கேள்வி: நாக தோஷம் போக வழிமுறைகள் என்ன?
நாக தோஷம் என்பது எல்லா விதமான பாவங்களின் மொத்த குவியல். நாக தோஷம் என்பது ஒரு குறியீடு. இதிலிருந்து விடுபட இரு வழிகள் ஒன்று ஆன்மீக வழியில் துர்க்கை கணபதி ராகு கேது தெய்வங்களின் காயத்ரி மந்திரத்தை தினமும் 27 எண்ணிக்கை உருவிடுவதுடன் இரண்டாவதாக பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வது பசுக்களை தானமாக தருவது பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும். ஏழை பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றை செய்யலாம்.
வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தை வைத்து செய்து வைத்து ஏதோ மண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி அதன் தலையில் சில மலர்களை இட்டு ஒரு துளி பாலையும் இட்டு அதை ஆழியிலோ நதியிலோ கரைத்து விட்டால் நாக தோஷம் போய்விடும் என்றால் எளிதாக எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம். இது ஒரு குறியீடு அடையாளம். இருந்தாலும் மேல் கூறியவற்றோடு இப்பொழுது இவ்வாறு நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால் ஏதாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டு விடலாம். அது ஆலய தொண்டிற்கு பயன்படட்டும். இல்லை அந்த வெள்ளியை உபயோகமாக தனமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாக தோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகள் ஆகும்.