கேள்வி: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் இறைவனின் தலையில் இருக்கும் கங்கையையும் தங்கள் கமண்டலத்தில் உள்ள காவிரியையும் இணைக்க ஒரு வழி சொல்லுங்கள்:
இணைத்து விடலாம் அப்பா கவலைப்படாதே. ஒன்று தெரியுமா? மூடர்களால் வரக்கூடிய துன்பங்கள் தான் இந்த உலகிலே அதிகம். தன்முனைப்பு ஆணவம் உள்ள மனிதர்கள் பெருந்தன்மை இல்லாத மனிதர்கள் இவர்கள் கையில் நாடு சிக்கினால் இந்த நாட்டிற்கு விமோசனம் என்பதே கிடையாது. அரியாசனங்கள் என்றுமே அறியா ஜனங்களால் தீர்மானிக்கப்படுவதால் இந்த அறியா சனங்கள் அரியாசனங்களை சரியாக தக்க வைத்துக்கொள்ள தெரிவதில்லை. அறியா சனங்களின் அந்த அறியாத்தனத்தை அரியாசனங்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நல்லவர்களை இனம் காண முடியாத கொடுமைதான் இத்தனை கொடுமைக்கும் காரணம். ஏற்கனவே தான் எல்லா கொடுமைகளையும் ஒருவன் செய்கிறானே? மீண்டும் எதற்கு அவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களை பொறுத்தவரை எல்லோருக்கும் தெரிந்தவனைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அவன் மதிக்குள் அவன் விதி அப்படித்தான் அமர்ந்து வேலை செய்கிறது. வேறு விதமாக கூறினால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதன் பல நாட்களாக பல தர்ம காரியங்களை நல்ல தொண்டுகளை செய்கிறான். யாராவது அவனை கண்டு கொள்வார்களா? ஆனால் ஒரு நாள் அவன் சில பெண்களோடு பழகினால் தவறான ஒரு இடத்திற்கு சென்று வந்தால் மறுதினம் ஊரே எங்கும் அவனை பற்றி பேச்சாக இருக்கிறது. நல்லதே செய்யும் பொழுது கண்டுகொள்ளாத சமுதாயம் தீயதை செய்யும் பொழுது ஏன் கண்டு கொள்கிறது? இந்த குணம் மாறினால் தான் நாட்டில் சுபிட்சம் உண்டாகும். நல்லதை அங்கீகரிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்லவர்களை ஆதரிக்க கற்றுக் கொள்ளுங்கள். முதலில் ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.