அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
நாங்கள் அடிக்கடி கூறுவது என்னவென்றால் இறைவனே தவறு செய்யத் தூண்டினாலும் விதியே தவறான வழிக்கு அழைத்துச் சென்றாலும் போராடிப் போராடி ஒரு மனிதன் இறைவழியில் வந்து தன்னுடைய மனதை வலுவாக்கி உள்ளத்தை உறுதியாக்கி தவறான பழக்கங்களுக்கு எதிராகவே தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.
ஒவ்வொரு மனிதன் பின்னால் எத்தனையோ பாவ வினைகள் மறைந்து நின்று செயலாற்றுகின்றன. இந்த வினையை எல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டிப் போட வேண்டுமென்றால் பகவானின் திருவடியை சதா சர்வ காலம் எண்ணுவதோடு எந்தவித குழப்பம் இல்லாமலும் சந்தேகம் இல்லாமலும் அள்ளி அள்ளி தந்து கொண்டே போகிற தர்மம் ஒன்றுதான் எளிய வழி. இந்நிலை உயர உயர ஒரு மனிதனின் உச்ச நிலையிலே இனி என்னுடையது என்று எதுவும் இல்லை எல்லாம் இறைவன் தந்து என் கண்ணில் படுகின்ற மனிதர்களுக்கு என்ன தேவையோ பிற உயிர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உதட்டால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உள்ளத்தால் முடிந்த ஒரு பிரார்த்தனையை செய்கிறேன். நான் பெற்ற பொருளால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறருக்காக அர்ப்பணம் செய்கின்ற குணம் வந்துவிட்டால் இறைவன் அருள் அவனிடம் பரிபூரணமாக பரிமளிக்க தொடங்கும். இது போல் நிலையிலே பிறருடைய பிரச்சினைகளை நீக்க ஒரு மனிதன் முயற்சி செய்தாலே அவனுடைய பிரச்சனைகளை தீர்க்க இறைவன் முன் வந்து விடுவான்.