பொது வாக்கு:
மனிதனின் எதிர்கால வாழ்வினை அறிய அருள் வாக்கோ ஜோதிடமோ பார்ப்பதில் தவறில்லை. ஆயினும் மனிதர்களின் முன் ஜென்ம பாவத்தின் அடிப்படையில் அமைவதுதான் அவன் வாழ்வு. எம்மை நாடுவதாலோ எமது வாக்கை அறிவதாலோ மட்டும் உடன் உயர்ந்த பலன் கிட்டி விடாது. விதி முதலில் அவன் வேலையை செய்து கொண்டே இருக்கும். அதன் போக்கிலே சென்று தான் திசை திருப்ப வேண்டும்.
விதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு பிறவிலும் செய்த பாவ புண்ணிய அளவை வைத்து நடப்பு பிறவியிலேயே அதற்கு ஏற்றவாறு தாய் தந்தை உறவினர் நட்பு பணி கல்வி ஆரோக்கியம் போன்றவை முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. இதில் விரும்பக் கூடியதை மனிதன் ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான். விரும்பக் கூடாததை மட்டும் மாற்றினால் நன்மை என்று எண்ணுகிறான். அது தவறில்லை என்றாலும் விதி அதற்கு அனுமதி தராது. ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் தர்மங்கள் செய்து தான் பிரச்சனைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வரவேண்டும். ஒருவனுக்கு நடக்கும் நிகழ்வு வேறொரு மனிதனுக்கு நடக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனின் கர்மா பாவங்கள் தனித்தனியான அளவீடுகளைக் கொண்டதாக இருக்கிறது. எம்மை நாடுவதும் வாக்கை அறிவதும் அறிந்த பிறகு அதனை பிழறாமல் செய்தும் எந்தவித மாற்றமும் இல்லை என்று வருந்துகின்ற மனிதர்கள் பலர் உண்டு. அங்கும் விதி கடுமையாக உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். மனச் சோர்வு கொள்ளாமல் இறைவனிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். துன்பமே இல்லாத வாழ்க்கை என்று ஒன்றுமே கிடையாது. எப்படி இன்பம் ஒரு மாயையோ துன்பமும் ஒரு மாயைதான். ஆக இவ்விரண்டையும் தாங்கக் கூடிய மனோ பக்குவத்தை ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் ஞான நிலை என்று பெயர். அந்த ஞானத்தை தான் ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும் என்று யாங்கள் எதிர்பார்க்கிறோம்.