அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
எல்லா கலசங்களில் உள்ளே இருப்பதும் ஒரே கங்கை நீர்தான். அப்படித்தான் மனிதர்கள் தேகம் என்னும் கலசத்தை வைத்துக் கொண்டு தமக்குள் பாகுபாடுகளை பார்த்து உன்னை எனக்கு பிடிக்கும். உன்னை எனக்கு பிடிக்காது. நீ நல்லவன். நீ நல்லவன் அல்ல. நீ எனக்கு நல்லதை செய்கிறாய். அதனால் நீ எனக்கு பிரியமானவன். நீ எப்போதும் என்னை தூற்றிக் கொண்டிருக்கிறாய். அதனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் நமக்குள் அபிப்பிராய பேதங்களை வளர்த்துக் கொண்டு அதை பகையாகவே மாற்றிக் கொள்கிறார்கள்.
ஆனால் மகான்கள் எப்படி பார்ப்பார்கள்? உள்ளே இருக்கும் நீரான ஆத்மாவைதான் பார்ப்பார்கள். எல்லாம் ஒரே நதியில் இருந்து எடுக்கப்பட்ட நீர் என்பது போல எல்லாம் ஒரே பரம்பொருளின் அந்த அம்சத்தில் இருந்து தான் பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்து பிரிந்து மாயையில் ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து பிறவி தோறும் அறியாமையில் வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து பாவ சேற்றிலே சிக்கி தன்னை அறியாமல் உழன்று கொண்டே இருக்கும் தேகம் எனும் கலசத்திற்குள் அடைபட்ட ஆத்மா எனும் கங்கை நீர். இவற்றையெல்லாம் விடுவித்து புனிதமான கங்கையோடு சேர்ந்து விட்டால் மீண்டும் பார்வைக்கு எல்லாம் ஒன்று போல் தெரியும். இப்படி சேர்ப்பது என்பது அத்தனை எளிதல்ல. அதற்கு எத்தனையோ பிறவிகள் காலங்கள் ஆகும். எனவே இதனை உணர்ந்து எம்மை நாடி வருகின்ற சேய்கள் தமக்குள் பகைமையை வளர்த்துக் கொள்ளாமல் தமக்குள் கருத்து வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் பாவங்களை குறைத்துக் கொள்ள வழிமுறைகளை மட்டும் பின்பற்றி பிறருடன் இதமாக வாக்கை உரைத்து எப்பொழுதும் புண்ணிய காரியங்களை செய்து கொண்டே இருந்தால் இறைவனருள் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் கட்டாயம் கிட்டுமப்பா.