கேள்வி: ஸ்ரீபெரும்புதூர் அருகே 2000 ஆண்டு பழமை வாய்ந்த சிவாலயம் சிதிலமடைந்துள்ளது. அது எப்பொழுது கும்பாபிஷேகம் காணும்? யாரால்?
இறைவன் அருளால் பழமையான ஆலயம் என்று நாங்களும் கூறுகிறோம். மனிதர்களுக்கும் அது போன்ற ஆலயங்களுக்கு செல்வதற்கு உற்சாகமாக இருக்கிறது. ஒத்துக் கொள்கிறோம். தவறொன்றும் இல்லை. பழமை வாய்ந்த சிவாலயம் என்றாலே மனிதனுக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அது உண்மையும் கூட. ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும். ஆலயம் முதலில் கட்டப்பட்டதா? அல்லது பூமி முதலில் படைக்கப்பட்டதா? இது போல் நிலையிலேயே பூமி முதலில் படைக்கப்பட்டு பிறகு உயிரினங்கள் தோற்றுவிக்கப்பட்டு பிறகு மனிதன் கூறியபடியே பரிணாம வளர்ச்சியில் மெல்ல மெல்ல மனிதன் வளர்ந்து இறைவனை உணர்ந்து ஆலயம் கட்டியதாக் கொண்டால் ஆலயம் பழமையானது என்றால் அதைவிட பழமையானது புவி. அந்தப் புவியே ஒரு ஆலயமாகவும் அதில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பிள்ளையாகவும் எண்ணி இந்த ஒட்டுமொத்த புவியையும் ஆலயமாக எண்ணி அந்த புவியை போற்றி பாதுகாத்தாலே அது மிகச்சிறந்த உழவாரப் பணியாகும். இருந்தாலும் இன்னவன் கூறிய ஆலயமும் விரைவில் சில ஆத்மாக்களால் நல்ல விதமாக சீரமைக்கப்பட்டு கலச விழா காணப்படும்.