அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
எப்பொழுது மருத்துவ சிகிச்சை என்ற ஒன்று ஏற்படுகிறதோ அப்பொழுதே சேர்த்த புண்ணியம் போதவில்லை. பாவம் இன்னும் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். வீண் விரயங்கள் ஏன் வருகிறது என்றால் ஒருவன் மெய்யான வழியிலே புண்ணியத்தை சேர்க்கவில்லை என்பதே பொருள். ஒருவன் கணக்கிலேயே இத்தனை தனத்தை பிடுங்க வேண்டும் என்று விதி இருந்தால் அத்தனை தனம் விரயமாகும். சிலர் தனத்தை இறுக பிடித்து வைத்திருக்கிறார்களே. விதி அவர்களிடம் இருந்து தனத்தை எடுக்கிற விதமே வேறு. கள்வர்களாலும் கொள்ளையர்களாலும் வேறு சில பகற்கொள்ளையர்களாலும் தனம் பிடுங்கப்படும். ஒரு சோம்பேறி கூட்டத்தை நாம் ஏன் உருவாக்க வேண்டும் என்று எண்ணி ஒரு திருட்டு கூட்டத்தை உருவாக்கி விடுவார்கள் இவர்கள்.
சுருக்கமாக சொல்வதென்றால் ஒருவன் ஆலயங்கள் சென்றாலும் செல்லா விட்டாலும் யாகங்கள் செய்தாலும் செய்யா விட்டாலும் எவன் ஒருவன் சத்தியத்தையும் தர்மத்தையும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறானோ அவனைத் தேடி இறை வரும் என்பது மெய். ஒருவனிடம் தர்ம சிந்தனை இருக்கும் பொழுது அந்த தர்மமே எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும். ஏனென்றால் ஒரு மனிதன் என்ன பிராத்தனை செய்தாலும் கூட அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால் இறை அருளைப் பெற முடியாது. ஒரு மனிதன் இறையருளை பெற வேண்டும் என்றால் ஏன்? இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை தர்ம குணமும் பிறர்க்கு உதவும் குணமும் இருந்துவிட்டால் போதும் இவன் இறையை தேட வேண்டியது இல்லை. இறை இவனைத் தேடி வந்துவிடும். அவனிடம் இறையே வந்து கை ஏந்தும்.