அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
இதுபோல் ஒரு மனிதன் தர்மம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். தர்மம் செய்யாதே என்று ஒரு மகான் வாயிலிருந்து வாக்கு வராது. ஆனால் அதே தருணம் ஒரு சில ஆத்மாக்களுக்கு மட்டுமே தகுதியை மீறி அதுபோல் சில ஜாதகத்தின் சூட்சும பலன் காரணமாக ருணம் (கடன்) பெற்று தர்மம் செய் என்று கூறுகிறோம். பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப தர்ம காரியங்களை செய்தால் போதும். அதுபோல் மனிதர்கள் முதலில் தான் தன் மனைவி தன் குழந்தைகள் தன் குடும்பம் என்று கவனித்து விட்டு அதன் பிறகு தர்ம காரியத்தில் கவனம் செலுத்தினால் போதும். இன்னொன்று தனத்தை வைத்து செய்வதுதான் தர்மம் என்று எப்பொழுதும் எண்ணிவிடக் கூடாது. அது ஒரு சில ஜாதகர்களுக்கு பொருந்தலாம். மற்றபடி தன வசதி இல்லாத மனிதர்கள் உடல் உழைப்பால் தொண்டுகள் செய்து அதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளலாம். இதமான வார்த்தைகளை பயன்படுத்தி பிறர் மனம் புண்படாமல் எப்பொழுதுமே பணிவாக பேசுவதும் ஒரு உயர்ந்த தர்மமே புண்ணியமே. எனவே ஒரு மனிதன் சினத்தை அடக்குவது என்பது கூட தவறுதான். சினமே இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் சினத்தை விலக்க தவறினால் எத்தனை ஆலயங்கள் சென்றாலும் எத்தனை தர்ம காரியங்கள் செய்தாலும் முழுமையான இறைவன் அருளை பெற இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.