அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
மனிதர்களின் குற்றங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு நாங்கள் வாக்குரைக்கிறோம் என்பதாலயே அந்த மனிதர்களை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று அர்த்தம் அல்ல. நாங்கள் வாக்கு உரைப்பதால் ஒரு மனிதன் பாக்கியவான் என்று வெளிப்படையாக கூறினாலும் கூட அதற்காக அவன் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நீதி நியாயம் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை. அதே சமயம் சதா சர்வ காலமும் ஒரு மனிதனைப் பார்த்து நீ தவறு செய்கிறாய் திருந்துவிடு திருந்துவிடு என்று கூறிக் கொண்டே இருந்தால் அவன் செய்கின்ற சிறு நல்காரியங்களை கூட செய்யாது விட்டுவிடுவான் என்பதால்தான் சிலவற்றை கண்டும் காணாமல் நாங்கள் மௌனமாக இருந்து விடுகிறோம். நாங்கள் அவ்வாறு இருப்பதினாலே வருகின்றவர்கள் எல்லோரும் உயர்ந்த ஆத்மாக்கள் என்றோ அவன் செய்கின்ற செயல்கள் எல்லாம் எம்மால் அங்கீகரிக்கப்படுகின்றது என்று மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது.
நாடிவரும் ஒருவனின் மனதை ஆற்றுப்படுத்தி ஆறுதல்படுத்தி பரிகாரங்களை கூறி விதியை எப்படியாவது மாற்றுவதற்குத்தான் நாங்கள் முயற்சி செய்வோம். ஆனால் அதற்காக எங்கள் சக்தியை பயன்படுத்தி வருகின்ற அனைவருக்கும் எல்லா துன்பங்களையும் மாற்றி விட மாட்டோம். ஆனாலும் நாங்கள் கூறியவற்றை கடுமையாக பின்பற்றி வருகின்ற மனிதனுக்கு கடுமையான விதிகளை கூடுமானவரை கடைவரையில் (இறுதிவரையில்) குறைக்க முயற்சி செய்வோம். இன்னும் அப்படியே தந்து கொண்டும் இருக்கிறோம். அது மட்டுமல்ல வந்த துன்பம் மனிதனுக்கு பெரிதாக தெரிகிறது. ஆனால் வரவேண்டிய துன்பம் அதைவிட அதிகம். அதை நாங்கள் தடுத்தது அவனுக்கு (துன்பம் வராததால்) தெரியவில்லை. எனவே மிக உன்னதமான பக்குவத்தை வளர்த்துக் கொண்டு ஒருவன் எம் முன் அமர்ந்தால் ஏதாவது ஒரு சில வார்த்தைகளை கூற முயற்சி செய்கிறோம். பக்குவம் இல்லாத மனிதர்களையும் என்னதான் உரைத்தாலும் இன்னமும் எமது வாக்கை பின்பற்ற முடியாத மனிதர்களையும் இங்கு அழைத்து வந்துவிட்டு ஏதாவது கூறுங்கள் என்றால் நாங்கள் எதை கூறுவது? எது நடந்தாலும் சித்தர்களை விட்டு விடப் போவதில்லை என்று விடாப்படியாக உறுதியோடு எது நடப்பினும் அது இறை சித்தம் சித்தர்கள் சித்தம் என்று எண்ணி எம் பின்னே வருபவர்களுக்கு நாங்கள் இரவு பகல் மட்டுமல்ல எக்காலத்திலும் எல்லா பிறவிலும் உற்ற துணையாக என்றுமே இருந்து கொண்டுதான் இருப்போம்.