கேள்வி: கருட புராணத்தில் தாய் தந்தைக்கு செய்வது பல ஆயிரம் மடங்காகவும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு செய்வது பல லட்சம் மடங்காகவும் உயரும் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையா? கருட புராணத்தை இறப்பு ஏற்பட்ட வீட்டில் தான் படிக்க வேண்டும் என்று சொல்லப்படுவது பற்றியும் அதில் கூறப்படும் சொர்க்கம் நரகம் தண்டனைகள் பற்றியும் விளக்குங்கள்:
இறைவன் அருளால் கருட புராணத்தை அனுதினமும் ஓதலாம். தவறேதும் இல்லை. இது அனுதினமும் ஓதப்பட்ட விஷயம் அல்ல என்பது மனிதனின் அறியாமையால் ஏற்பட்ட ஒன்று. மனிதன் உடலை விட்ட பிறகு அவனுக்கு கருட புராணம் ஓதி என்ன பயன்? உடலோடு இருக்கும் போது கருட புராணம் ஓதினால் தான் இப்படி எல்லாம் வாழ்ந்தால் இப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்கும். இப்படி எல்லாம் வாழக்கூடாது என்ற கருத்தை புரிந்து கொள்வான். ஆனால் மனிதனுக்கு கிட்டிய கருட புராணம் குறைந்த அளவை. அதுவும் இடைச் செருகல்களோடு கிடைக்கப் பட்டிருக்கிறது. அதே போல் நரகம் சொர்க்கம் என்பது உண்மை. அது ஒரு புறம் இருக்கட்டும். இப்பூலகமே ஒரு நல்ல எண்ணம் கொண்டவனுக்கு புண்ணிய ஆத்மாவிற்கு சொர்க்கமாகவும் அப்படியில்லாதவனுக்கு நரகமாகவும் தோன்றுவது உண்மையே.
அடுத்ததாக தாய் தந்தையை பேண வேண்டும் என்ற நோக்கிலே தாய் தந்தையை மதிக்க வேண்டும் போற்ற வேண்டும் என்பதற்காக அவ்வாறெல்லாம் எல்லா புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. அதே சமயம் உடன் பிறந்தவர்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் கூறப்பட்டிருக்கிறது. அதற்காக மற்றவர்களுக்கு உதவ கூடாது என்று நாங்கள் கூறவில்லை. என்னதான் ரத்த பந்தம் உடையவர்களுக்கு உதவ வேண்டியது கடமை என்றாலும் ரத்த பந்தம் இல்லாதவர்களுக்கு உதவும் பொழுது தான் விரைவில் பாவங்கள் குறைகின்றன. எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டியது மனிதனின் அத்தியாவசியமான கடமை. அந்த கடமையிலிருந்து அவன் தவறினால் கடமை தவறிய குற்றம் பாவம் வந்து சேரும். ரத்த தொடர்பில்லாதவர்களுக்கு உதவி செய்யாவிட்டால் புதிதாக பாவம் வராது. ஆனால் சேர்த்த பாவம் தீராது. புண்ணியமும் சேராது.