அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
இறையே பெரியது அன்புக்கு கட்டுப்படும் பொழுது இறையே சிறியது. ஒருவன் தனக்குத்தானே வீசிக் கொள்ளும் வலைதான் கவலை. சினம் எப்படி ஒருவனை அழித்து விடுமோ அதுபோல் கவலையும் ஒருவனை அழித்து விடும்.
பக்குவமற்ற மனிதர்கள் பண்பாடு இல்லாமல் பேசுவதும் தாறுமாறான விமர்சனங்களை செய்வதும் சினம் வருவது போல நடந்து கொள்வதும் இயல்பு. அவன் அப்படி நடந்து கொள்வதே சினத்தை வரவழைக்கத்தான். ஆனால் அவன் தோற்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதன் என்ன செய்ய வேண்டும் சினம் இல்லாமல் நாகரீகமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவன் வெற்றி பெற தானே ஒரு காரணமாகி விடக்கூடிய ஒரு சூழல் வந்துவிடும். எனவே பண்பாடு இல்லாத மனிதர்களோடு நெருங்கி பழகாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். அப்படி தவிர்க்க முடியாமல் இருக்க நேரிட்டால் அமைதியான முறையிலே கூடுமானவரை மௌனத்தை கடைப்பிடிப்பதும் அதுபோல் வாத பிரதிவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதுமே எம் வழிவரும் சேய்களுக்கு ஏற்றதாகும். இதை மனதில் தெள்ளத் தெளிவாக பதிய வைத்து தொடர்ந்து சினமில்லாமல் பதட்டம் இல்லாமல் கவலை இல்லாமல் வேதனை இல்லாமல் வெட்கமில்லாமல் நாங்கள் கூறுகின்ற அனைத்து நல்ல காரியங்களும் செய்ய எண்ணி செய்து கொண்டு வர வேண்டும். இதுபோல் நலமாய் ஒவ்வொரு ஆத்மாவும் தன்னைத்தானே உணர்ந்து ஆணவத்தை விட்டொழித்து தன்முனைப்பை அணுவளவும் வளர்த்துக் கொள்ளாமல் பவ்யமாக அவையடக்கமாக தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி இறைபக்தியில் ஆழ்ந்து பரிபூரண சரணாகதியிலே என்றென்றும் இருந்து இயன்ற அளவு தர்மத்தை தொடர்ந்து வாழ்ந்து வந்தாலே அவனவன் தலைவிதி கடுமையாக இருந்தாலும் அதை இனிமையாக இறைவன் மாற்றுவார். இதைத்தான் நாங்கள் பல விதமான வார்த்தைகளில் இயம்பிக் கொண்டிருக்கிறோம்.