கேள்வி: இராஜராஜ சோழன் கருவூரார் நேரடி பார்வையிலே இருந்தார். அப்படியென்றால் அவர் புரிந்த போர்களை நீங்கள் சொன்ன அடிப்படையில் எப்படி புரிந்து கொள்வது?
அப்படியென்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லையே. இப்பொழுது எப்படி இங்கு வருகின்றவர்களுக்கு நாங்கள் ஜீவ அருள் ஓலையிலே தோன்றி ஆலோசனைகள் கூறுகிறோமோ. நாங்களே ஆலோசனைகள் கூறுவதால் இங்கே வருகின்றவன் உயர்ந்த வழியில் சென்று விடுகிறானா என்ன? அல்லது இதுவரை செய்த பாவத்தை எல்லாம் நிறுத்திவிட்டு மகா முனிவர்களெல்லாம் இப்படி கூறுகிறார்கள். இந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கிறானா? இந்த இடத்தில் கேட்கும் பொழுது பவ்வியமாக கேட்டுவிட்டு பிறகு இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சக மனிதர்கள் எதையெல்லாம் பின்பற்றுகிறார்களோ அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று இங்கு வருகின்ற இங்கு சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்ற அனைவருமே அப்படித்தான் வாழ்கிறார்கள். அப்படித்தான் கருவூரார் எதைக் கூறினாலும் எது தனக்கு சாதகமோ தன்னால் இயலுமோ அதை ஏற்றுக் கொள்வதும் எது மற்ற மன்னர்கள் பின்பற்றினார்களோ அதை பின்பற்றித்தான் அந்த மன்னனும் வாழ்ந்தான். எனவே கருவூரார் என்ன? முக்கண்ணனாகிய சிவபெருமானே நேரில் தோன்றி அறிவுரை கூறினாலும் அப்பொழுது பவ்வியமாக கேட்டுவிட்டு சிவபெருமான் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு மீண்டும் வழக்கம்போல் மனிதன் வாழ்வான். ஏனென்றால் அவன் மதி விதியிடம் இருக்கிறது. எவன் விதி அவன் மதியிடம் அடங்கி இருக்கிறதோ அவன் தான் எமது சொல்லை ஏற்பான்.
புண்ணியம் செய்கின்ற மன்னர்களுக்கு அந்த புண்ணியத்தால் சில அரிய பெரிய சாதனைகளை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. செல்வம் எப்படியோ புண்ணியமும் அப்படிதான். மிகப்பெரிய புண்ணியம் ஒரு மனிதனுக்கு பரிபூரண ஞானத்தை மிக இளவயதிலேயே அதாவது எல்லா தவறுகளையும் செய்துவிட்டு பிறகு மனம் திருந்தி நல்லவனாக மாறுவதுகூட ஆதியில் அவர்களுக்கு பாவம் இருக்கிறது என்பதை குறிக்கிறது. பரிபூரண புண்ணியம் என்றால் அவன் சிறிய பாவத்திற்காகவோ அல்லது இறைவன் கட்டளைக்காகவோ மனிதனாக பிறவியெடுக்க நேரிடும். அப்படி பிறவியெடுக்கும்பொழுதே ஒருவன் துறவியாக பிறவியெடுத்தால்தான் அவனுக்கு முழுமையான ஞானம் இருக்கிறது என்பதை நாங்கள் ஓரளவு ஒப்புக்கொள்வோம். மற்றவர்கள் எல்லாம் புண்ணியத்தால் உலகியல் சுகங்களை நுகர்ந்துகொண்டே பிறகு எனக்கு இறை பக்தி இருக்கிறது. எனக்கு இறையருள் இருக்கிறது. என்னிடம் இந்த அளவு வளம் இருப்பதால் நான் மிகப்பெரிய ஆலயம் கட்டப்போகிறேன் என்று கூறக்கூடிய நிலையில்தான் இருக்கக்கூடியவர்கள். எனவே சராசரி மனிதர்களைப் பார்க்கும்பொழுது ழுது அவன் மிகப்பெரிய புண்ணியவான். அதற்கு முன்பு அதற்கு முன்பும் மிகப்பெரிய சிவபக்தன். சிவனுக்காக தொண்டு செய்து, செய்து. செய்து தன் ஆஸ்திகளையெல்லாம் இழந்தவன். சிவன் மீது மிகப்பெரிய பிரியத்தை வளர்த்தவன். அந்த வழியில் இறைவன் அருளால் மாபெரும் சக்ரவர்த்தியாக பிறவியெடுத்து வழக்கம்போல் சக்ரவர்த்திகள் என்னென்ன தவறுகள் செய்வார்களோ அதையெல்லாம் செய்து வாழ்ந்தவன்தான். என்ன ? ஏனைய சக்ரவர்த்திகள் இறக்கும் தருவாயில் கொஞ்சம் திருந்துவார்கள். இவன் தன் வாழ்வின் ஒரு) பகுதிக்கு மேல் திருந்தி ஒரு துறவிபோல் வாழ முற்பட்டான். அவ்வளவே. ஒரு தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கலாம். அந்த தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்ற அந்த தீபம் முன்வரலாம், அதிலுள்ள சுடரும் முன்வரலாம். ஆனால் இன்னொரு தீபம் அதற்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டும். என்ன ஆயத்த நிலையில் இருக்கவேண்டும்? நல்ல நிலையில் ஒரு திரி இருக்கவேண்டும். அதிலே தூய எண்ணெய் இருக்கவேண்டும் அல்லது
தூய நெய் இருக்கவேண்டும். நெய் எப்படி இருக்கவேண்டும்? இளகிய நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இந்த தீப சுடர் அதில் பற்றும். வெறும் அகல் விளக்கு இருந்தாலும், வெறும் திரி இருந்தாலும் அல்லது திரி இல்லாமல் எண்ணெய் இருந்தாலும் அல்லது எண்ணெயும், திரியும் இருந்து அகல் இல்லாமல் இருந்தாலும் அங்கு பரிபூரண சுடர் பற்றாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பல மன்னர்களும் வாழ்ந்தார்கள். பல மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும், மீண்டும் பிறவி கொடுக்கப்பட்டு, நிறைய பக்குவம் கொடுக்கப்பட்டுதான் இறுதியில்தான் இறைவன் சாயுச்சம், சாரூபம் போன்ற நிலைகளையெல்லாம் காட்டுவார்.
இன்னொரு வினாவை யோசித்துப் பார்த்தாயா? நீ உன் பூஜை தடத்தை அலங்கரிக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு மிகப்பெரிய சிவலிங்கத்தை வைத்து வணங்கவேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்? நீ நேர்மையாக உழைத்த தனத்தைக் கொண்டு ஒரு சிற்பியை அழைத்து “எனக்கு இன்ன வகையான சிவலிங்கம் வேண்டும் அல்லது இன்ன வகையான பூஜை பொருள்கள் வேண்டும்” என்று உன் பூஜை இடத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் அல்லது வைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இன்னொருவன் அலங்கரித்து வைத்துள்ள பூஜை தடத்தை மிரட்டி எடுத்து வந்தால் அதற்கு என்ன பெயர்? அதற்கு என்ன பொருள் கூறுவது? இன்னொரு தேசத்தையெல்லாம் போர் என்ற பெயரில் கொள்ளையடித்து அந்த பொருள்களைக் கொண்டு ஆலயம் கட்டினால் இறைவன் ஏற்றுக்கொள்வாரா? அது நேர்மையான போராகவே இருக்கட்டும். அங்கு உள்ளவர்கள் தொல்லை கொடுக்கும் மனிதர்களாகவே இருக்கட்டும். ஒரு தேசத்தில் தொல்லை கொடுக்கும் மனிதர்கள் மட்டும்தான் இருப்பார்களா? நல்லவர்கள் இருக்க மாட்டார்களா? போர் என்றால் தீயவர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுவார்களா? அங்குள்ள நல்லவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? எனவே போரால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பலகோடி பிறவிகள் எடுத்தாலும் தீராது அப்பொழுதும் அவனுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டது. ”நீ அறிந்தும், அறியாமலும் புகழுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ உனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த லட்சக்கணக்கான மனிதர்களை கொன்றிருக்கிறாய். அந்த தோஷம் பிறவிதோறும் பற்றாமல் இருக்கவேண்டும் என்றால் மிகப்பெரிய சிவாலயம் அமைத்தால் நல்லது’ என்று போதிக்கப்பட்டது. எனவேதான் தன் தோஷம் நீங்கவேண்டும் என்றும், தனக்கு சந்தோஷம் கிடைக்கவேண்டும் என்றும் அவன் செய்த செயல். ஆனாலும் இப்படியொரு செயலை செய்ததற்கு நாங்கள் அவனை பாராட்டுகிறோம்.
யானைகளை ஏன் பழக்கவேண்டும்? என்பதுதான் எமது கேள்வி. (ஜனகர், தசரதர் போன்ற மன்னர்களிடமும் யானைகள் இருந்தன. அப்படியென்றால் அவர்கள் செய்தது பாவம் இல்லையா). எல்லா பாடங்களிலும் தேர்வு பெறக்கூடிய நிலையில் யாருமே இருந்ததில்லை என்பதேயே இது குறிக்கிறது.
பகவானின் அம்சமாக இராமபிரான் இருந்தாலும் அந்த நிலை என்பது வேறு. அதாவது ஒரு கருடன் மீது மகாவிஷ்ணு ஏறி அமரும்பொழுது கருடனுக்கு அது பாரமாக இருக்குமா? துன்பமாக இருக்குமா? துயரமாக இருக்குமா? சுகமாக இருக்குமா? (சுகமாக இருக்கும்) எனவே பசுவான் செய்யும் செயல்களையெல்லாம் மனிதன் தன் செயல்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது. சிறு குழந்தை பெரியவர்கள் செய்கின்ற செயலை தன்னோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல. இஃதொப்ப நிலையிலே பகவானின் அம்சமான ஸ்ரீ இராமரோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்றால், அவருடைய ஏக தாரத்தை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதுதானே? அதே சமயம், சிற்றன்னை (ஸ்ரீ இராமரை) அழைத்து * நாடு வேண்டாம். காடு ஏற்றுக்கொள் என்றவுடன் புன்முறுவலோடு சென்றாரே. அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் நல்லவைகளை ஏற்றுக்கொள்ள மனித மனம் விரும்பாது. அதே சமயம் மன்னர்கள் தம், தம் படைபலத்தை வளமாக்க, பலமாக்க விலங்குகளை பயன்படுத்துகின்ற முறைகளும் எம்மைப் பொறுத்தவரை ஏற்க முடியாத முறைதான். பகவானே செய்தாலும் நாங்கள் குற்றம் என்றுதான் கூறுவோம்.