை. தக்க காலத்தில் தக்க சூழலில் தக்க நேரத்தில் செய்யப்படுகின்ற உதவியை மிகப்பெரிய உதவியாகும். இதைத்தான் வள்ளுவன் காலத்தினால் செய்த உதவி என்று கூறி இருக்கிறான். இதுபோல் உதவி அல்லது புண்ணியம் என்பது செய்கின்ற அளவைவிட செய்கின்ற உள்ளத்தை பொறுத்தது. பெறக்கூடிய மனிதனின் தேவையையும் மனதையும் வாழ்வியல் சூழலையும் பொறுத்ததாகும்.