கேள்வி: அம்மா (அகத்திய மாமுனிவரின் மனைவி லோபாமுத்திரா தேவி) எங்களுக்கு வாக்கு அருள வேண்டும்?
இறைவன் அருளால் அவள் தான் நான் (லோபாமுத்திரா தேவியே தான் அகத்தியர்) என்றும் நான் தான் அவள் (அகத்தியர் தான் லோபாமுத்திரா தேவி) என்றும் கூறிய பிறகு இங்கே எந்த நாமத்தில் யார் உரைத்தால் என்ன? என்பதே அவள் எம் மூலம் கேட்ட வினா.
இறைவன் அருளால் எழு ஜென்மம் என்பதே ஏழு ஜென்மம் என்று சித்தரிக்கப்படுகிறது. எழுந்து எழுந்து வருகின்ற ஜென்மம் என்பது இதற்கு பொருளாகும். ஏழு என்பது எண்ணிக்கையைக் குறிப்பதல்ல. எத்தனையோ எழுகின்ற ஜென்மம் மனிதனுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. மாணிக்கவாசகன் கூறியது போல் புல்லாகி பூண்டாகி என்று மனித ஆன்மா இந்த சட்டையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. சட்டையை மாற்றியது போதும் என்றும் மாறாமல் இருக்கின்ற பரம்பொருளோடு இரு என்று நாங்கள் வழிகாட்டுவதே இந்த ஜீவ அருள் ஓலையில் (ஜீவநாடி) இறைவன் எமக்கு இட்ட கட்டளையாகும். எனவே ஏழு பிறவி இல்லையப்பா. ஏழாயிரம் ஏழாயிரம் ஏழாயிரம் கோடி கோடி என்று உன்னால் எத்தனை பூஜ்யங்கள் சேர்த்துக் கொள்ள முடியுமோ அத்தனை பூஜ்யங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
அறியாமை விலகி தன்முனைப்பு (அகங்காரம்) அகன்று கர்வம் ஒடுங்கி இறைவனை உணரும் வரை தெய்வீக விழிப்புணர்வு கிட்டும் வரை ஒரு ஆன்மாவிற்கு பிறவி தொடரும் மனித சட்டைதான் என்றில்லை எல்லா வகையான சட்டைகளும் கொடுக்கப்படும். இந்தப்பிறவி துன்பம் போக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மகான்கள் ஞானிகளின் ஆசை. இந்த நிலையிலே ஆத்மா நல்ல நிலையிலே பிறவி எடுத்தாலும் கூட இந்த மனித சட்டைக்குள் வந்துவிட்ட பிறகு தான் யார்? என்பதை மறந்து தன்னுடைய சுயத்தை மறந்துவிட்டு தன் தேகத்தையே (உடல்) தானாக எண்ணுவது அதாவது ஒரு மனிதன் தன் மானத்தை மறைக்க ஆடையை போர்த்திக் கொள்கிறான். அவனுக்குத் தெரியும் அந்த ஆடை வேறு தான் வேறு என்று என்றாவது ஒரு நாள் ஆடை கிழிந்து விட்டால் நான் கிழிந்து விட்டேன் என்று கூற மாட்டான். என் ஆடை கிழிந்து விட்டது என்று தான் கூறுவான். அதைப் போல ஆன்மா என்பது இந்த மனித சட்டையை போட்டுக் கொண்டு இருக்கிறது. என்றாவது ஒருநாள் இந்த சட்டையை விட்டுவிட்டு அந்த ஆன்மா வேறு நல்ல சட்டைக்கு சென்று விடும். சட்டை மாற்றி சட்டை செல்லாமல் சற்றே ஒரே இடத்தில் இரு என்று ஆணையிடுவதே இறைவன் எமக்கிட்ட ஆணையப்பா. இதற்கு ஒரே வழி சத்தியம் தர்மம் சரணாகதி பக்தி.