கேள்வி: மார்கழி (2012-2013) மாதத்தில் மகா பிரளயம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா?
இறைவன் அருளால் பிரளயம் என்றால் என்ன? என்று நீ எண்ணுகிறாய்? (சுனாமி போன்ற அழிவு)
ஒன்று தெரியுமா? ஒவ்வொரு இல்லத்திலும் இது அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே இது போன்ற பேரழிவு குறித்து கூறியிருக்கிறோம். இப்போதைக்கு உலகம் என்பது சிறைச்சாலை ஆன்மாக்கள் செய்கின்ற பாவ புண்ணியத்திற்கு எத்தனையோ சிறைச்சாலைகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த புவி உலகம். ஒட்டு மொத்தமாக இந்த சிறைச்சாலையை அழிக்கின்ற எண்ணம் இறைவனுக்கு இல்லை. பகுதி பகுதியாக அவ்வப் பொழுது சிறிய அழிவுகள் ஏற்படும். மற்றபடி இந்த சிறைச்சாலை அழிக்கப்பட வேண்டும் என்றால் இங்குள்ள அனைவருமே புனிதர்களாக மாற வேண்டும். புண்ணிய ஆத்மாக்கள் அத்தனை பேரும் புனிதர்களாக மாறிவிட்டால் வேண்டுமானால் இந்த சிறைச்சாலை தேவையில்லை என்று இறைவன் அழித்துவிடலாம். அப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று மனிதன் கங்கணம் கட்டிக் கொண்டு புனிதம் ஏன் செய்ய வேண்டும்? புண்ணியத்தை செய்து எதற்காக இந்த உலகத்தை இழக்க வேண்டும்? என்று அவன் தவறு மேல் தவறு செய்து கொண்டிருப்பதால் நீ கூறுவது போல் இந்த மார்கழி அல்ல எந்த மார்கழி வந்தாலும் எந்த ஆண்டு வந்தாலும் ஒட்டு மொத்தமாக இந்த உலகம் அழியப் போவதில்லை. ஆங்காங்கே சிறு சிறு அழிவுகள் ஏற்படுவது என்பது இயல்பு.
கேள்வி: எல்லோரின் சார்பாக கேட்கிறேன். தங்களை ஸ்தூல தேகமாக (உடல்) தரிசிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலில் இறைவனை தரிசிக்க யாது செய்ய வேண்டும்? என்று எண்ணி யாங்கள் கூறிய வழிமுறைகளையெல்லாம் பின்பற்றிக் கொண்டே வந்தால் இறை தரிசனமே மிகப்பெரிய தரிசனம் என்பதை புரிந்து கொள்ளலாம். அதை நோக்கி சென்றாலே போதுமப்பா. அதற்கிடையே மகான்கள் தரிசனம் என்பது இயல்பாகவே நடக்கும்.