கேள்வி: குடும்ப ஒற்றுமை பற்றி:
இறைவன் அருளால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தைகள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் மனிதரீதியாக பார்த்தால் நிறைய செல்வம் வேண்டும் தனம் வேண்டும். மனைவி எண்ணுவதையெல்லாம் கணவன் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். கணவன் எண்ணுவதையெல்லாம் மனைவி உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். கணவனும் மனைவியும் விரும்புவதை குழந்தைகள் நிறைவேற்றித் தர வேண்டும். இப்படித்தான் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புதான் ஏமாற்றம் அடையும் பொழுது கோபமாக வெடிக்கிறது. பிரச்சனையாக உருவெடுக்கிறது. எனவே பிறரிடம் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொண்டாலே கூடுமானவரை பிரச்சனைகள் குறைந்து விடும். இது ஒருபுறம் இருந்தாலும் கூட பக்திரீதியாக பார்க்கும் பொழுது துர்க்கை வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் கட்டாயம் குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்.
அகத்திய மாமுனிவரின் மனைவியைப் பற்றி அகத்திய மாமுனிவர் வாக்கு:
இறைவன் அருளைக் கொண்டு யாமே எம் தாரத்தைக் (மனைவி) குறித்து கூறுவது என்பது அத்தனை சிறப்பாக இராது என்றாலும் கூட நல்விதமாக அன்னையின் (பராசக்தி) அருளைப் பெற்று இறைவனின் கருணையாலே எம்மில் ஒரு பாதியாக இருந்து அந்த பாவத்தில் கூறுவதென்றால் இப்படி சுருக்கமாகக் கூறிவிடுகிறோம். அவள் பெண்பால் அகத்தியர். நான் ஆண்பால் லோபாமுத்திரை அவ்வளவே.