அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இது போல் பிரதமை என்று ஒரு திதி துவங்கினாலும் கூட பல்வேறு காலம் சில அன்பு சேய்களின் விருப்பத்திற்கு இணங்க யாம் இதுபோல் பொழுது நெடிய பொழுது வாக்கை பகிரலாம் என்று எல்லாம் வல்ல பரம்பொருளின் அருள் அனுமதி பெற்று இதுபோல் வாக்கை ஓதுகின்ற தருணத்திலே என் முன்னே அமர்ந்து வாக்கை கேட்கின்ற அனைவருக்கும் யாம் இறைவனின் அருளைக் கொண்டு பரிபூரண நல்லாசியை இத்தருணம் இயம்புகின்றோம். இதுபோல் எமை நாடுகின்ற மாந்தர்களுக்கு லோகாய ரீதியாக எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் அந்த பிரச்சனைகளின் மூல வேர் பாவங்கள் தான். இதனை மனிதர்கள் பல்வேறு தருணங்களில் மறந்து விடுகிறார்கள். எங்கே பாவம் தொடர்கிறதோ அங்கே எல்லா வகையிலும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவே தான் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும். உளைச்சல்கள் இல்லாமல் வாழ வேண்டும். மெய்யான நிம்மதியோடு வாழ வேண்டும். என்று எண்ணுகின்ற மாந்தர்கள் எந்த நிலையிலும் துன்பங்களை பிறருக்கு எந்த வழியில் செய்யாமல் இருக்க பழக வேண்டும். கடினம் தான். மனிதப் பிறவி எடுத்துவிட்டால் அறிந்தும் அறியாமலும் பாவங்களை செய்ய நேரிடுகிறது. அறிந்த பிறகு மீண்டும் மீண்டும் அதுபோல் பாவ நினைவை பாவ செயலை பாவ வாக்கை நினையாமல் செய்யாமல் கூறாமல் இருப்பதே இறையருள் பெறுவதற்கு உகந்த வழியாகும்.
இதுபோல் நிலையிலேயே பல்வேறு மனத்தாங்கலோடு இதுபோல் ஓலையிலே வாக்கை அறியலாம் என்றும் அப்படி அறிந்து வாழ்க்கையில் நல்ல பலனை பெறலாம் என்றும் பல்வேறு அன்பர்கள் ஒருபுறம் இருக்க யாமோ இன்னும் பொதுவாகத்தான் வாக்கைப் பகிருவோம். மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு வாக்கை பகர மாட்டோம் என்று கூற வாழ்க்கையிலே காலம் சென்று கொண்டு இருக்கிறது. சித்தர்கள் மௌனமாக இருந்தால் எவ்வாறு நமது வாழ்வியல் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது? என்று மனிதர்கள் எண்ணலாம். தொடர்ந்து வாக்கை கூறக்கூடாதா? என்று இந்த ஓலையே நம்பக் கூடியவர்கள் வினலாம். ஏற்கனவே கூறி இருக்கிறோம். இப்பொழுதும் கூறுகிறோம். இனியும் கூறுவோம். இதுபோல் இறைவன் அருளால் எவன் ஒருவன் பரிபூரண சரணாகதியில் இருக்கிறானோ எவன் ஒருவன் பரிபூரண சத்தியத்தில் திளைக்கிறானோ எவன் ஒருவன் பரிபூரண தர்மத்தில் வாழ்கிறானோ அவனுக்கு யாம் என்றென்றும் தோன்றாத் துணையாக இருந்து இறைவன் அருளால் நன்மைகளை செய்து கொண்டே இருப்போம்.
இதுபோல் ஒரு மனிதன் சுய விழிப்புணர்வு பெறாதவரை இறைவனே நேரில் தோன்றினாலும் பலனேதுமில்லை. இதற்கு அசுரர்களே சாட்சி. அசுரர்கள் பலரும் தெய்வத்தை (நேரில்) கண்டவர்கள்தான். ஆனாலும் முடிவில் என்ன நடந்தது? என்பது புராணத்தை ஓதியவர்களுக்குத் தெரியும். எனவே இறைவனை தரிசித்தாலும் இறைவனை உணர்ந்தாலும் ஒருவனின் மனதிலே மெய்யான மெய்யுணர்வும் சாத்வீக எண்ணங்களும் சத்ய எண்ணங்களும் தர்ம எண்ணங்களும் இல்லாதவரை ஒரு மனிதனால் மேலேற இயலாது. மனிதர்கள் வினவலாம். இறைவனைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு மனிதனுக்கு பக்குவம் வந்து விடக்கூடாதா? நீக்கமற நிறைந்துள்ள இறைவனை உணர்ந்தாலே ஒரு மனிதன் மேலேறி வர இயலாதா? என்று. இறைவனும் யாமும் அப்படித்தான் எண்ணி மனிதர்களோடு உறவாடுகிறோம். ஆனால் மனிதர்கள் எல்லா நிலையிலும் தன் நிலைக்கு ஏற்ப தான் இறைவனையும் எம்மையும் எதிர்பார்க்கிறார்களே தவிர எம் நிலைக்கு ஏற்ப அல்ல என்பது தான் சூழலாகும்.
வெறும் தத்துவார்த்தமாக கூறிக்கொண்டே சென்றால் கட்டாயமாக பலருக்கு அது ஆர்வத்தை தூண்டது என்பது எனக்கு தெரியும். ஆக சுருக்கமாக கூற வேண்டும் என்றால் தாங்க முடியாத துன்பம். உடல் நோய் வாட்டுகிறது. எத்தனை மருத்துவ சிகிச்சை செய்தாலும் தீரவில்லை என்பவர்களுக்கு தருணம் யாங்கள் கூறுகிறோம். அன்றாட அவர்கள் விரும்புகின்ற எந்த தெய்வத்திற்கும் இயன்ற வழிபாட்டை செய்யலாம். பாதகமில்லை. இருந்தாலும் குறிப்புக்காக தன்வந்திரியை நாங்கள் கூறுகிறோம். தன்வந்திரி மந்திரத்தை அன்றாடம் இரவிலே உறங்குவதற்கு முன்னால் குறைந்தபட்சம் ஒரு நாழிகையாவது உருவேற்றி விட்டு ஒவ்வொரு மனிதனும் உறங்கச் சென்றால் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தாங்க முடியாத பொருளாதார நெருக்கடி என்றால் எந்த இறை ரூபத்தையும் வணங்கலாம். குறிப்புக்காக கூறுகிறோம். அன்னை மகாலட்சுமியை வணங்க நன்மையுண்டு. அன்றாடம் விநாயகரை வணங்கு. முருகரை வணங்கு. பைரவரை வணங்கு. நவக்கிரகங்களை வணங்கு என்றெல்லாம் நாங்கள் கூறுகிறோம். நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் ஒன்றுதான். வடிவங்கள் வேறு என்று எமக்கு தெரிந்தாலும் வருகின்ற மனிதனை படிப்படியாக மேலே அழைத்துச் செல்வதற்காக தான் இது போன்ற விதவிதமான வழிபாடுகளை நாங்கள் கூறிக் கொண்டே இருக்கிறோம்.
ஆக சுருக்கமாக கூறப்போனால் எத்தனை துன்பத்திலும் மனதை தளர விடாமல் சோரவிடாமல் இறை வழிபாட்டில் தம்மை ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற தர்ம காரியங்களை செய்து கொண்டு தன் கடமைகளை நேர்மையாக ஒருவன் ஆற்றி வந்தால் கட்டாயம் விதியும் மெல்ல மெல்ல மாறி அவனுக்கு நன்மையை செய்யும். தர்மம் என்றால் ஏதோ லகரம் ககரம் செலவு செய்ய வேண்டும் என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம். அவனவன் சக்திக்கேற்ப செய்தால் போதும். ஏதும் இயலாதவர்கள் எறும்பிற்குக் கூட உணவு தரலாம் அல்லவா. எனவே பிறருக்கு ஈவதெல்லாம் மறைமுகமாக ஒருவன் தனக்குத்தானே ஈவதுதான். எனவேதான் இந்த ஓலையில் யாம் அடிக்கடி தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இதுபோல் நிலையிலே எம்முன்னே அமர்ந்துள்ள அனைத்து சேய்களுக்கும் மீண்டும் நல்லலாசி. இதுபோல் அவரவர்கள் வினைப் பயன் அவர்களை எவ்வாறு தூண்டுகிறதோ அவ்வாறு வினாக்களை எழுப்பட்டும் என்று கூறி இத்தருணம் மீண்டும் நல்லாசி கூறுகிறோம்.